பெண் குழந்தைகள் பருவமடைந்தவுடன் கொடுக்கும் உணவு!
பெண் குழந்தைகள் பருவமடைந்தவுடன், அவர்களை வீட்டிற்குள் வைத்து, அவரவர் வசதிக்கேற்ப பூப்பு சடங்குகள் செய்வது தென்தமிழகத்தின் பாரம்பரியமான ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
இவ்வாறான பூப்பு சடங்கில், உணவு முக்கியத்துவம் பெறுகிறது. அக்குழந்தைக்கு தினமும் நாட்டுக்கோழி முட்டை, உளுந்து வடை, உளுந்து கஞ்சி, நல்லெண்ணெய், கேழ்வரகு அல்லது அரிசி புட்டு கொடுப்பது நமக்குத் தெரிந்ததுதான்.
பருவமடைந்த பெண்களுக்கு அப்போது ஏற்படும் உடலளவிலான மாற்றங்கள் ஒரு சில நாட்களிலேயே மறைந்துவிடுபவை அல்ல.
அதற்கு அடுத்தடுத்த காலகட்டங்கள்தான் அவர்களின் உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, தொடர்ச்சியான, சீரான மாதவிடாய் சுழற்சிக்குத் தேவையான ஹர்மோன்கள் உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
மேலும், 12 அல்லது 13 வயதில் பெண் குழந்தை பருவமடைந்தால், அவர்களின் உடல் வளர்ச்சி மேலும் வேகமடைந்து முழுமையடைவது 16 அல்லது 18 வயதில்தான். அதன் பிறகு உடல் வளர்ச்சி இருக்காது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளை சடங்கு செய்யும் அத்தனை நாட்களுக்கும் கொடுக்கிறோம்.
சரி நல்லது தான்.
அந்த ஆரம்ப காலத்தில் சிறப்பு உணவு கொடுப்பது போதுமானது என்று விட்டுவிடுகிறோம். அதன்பிறகு அக்குழந்தைகளைப் பற்றியோ அவர்களின் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் மாற்றங்கள், அதற்குத் தேவையான உணவுகள் பற்றியோ எந்த பெற்றோரும் கவனம் கொள்வது கிடையாது.
இனி வரும் காலங்களில் பிற நடுத்தர வயது பெண்களைப் போலவே மாதவிடாய் சுழற்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் கவனமாக இருந்தால் போதும் என்று நினைத்து விடுகிறோம்.
அதனால், சிறப்பு உணவுகளில் கவனம் செலுத்துவது கிடையாது.
ஆனால்,பருவமடைந்த பிறகு வரும் காலங்களில்தான் அப்பெண்ணின் உடலமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
எனவே, பெற்றோர்களே...
உங்கள் பெண் குழந்தை திருமண முடிக்கும் வரையிலும் உங்களின் மேற்பார்வையில், நீங்கள் தயாரித்துக்கொடுக்கும் உணவைதான் சாப்பிடுகிறார்கள் என்பதால், உங்கள் பெண் குழந்தையின் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின்போதும், பருவடைந்தபோது எடுத்துக்கொண்ட அதே அக்கறையையும் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் வயதில் இருக்கும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும், புரதம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைக் கொடுங்கள்.
உளுந்துவடை
உளுந்து களி
உளுந்து கஞ்சி
மீன்
முட்டை
பால்
தயிர்
எள்ளுருண்டை
எள் சோறு
கீரை மசியல்
கீரை சூப்
கலவை கீரை சாதம்
மேல்தோல் நீக்கப்படாத அவல் உணவு
கேழ்வரகு அல்லது கம்பு சேர்த்த கூழ் அல்லது கஞ்சி
பேரீட்சை பாதாம் சேர்த்து அரைத்த பால்
கேழ்வரகுடன் முருங்கை அல்லது வேறு கீரை சேர்த்து அடை
ஏதேனும் ஒரு கீரையுடன் முட்டை சேர்த்த பொரியல்
கெட்டியான பருப்பு
ஏதேனும் ஒரு சுண்டல்
காய்கள் அல்லது கீரை சேர்த்த சாம்பார்
கோழிக்கறி
காய் அல்லது ஏதேனும் அசைவ உணவில் தயாரிக்கப்பட்ட சூப்
புளிப்பு சுவையுள்ள பழங்கள்
தினமும் ஏதேனும் ஒரு பழம்
போதுமான அளவு தண்ணீர்
இந்த உணவுகளை, மாதவிடாய் தொடங்கியதிலிருந்து தொடர்ச்சியாக 5 முதல் 7 நாட்களுக்குக் கொடுக்கலாம்.
இதனால், மாதவிடாய் இரத்தப்போக்கில் இழக்கும் இரத்தம், பிற சத்துக்களை ஈடு செய்துகொள்வதுடன், அந்நேரத்தில் ஏற்படும் இடுப்புவலி, உடல்சோர்வு, மாதவிடாய் முடிந்தபிறகு ஏற்படும் உடல்சோர்வு போன்றவற்றையும் சரிசெய்யலாம்.
மேலும், இவ்வுணவுளிலிருந்து பெறப்படும் சத்துக்கள், மாதவிடாய் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், கருப்பை, சினைப்பை, கருக்குழாய் உள்ளிட்ட மொத்த இனப்பெருக்க மண்டலத்திற்கும் உறுதியளிப்பதுடன், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
இதனால், ஒவ்வொரு மாதமும் சீரான மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதுடன், திருமணத்திற்குப் பிறகான உடலியங்கியல் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு அப்பெண் குழந்தையின் உடல்நலனும் மேம்படுகிறது.
கல்லூரி செல்லும் பெண் குழந்தைகள் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்தான்.
மாதவிடாயின்போது அதிக உப்பு அதிக சர்க்கரையுள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது என்று கூறினாலும், அவற்றைத்தான் வெளியிலிருந்து வாங்கி சாப்பிடுகிறார்கள்.
இந்நிலையை நாம்தான் மாற்ற வேண்டும்.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் சத்துள்ள உணவுகளின் அவசியத்தை அவ்வப்போது எடுத்துக்கூற வேண்டும்.