Breaking News :

Sunday, May 19
.

மார்பக புற்றுநோய் முன்னெச்சரிக்கை அவசியம்!


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கொண்டாடுகிறோம். இந்த மாதம் முழுக்க மார்பக புற்றுநோய் பற்றியும் அதற்கு உள்ள சிகிச்சை முறைகள், நோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக உலகம் முழுக்க விழிப்புணர்வு செய்யப்படுகிறது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை விதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனாலும் நம்முடைய நாட்டில் கூட நோய் முற்றிய நிலையில்தான் பல பெண்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதற்கு சமூக, கலாச்சார தடைகள் காரணமாக இருக்கின்றன. மார்பகத்தில் உள்ள பிரச்னையை எப்படி வெளியே சொல்வது என்ற அசௌகரியத்தாலேயே பல பெண்கள் இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்லும் நிலை உள்ளது.

மார்பக புற்றுநோய் குழந்தை பெற்ற பெண்களுக்கு மட்டும் வரும் என்று பலரும் தவறாக நினைக்கின்றனர். மார்பக புற்றுநோய் எல்லா வயது பெண்களுக்கும் வரலாம். இருப்பினும் 45 - 50 வயதைக் கடந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் அம்மா, பாட்டி, சகோதரிக்கு மார்பக புற்றுநோய் இருந்தால் அக்குடும்பத்தைச் சார்ந்த மரபுவழி தொடர்புடைய மற்ற பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.

மார்பக புற்றுநோய் வர இதுதான் காரணம் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. மரபியல், சுற்றுச்சூழல், ஹார்மோன், ஊட்டச்சத்துக் குறைபாடு என பல காரணங்கள் உள்ளன. எனவே, நமக்கு வராது என்ற மனப்பான்மை கூடாது.

மாதத்துக்கு ஒரு முறையாவது பெண்கள் தங்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளதா என சில மரபியல் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். ஆனால் உறுதியாக வரும், வராது என்று கூற முடியாது. ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது, மகப்பேறு காலத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவது  இவற்றுடன் ஆண்டுக்கு ஒரு முறை மேமோகிராம் பரிசோதனையுடன் கூடிய முழு உடற்பரிசோதனை செய்துகொள்வது போன்றவை மார்பக புற்றுநோய் பாதிப்பிலிருந்து தவிர்க்க, வந்தாலும் தப்பிக்க உதவும்!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.