பனிவரகரிசி சாம்பார் சாதம் செய்வது எப்படி?

proso-millet-sambar-sadham
பனிவரகரிசி சாம்பார் சாதம் செய்வது எப்படி?

Proso millet Sambar Sadham
தேவையானவை:

பனிவரகு - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
புளி - 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கேரட் - 1/4 கப்
நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப்
நறுக்கிய முருங்கைக்காய் - 5 துண்டுகள்
நறுக்கிய முள்ளங்கி - 1/4 கப்
பச்சை பட்டாணி - 1/4 கப்
கத்தரிக்காய் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1.5 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கை
முந்திரிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (உடைத்தது)
வெல்லம் - 1 டீஸ்பூன்
கடுகு உளுந்து - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
1. பனிவரகரிசி மற்றும் துவரம்பருப்பை நன்றாக கழுவி போதுமான நீரில் 4 - 5 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
2. புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்து 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

3. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து சிவந்ததும் சீரகம், கடுகு உளுந்து மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும்.

4. பின் சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

5. பின் நறுக்கிய கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முருங்கைக்காய், பச்சை பட்டாணி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

6. பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து புளிக்கரைசலையும் சேர்த்து கலந்து விடவும்.
7. இப்போது சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கலவை கெட்டியான பின் 5 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

8. அதில் ஊறவைத்த பனிவரகு துவரம்பருப்பு கலவையை சேர்த்து கலந்து சிறிது பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும். இப்போது ருசி பார்த்து தேவைப்பட்டால் உப்பு காரம் புளிப்பு சேர்த்துக் கொள்ளவும்.

9. பின் மூடிவைத்து மிதமான சூட்டில் 3 விசில் வந்ததும் 5 நிமிடங்கள் குறைவான சூட்டில் வைத்து இறக்கவும்.
10. குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடக்கியதும் ஒரு கை பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது பார்பதற்கு தண்ணீராக இருப்பது போல இருக்கும் ஆனால் நேரமாக நேரமாக கெட்டியாக மாறும்.

சுவையான ஆரோக்கியமான பனிவரகு சாம்பார் சாதம் தயார்.