Breaking News :

Sunday, May 19
.

இந்த பழங்களின் ஜூஸை குடிப்பதால் உடம்புல என்ன மாற்றம் தெரியுமா?


தற்போது மக்களிடையே இயற்கையான முறையில் உடலை சுத்தம் செய்யும் செயல்கள் மிகவும் பிரபலமாகிவிட்டது. தினமும் காலையில் எழுந்ததும் நாம் குடிக்கும் இயற்கை பானம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கவும் உதவுகிறது. அந்த வகையில் காலையில் எழுந்ததும் குடிப்பதற்கு ஏற்ற மிகவும் சிறப்பான ஒரு பானம் தான் ஏபிசி டிடாக்ஸ் பானம்.

 

அது என்ன ஏபிசி என்று நீங்கள் கேட்கலாம். ஏபிசி பானம் என்பது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்றும் கொண்டு தயாரிக்கப்படும் பானமாகும். இந்த மூன்று பொருட்களும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதால், இது உடலை சுத்தப்படுத்தவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள காலையில் குடிக்க ஏற்ற சிறந்த தேர்வாக இருக்கும்.

 

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, ஏபிசி டிடாக்ஸ் டயட் என்பது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்கான திட்டமாகும். இது ஒருவரைப் பொறுத்து ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஒருவரது உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற 4 முக்கிய வழிகள் உள்ளன. கல்லீரல் கொழுப்பில் கரையக்கூடிய நச்சுக்களை நீக்கும், சிறுநீரகம் நீரில் கரையக்கூடிய நச்சுக்களை நீக்கும், குடல் செரிக்கப்படாத நச்சுக்களை அகற்றும் மற்றும் தோல் வளர்சிதை மாற்ற நச்சுக்களை அகற்றும்.

 

ஏபிசி டிடாக்ஸ் பானம் இந்த அனைத்து உறுப்புக்களின் மூலமும் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. இப்போது ஏபிசி டிடாக்ஸ் பானத்தின் நன்மைகளையும், அந்த பானத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதையும் காண்போம்.

 

தேவையான பொருட்கள்:

 

* பெரிய ஆப்பிள் - 1

 

* சிறிய அளவிலான கேரட் - 2

 

* மிகச்சிறிய அளவிலான பீட்ரூட் - 1

 

* எலுமிச்சை சாறு - சிறிது (விருப்பமிருந்தால்)

 

ஆப்பிளின் நன்மைகள்

 

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று சொல்வார்கள். இது உண்மை தான். ஏனெனில் ஆப்பிளில் பல்வேறு முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின்களான ஏ, பி1, பி2, பி6, சி, ஈ மற்றும் கே, ஃபோலேட், நியாசின், ஜிங்க், காப்பர், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதோடு ஆப்பிளில் காணப்படும் டயட்டரி நார்ச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. முக்கியமாக இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், ப்ரீ ராடிக்கல்களிடம் இருந்து உடலில் உள்ள செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

 

பீட்ரூட்டின் நன்மைகள்

 

பீட்ரூட் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின்களான ஏ, சி, பி-காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் காப்பர் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இதில் லைகோபைன் மற்றும் அந்தோசையனின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. அது தான் இந்த காய்கறிக்கு பிங்க்-ஊதா நிறத்தை அளிக்கிறது. அதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும், கெட்ட கொலஸ்ட்ராலின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. முக்கியமாக பீட்ரூட்டில் பீட்டாலைன் என்னும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இது கல்லீரலுக்கு பாதுகாப்பை அளிக்கிறது. மேலும் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உள்ளதால், இது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை எதிர்த்துப் போராடி, அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

 

கேரட்டின் நன்மைகள்

 

கேரட் கண்களுக்கு நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். கேரட்டில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, சி, ஈ மற்றும் கே மற்றும் இதர சத்துக்களான நியாசின், ஃபோலேட், பேண்டோதெனிக் அமிலம், கனிமச்சத்துக்களான பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் செலினியம் போன்றவை நிறைந்துள்ளது. முக்கியமாக கேரட்டில் பீட்டா-கரோட்டீன் உள்ளது. இது உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ சத்தாக மாற்றமடைந்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும் செய்கிறது. வைட்டமின் ஏ சத்து கண்களுக்கு மட்டும் நல்லதல்ல, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது மற்றும் கல்லீரலில் இருந்து பித்த நீர் மற்றும் கொழுப்பைக் குறைக்கிறது. முக்கியமாக பற்கள் சேதமடைவதைத் தடுக்கிறது.

 

செய்முறை:

 

* முதலில் ஆப்பிள், பீட்ரூட், கேரட்டை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

 

* பின் அவற்றின் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

 

* பின்பு அவற்றை பிளெண்டர்/ஜூஸரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

 

* பிறகு வடிகட்டி பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

 

* இறுதியில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சர்க்கரை எதுவும் சேர்க்காமல் குடிக்க வேண்டும்.

 

இப்போது இந்த ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸை தினமும் குடிப்பதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.

 

இந்த ஜூஸில் லுடீன், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஆல்பா போன்றவை உள்ளது. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதோடு இந்த ஜூஸில் ஆப்பிள் உள்ளதால், இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, பல்வேறு நோய்களில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கிறது. முக்கியமாக இந்த பானத்தில் உள்ள அதிகளவிலான கரோட்டினாய்டுகள், கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரிக்க உதவும்.


 

நாம் என்ன சாப்பிடுகிறோமோ அது நமது சருமத்தில் பிரதிபலிக்கும் என்று கூறுவார்கள். ஏபிசி டிடாக்ஸ் பானத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், சரும பிரச்சனைகளான பருக்கள், கரும்புள்ளிகள், கருமையான திட்டுகள் போன்றவற்றில் இருந்து தடுத்து, சருமத்திற்கு பொலிவான தோற்றத்தைக் கொடுக்கிறது. முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் ஏ, ஆன்டி-ஏஜிங் பண்புகளைக் கொண்டது. அதோடு இதில் உள்ள பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்கள் வயதாவதைத் தாமதப்படுத்தும்.

 

இந்த ஜூஸில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள், நரம்பு இணைப்புக்களை மேம்படுத்துவதோடு, எதற்கும் பதில் காணும் திறனை வேகமாக்கும். இதன் விளைவாக அறிவாற்றல் மற்றும் நினைவுக்கூறும் திறன் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், மனதை ஒருமுகப்படுத்தி செயல்படும் திறனை அதிகரிக்கும்.

 

நீங்கள் லேப்டாப், கம்ப்யூட்டர், மொபைல், டிவி போன்றவற்றை அதிகம் பயன்படுத்துபவராயின், இந்த ஜூஸை தினமும் குடியுங்கள். இதனால் அதில் உள்ள வைட்டமின் ஏ சத்தானது, கண் வறட்சி, கண்கள் சோர்வடைவது, பார்வை பிரச்சனைகள் போன்றவற்றைத் தடுக்கும்.

 

நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்

 

இந்த அற்புத பானத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உடலை பல்வேறு தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. தற்போது கொரோனா தொற்று பரவுவதால், இந்த பானத்தை தினமும் குடிப்பதால், நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு, கொரோனா அண்டாமல் தடுக்கலாம்.

 

நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா? எடையைக் குறைக்க வேண்டுமா? அப்படியானால், இந்த பானத்தை தினமும் குடியுங்கள். இதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், எடையைக் குறைக்க உதவி புரியும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.