பாலியல் பிரச்சனைகளுக்கு உதவும் மாதுளை!
இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கங்கள் காரணமாக, விந்தணு குறைபாடு உள்ளிட்ட பல விதமான பாலியல் பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்படுவதை காண முடிகிறது. இதற்கு தீர்வு காண அதிக செலவு பிடித்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளவும் நேரிடுகிறது. செலவுகள் ஒரு புறம் இருக்க, மறு புறம் பக்கவிளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. இதனை தவிர்க்க இயற்கை வைத்தியத்தை நாடுவது சிறந்த தேர்வாக இருக்கும்.
ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பிட்ட சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் அவசியம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, கொழுப்பு சத்து அதிகம் இல்லாத ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டால், பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக செயல்படும். அதில் ஒன்று மாதுளம் பழம். தினமும், குறிப்பாக இரவில் தூங்கும் முன் ஒரு கப் மாதுளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர் .
மாதுளையில் ரெட் ஒயினை விட மூன்று மடங்கு அதிக ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இது சிறந்த பாலியல் வாழ்க்கைக்கு உதவும் என கூறப்படுகிறது.
டெஸ்டோஸ்ட்ரான் என்பது ஆண்களுக்கான பாலியல் ஹார்மோன். உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் சக்தி மாதுளைக்கு உள்ளது. விந்தணு குறைப்பாடு, விறைப்புத்தன்மையை உள்ளிட்ட பிற பிரச்சனைகளுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு காரணமாக இருக்கலாம். மாதுளை டெஸ்டோஸ்ட்ரோன் அளவை அதிகரிக்கும். தினமும் மாதுளைச்சாறு எடுத்து வந்தால் இரு வாரங்களில் டெஸ்டோஸ்ட்ரோன் அளவு 25% அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
மாதுளையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. எனவே உங்கள் மண வாழ்க்கையை மேம்படுத்த விரும்பினால், இரவில் தூங்கும் முன் ஒரு கிண்ணம் மாதுளை சாப்பிட வேண்டும். பாலியல் ஆரோக்கியம் மேம்பட வயாகரா மாத்திரை, சிறந்த தீர்வாக கூறப்படும் நிலையில், அதற்கு இணையாக மாதுளை செயல்படும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.