மகள் மீராவின் நினைவாக நடிகர் விஜய் ஆண்டனி செய்த செயல்... மனைவி உருக்கம்!.
‘டேர் டெவில்’ அஜித்துக்கு வில்லனாகும் சூப்பர் ஸ்டார்!
அஜித் குமாரின் ‘டேர் டெவில்’ படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா இதனை உறுதிப்படுத்தி உள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுடனான உரையாடாலில் அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “இது உண்மைதான்; படத்தில் வலிமையான வில்லன் கதாபாத்திரம் ஒன்று உள்ளது. அதற்காக பல பெயர்களை விவாதித்தோம்.
அஜித்துக்கு சிவ ராஜ்குமார் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அதனால் அவரிடம் கேட்க முடிவு செய்தோம். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் கதையை அவரிடம் விவரித்தார். அவரும் சாதகமான பதிலைச் சொல்லி இருக்கிறார். அதன் பின்னர்தான் சிவ ராஜ்குமார் படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டது.” என்றார்.
படப்பிடிப்பு குறித்த பகிர்ந்த அவர், “தற்போது இரவு நேர படப்பிடிப்பு நடந்து வருகிறது. படக்குழு ஒரு சண்டைக் காட்சியை முடித்திருக்கிறது. இந்தப் படப்பிடிப்பில் பிரபு, பார்த்திபன், ஸ்ரீலீலா பங்கேற்று வருகிறார்கள். டிசம்பர் வரை இப்படப்பிடிப்பு தொடரும். நவம்பர் 17 அல்லது 18 அன்று சிவ ராஜ்குமார் படப்பிடிப்பில் பங்கேற்கலாம்” என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
சிவராஜ்குமார் சமீபத்தில் ‘கேப்டன் மில்லர்’, ‘ஜெயிலர்’, ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வந்த அஜித் குமார், ஆதிக் ரவிசந்திரனுடன் இரண்டாவது இணைந்து ‘டேர் டெவில்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை நவம்பர் 2 அன்று சென்னையில் நடந்தது. அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நவம்பர் 12-ல் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தில் அஜித்துடன், ஸ்ரீலீலா, பிரபு, பார்த்திபன், சுனில், உன்னி முகுந்தன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, ஒளிப்பதிவை அபிநந்தன் ராமானுஜமும், படத்தொகுப்பை விஜய் வேலுகுட்டியும் மேற்கொள்கின்றனர்.