Thalavara மலையாளம் பட விமர்சனம்
ஓர் இயல்பான ஃபீல் குட் திரைப்படம்.
தன்னை அவலட்சணமாக உணரும் ஓர் இளைஞனை, உத்வேகப்படுத்தி முன்னேற வைக்கும் '7ஜி ரெயின்போ காலனி' வகையறாதான்.
ஆனால் படம் முழுவதும் பரவிக்கிடக்கும் இயல்பான நகைச்சுவையும் எமோஷனும் இந்தப் படத்தை ரசித்துப் பார்க்க வைக்கிறது.
பாக்யராஜின் 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தின் காட்சிகளை, ஆரம்பத்தில் நினைவுப்படுத்தினாலும் போகப் போக வேறு சுவாரசியமான டிராக்கில் பயணிக்கிறது.
இப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தை சலிப்பு ஏற்படாமல் முழுதாக பார்த்து முடிப்பதே சாதனை என்பது போல் ஆகி விட்டது. அந்தளவிற்கு ஒரே மாதிரியான டெம்ப்ளேட்கள்.
இதுவும் அப்படித்தான் என்றாலும் முழு திரைப்படத்தையும் ஒன்றி பார்க்க முடிகிறது.
எமோஷனல் கனெக்ட் என்பது இன்றியமையாத அம்சம்.
அவலட்சணம் காரணமாக தாழ்வுணர்ச்சியுடன் உணரும் ஹீரோ, பொதுவெளியில் ஹீரோயின் கட்டிப் பிடிக்க முயலும் போதெல்லாம் சங்கடத்துடன் தவிர்க்கிறான்.
ஆனால் ஓர் உணர்ச்சிகரமான தருணத்தில் அவனே பாய்ந்து சென்று அவளை கட்டியணைத்துக் கொள்கிறான்.
இந்த மாதிரி சின்னச் சின்ன டிரீட்மெண்ட்களில் இயக்குநர் 'அட' போட வைக்கிறார்.
ஹீரோ அர்ஜூன் அசோகன், ஹீரோயின் ரேவதி சர்மா, ஹீரோவின் நண்பர்கள் என்று பல இயல்பான பாத்திரங்கள்.
தமிழில் ஓவர்ஆக்ட் செய்ய வைக்கப்படும் தேவதர்ஷிணி, இந்தப் படத்தில் இயல்பான அம்மாவாக வருகிறார்.
இப்போது வரும் மலையாளத் திரைப்படங்களில் தமிழ் சினிமா reference காட்சிகள் நிறைய காணக் கிடைக்கின்றன. இரு மாநில பார்வையாளர்களையும் கவரும் முயற்சி போல. அந்த வகையில் தமிழ் பேசும் ஹீரோயின் அழகு.
அஜித் நடித்த 'முகவரி' திரைப்படம் போல யதார்த்தமான கிளைமாக்ஸூடன் படத்தை முடித்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றினாலும் இது முடிந்த விதமும் அழகாகத்தான் இருக்கிறது.
நிச்சயம் பார்க்கலாம். பிரைம் வீடியோ படத்தின் தலைப்பிற்கு 'தலைவிதி' என்று உத்தேசமான பொருள். அது சரியில்லையே என்று உங்களை இந்தப் படம் அனத்த வைக்காது.
Thalavara movie