செமிகான் 2.0 இணையதளம் பயன்பாடு : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் .
'ஜெய்ஹிந்த்'படத்தில் மிரட்டிய வில்லன் விமல் ராஜ்!
அர்ஜுன், ரஞ்சிதா நடிப்பில் 1994-ல் வெளியான ஜெய்ஹிந்த் திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு அதில் பயங்கரவாதக் குழுவின் தலைவனாக மிரட்டலான தோற்றத்திலும் நடிப்பிலும் கவனம் ஈர்த்த விமல் ராஜை நினைவிருக்கலாம். படத்தின் தொடக்கத்திலேயே அறிமுகமாகும் அந்த வில்லன் கதாபாத்திரத்தில் தனது உடல்மொழியாலும் தோற்றத்தாலும் மிரட்டியிருப்பார். ஆரம்பத்தில் திரைத்துறையில் நடனக் கலைஞராகப் பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் அர்ஜுனின் வாய்ப்பால் நடிகராகவும் மாறினார். குறிப்பாக ஜெய்ஹிந்த் படத்தின் மூலம் பலருக்கும் பரிச்சயமான முகமாகிய விமல் ராஜ் யார்?
விமல் ராஜ் தனது திரைப்பயணத்தை 1982-ஆம் ஆண்டு சுந்தரம் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராகத் தொடங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. பரதநாட்டியப் பயிற்சியும் பெற்ற இவர், முன்னணி நடிகர்களின் படங்களில் நடனக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை, அக்னி நட்சத்திரம் படத்தின் “ராஜா ராஜாதி ராஜா” பாடல் உள்ளிட்ட படைப்புகளில் நடனக் கலைஞராகப் பங்கேற்றுள்ளார். பின்னர் தருண் மாஸ்டரிடமும் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றி இந்தி திரைப்படங்களிலும் நடனத்துறையில் தனது அனுபவத்தை விரிவுபடுத்தியுள்ளார். நடனக் கலைஞராக மட்டுமல்லாமல், நடன அமைப்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
பிரதாப் திரைப்படத்தில் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றியபோது, அப்படத்தின் நாயகனான அர்ஜுனுக்கு விமல் ராஜின் திறமை அறிமுகமாகியுள்ளது. அதன் பின்னர் தனது அடுத்த படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பளிக்க விரும்புவதாக அர்ஜுன் தெரிவித்ததையடுத்து, ஜெய்ஹிந்த் படத்தில் பயங்கரவாதக் குழுவின் தலைவனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த பிக் பாஸ் திரைப்படத்திலும், மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களிலும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக சுரேஷ் கோபி, மஞ்சு வாரியர், பிஜு மேனன் நடித்த பத்ரம் திரைப்படமும் அவரது படப் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தமிழில் வாணி ராணி தொலைக்காட்சித் தொடரிலும், மலையாளத் தொடர்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அளித்த நேர்காணல் ஒன்றில் தனது திரைப்பயணத்தின் பல சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். நடனக் கலைஞராகத் திரைத்துறைக்குள் நுழைந்த ஆரம்பகாலப் போராட்டங்கள், நடனத்துறையில் கிடைத்த அனுபவங்கள், தனியாக நடன அமைப்புப் பணிகளை மேற்கொண்டது, அர்ஜுன் மூலம் நடிகராகக் கிடைத்த வாய்ப்பு எனப் பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார். திரையில் வில்லனாக மிரட்டிய ஒருவரின் பின்னால் இத்தனை ஆண்டுகால நடனப் பயணமும் உழைப்பும் இருக்கிறது என்பதை அவரது பேட்டி உணர்த்துகிறது.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் அந்த நேர்காணலில் மனம் திறந்துள்ளார். தனது மனைவி மறைந்துவிட்டதாகவும், அவரைப் பிரிந்த துயரையும் நினைவுகளையும் இன்றளவும் சுமந்து வருவதாகவும் பகிர்ந்துகொண்டுள்ளார். அவருக்கு ஒரு மகனும் உள்ளார். திரையில் பலரையும் அச்சுறுத்திய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் தனது குடும்ப நினைவுகளையும் இழப்பையும் மனதில் சுமந்து வாழும் மனிதராக அவர் பேசியிருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், ஜெய்ஹிந்த் திரைப்படத்தைப் பார்க்காதவர்களுக்கும் “ஊத்தட்டுமா ஊத்தட்டுமா” பாடல் காட்சி மூலம் விமல் ராஜின் முகம் நிச்சயம் பரிச்சயமாகியிருக்கும். அவரது உயரமும் கம்பீரமான உடலமைப்பும், மிரட்டலான தோற்றமும் ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கும். அதனால்தான், இவரைப் போன்ற தோற்றமும் திரை ஆளுமையும் கொண்ட நடிகரை இன்னும் பல திரைப்படங்களில் வில்லனாகப் பயன்படுத்தியிருக்கலாமே என்ற கருத்தை ரசிகர்கள் பலரும் வெளிப்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது.