‘அஜித்தை வச்சக்கண்ணு வாங்காம பார்ப்பேன்’- நடிகை மந்த்ரா
ரெட்டை ஜடை வயசு’ திரைப்படத்தின் போது படப்பிடிப்பில் அஜித்தை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போது அவர் அவ்வளவு அழகாக இருப்பார் என்றார் நடிகை மந்த்ரா!
90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மந்த்ரா. அஜித், விஜய் என அந்தஸ்து மிகுந்த நட்சத்திரங்களுடன் நடித்த இவர், திருமணத்திற்கு பின்னர் சினிமா துறையில் இருந்து விலகி, பர்சனல் லைஃபில் கவனம் செலுத்தினார்.
தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் அண்மையில் குமுதம் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அஜித் மீது தனக்கு இருந்த ஈர்ப்பு குறித்து மனம் திறந்து பேசினார்.
இது குறித்து அவர் பேசும் போது, “பொதுவாகவே நான் மிகவும் சைலன்ட் டைப். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னுடன், என்னுடைய அப்பா, அம்மா இரண்டு பேரும் எப்போதும் இருப்பார்கள். சீனை நடித்து முடித்துவிட்டு, அவர்களது பக்கத்தில் வந்து உட்கார்ந்து விடுவேன். ‘ரெட்டை ஜடை வயசு’ திரைப்படத்தின் போது படப்பிடிப்பில் அஜித்தை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போது அவர் அவ்வளவு அழகாக இருப்பார்.
‘ஆசை’ படத்தை பார்த்தால் உங்களுக்கு தெரியும். அஜித் அப்போது எவ்வளவு அழகாக இருந்தார் என்று... நான் அஜித்தை பார்த்துக் கொண்டே இருப்பதை ஒருமுறை அம்மா பார்த்துவிட்டார். உடனே அவர் என்ன அஜித்தை பார்த்துக் கொண்டே இருக்கிறாய் என்று கேட்டார். இதையடுத்து நான் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே என்று சமாளித்து விட்டேன். அந்த இடத்தில் வேறு என்ன சொல்ல முடியும் சொல்லுங்கள்.
அவரை எனக்கு மிக மிக பிடிக்கும். உண்மையில், அஜித்திடம் நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும். முதலில் என்னிடம் இதை சொல்லும் பொழுது, நானும் பெரிதாக நம்பவில்லை. நானும் அஜித்தும் விஜிபி பீச்சில் ‘தகதிமிதா’ பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தோம். அந்த பாடலில் மிகவும் பயங்கரமாக டான்ஸ் ஆட வேண்டும்.
ஆனால், அஜித்திற்கு அப்போது டான்ஸ் கொஞ்சம் கடினமானதாகவே இருந்தது. பாடலுக்கான லைட்டிங்கை தொழிலாளர்கள் செட் செய்து கொண்டிருக்கும் போது, அவர் மண்ணில் ஏதோ எழுதினார். அப்போது அவர் என்னிடம் ஏதோ சொன்னார்.
அதற்கு, நான் பயங்கரமாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டே இருந்தேன். ஆனால், அவர் என்ன சொன்னார் என்பதை என்னால் தற்போது ஞாபகப்படுத்த முடியவில்லை. உண்மையில் அவர் அவ்வளவு நகைச்சுவையான நபர் என்பது பெரும்பான்மையான நபர்களுக்கு தெரியாது. இப்போதும் அவர் அவருக்கு நெருக்கமான நபர்களிடம் மிகவும் நகைச்சுவை உணர்வோடுதான் இருக்கிறார். ஆனால், அது யார் யார் என்பது எனக்கு தெரியாது.
‘ராஜா’ படத்தில் ‘வத்தலகுண்டு’ பாட்டில் நான் நடிப்பதற்கும் அஜித் தான் காரணம். ஆம், ‘ரெட்டை ஜடை வயசு’ படத்திற்கு பிறகு நானும் அவரும் இணைந்து நடிக்கவே இல்லை.
இந்த நிலையில்தான், அந்த பாடலில் நடிக்க நான் ஒத்துக்கொண்டேன். அப்போதுதான் அவருக்கு கல்யாணம் ஆகி இருந்தது. அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அவரது மனைவி ஷாலினியும் வந்திருந்தார்.
அப்போது இருந்த அஜித்திடம் முன்னால் இருந்த நகைச்சுவை உணர்வை என்னால் பார்க்க முடியவில்லை. முற்றிலும் அமைதியாக மாறிவிட்டார்” என்றார் மந்த்ரா.