தேங்காய் பால் ரசம் செய்வது எப்படி?
தேவை:
தேங்காய் - ஒன்று, ஆமணக்கு எண்ணெய் - சிறிதளவு, கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - தேவையான அளவு, நசுக்கிய பூண்டு - 15 பற்கள், துவரம்பருப்பு - முக்கால் கப், தக்காளி - 6, மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், ரசப்பொடி - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, சமையல் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தக்காளியை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து விழுது எடுக்கவும். இதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். தேங்காயைத் துருவி தண்ணீர் சேர்த்து இரண்டு முறை அரைக்கவும். நன்கு வடிகட்டவும். தேங்காய்ப்பால் அடர்த்தியாக இருக்க வேண்டும். துவரம்பருப்பைச் சிறிது ஆமணக்கு எண்ணெய் சேர்த்து வேகவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் தக்காளி விழுது, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
பச்சை வாசனை போகும்வரை சூடாக்கவும். இதில் வேகவைத்த பருப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொதித்ததும் சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள், ரசப்பொடி சேர்த்துக் கலக்கவும். பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து மூடி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். இறுதியாக மல்லித்தழைகளைச் சேர்க்கவும். சுவையான தேங்காய்ப்பால் ரசம் தயார்.