Breaking News :

Sunday, May 19
.

நோய் வராமல் இருக்க, நம் கைகளை எப்படி கழுவுவது?


'சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்’ என்பது நம் முன்னோர்களின் வாக்கு.
நோயில்லா மக்களைக் கொண்ட நாடே வல்லரசாகும். ஒரு நாட்டின் ஆரோக்கியமே அந்நாட்டின் வளம். அதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்கிறது பழமொழி. செல்வங்களில் எல்லாம் முதன்மையான செல்வம் நோயற்ற வாழ்வுதான்.

இத்தகைய செல்வத்தைப் பெற நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. சுற்றுப்புறச் சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.

அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது நம் கைகளை சுத்தப்படுத்துவது. அதாவது கை கழுவுவது.

கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம்.
ஆம். காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம். இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது.

பழங்காலத்தில் வீட்டின் முன்புறத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள். வெளி இடங்களுக்குச் சென்று வருபவர்கள், அந்த நீரில், கை கால்களை சுத்தம் செய்து பிறகே வீட்டுற்குள் நுழைவார்கள். ஆனால் இந்த பழக்கம் தற்போது மறைந்துபோய்விட்டது. நாம் முன்னோர்களையும் மறந்தோம், அவர்கள் கற்றுத் தந்த நல்ல பழக்க வழக்கங்களையும் அடியோடு மறந்துவிட்டோம்.

இன்று உலக அரங்கில் சுகாதாரத்தை முன்னிறுத்தி சொல்லப்படும் விஷயங்களில் கை கழுவும் முறைதான் முதன்மையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் நாளை உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது.

இந்நாளில் கை கழுவும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மை பற்றியும் உலகம் முழுவதும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு அதாவது 2009 அக்டோபர் 15 அன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழக சுகாதாரத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் 5000 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கை கழுவுவதன் பயன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதுபோல் தமிழகத்தின் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த கை கழுவும் முறையை சரியாக பின்பற்றாமல் பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது வளரும் நாடுகள்தான். நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டுள்ளது. இந்தியாவில், கைகளை ஒழுங்காக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதே காரணத்திற்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

இதனால் வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளில் கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன. இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே அழிக்க முடியும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே.

ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococus Aureus) என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உணவருந்தும் சமயம் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கிறது.

எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்..

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.

மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.

எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.

வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது.

குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.

கைகளை அவசர அவசரமாக 23 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.

கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.

இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம் 60 விழுக்காடு தடுக்கலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.