வாய்ப்புண் வந்தால் ஆபத்தா?
வாய்ப்புண் என்பது பலருக்கும் அடிக்கடி ஏற்படும் ஒரு சாதாரண உடல்நலப் பிரச்சினையாக இருந்தாலும், அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆரம்பத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் போன்ற வாயின் பகுதிகளில் சிறிய கொப்புளங்களாக தோன்றும்.
சில நாட்களில் அவை உடைந்து சிறிய குழிப்புண்களாக மாறி கடும் வலியை ஏற்படுத்தும். இதனால் உணவு சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகரிக்கும். சிலருக்கு கழுத்து நெரிச்சல், காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
வாய்ப்புண் குழந்தைகள் முதல் முதியோர் வரை யாருக்கும் ஏற்படலாம். குறிப்பாக ஊட்டச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு இது அதிகமாகக் காணப்படுகிறது. இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் B6 மற்றும் B12 போன்ற சத்துக்கள் குறைவாக இருந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
அதேபோல் நீரிழிவு நோயாளிகள், அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள், வேலைப்பளு அதிகமாக இருப்பவர்கள் ஆகியோருக்கும் இந்த பிரச்சினை அடிக்கடி ஏற்படலாம்.
சில பழக்கவழக்கங்களும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா பயன்படுத்துதல், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவை வாயின் ஆரோக்கியத்தை பாதித்து புண்களை உருவாக்கலாம். பெண்களிடம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் வாய்ப்புண் ஏற்படுவதற்குக் காரணமாகலாம்.
மேலும் உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை, சில வகை பற்பசைகளின் பாதிப்பு ஆகியவையும் வாய்ப்புண்ணை தூண்டக்கூடும். வாயில் கூர்மையான பற்கள் இருந்தால் அவை கன்னத்தின் உள்ள்புறத்தை குத்தி புண் ஏற்படுத்தும். கவனக்குறைவாக சாப்பிடும்போது கன்னம் கடிபடுவதாலும் வாய்ப்புண் உருவாகலாம்.
சில நேரங்களில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை கிருமிகளின் தாக்கத்தாலும் வாய்ப்புண் ஏற்படலாம். குறிப்பாக Candida albicans என்ற பூஞ்சைக் கிருமி காரணமாக நாக்கில் வெள்ளை படலம் உருவாகி புண் ஏற்படுவது பொதுவாகக் காணப்படுகிறது.
பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு முறையால் மற்றும் வாய்ச் சுத்தத்தைக் கடைப்பிடிப்பதால் தானாகவே குணமாகிவிடும். இருப்பினும் நீண்ட நாட்கள் குணமாகாமல் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் வாய் கொப்பளித்தல், வலி குறைக்கும் களிம்புகள் பயன்படுத்துதல், தேவையான வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல் போன்ற சிகிச்சைகள் வழங்கப்படலாம்.
வாய்ப்புண் வராமல் தடுக்க வாய்ச் சுத்தத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து பற்களை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சத்தான உணவுகள் பால், தயிர், முட்டை, மீன், கீரை, காய்கறிகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வாய்ப்புண் ஏற்படுவதைத் தடுக்கும்.
சிறிய பிரச்சினை என்று அலட்சியப்படுத்தாமல் சரியான கவனம் செலுத்தினால் வாய்ப்புண் பிரச்சினையை எளிதில் கட்டுப்படுத்தலாம்.