சண்டக்காரி - Sandakari - Movie Review

sandakari-movie-review
சண்டக்காரி - Sandakari - Movie Review

லண்டனில் பிரபல நிறுவனத்தில் உயர் பதவியில் பணிபுரியும் மாயா கதாபாத்திரத்தில் ஸ்ரேயா. கண்டிப்பான அணுகுமுறையுடன் இருக்கும் அவரிடம் உதவியாளராக வேலைக்குச் சேருகிறார் விமல். மாயாவின் கீழ் பணியாற்றிய பலரும் அவரது கடுமையான குணத்தை சமாளிக்க முடியாமல் வேலையை விட்டு வெளியேறிய நிலையில், விமல் மட்டும் தொடர்ந்து அங்கே பணியாற்றுகிறார்.

இந்த இருவருக்கும் இடையே உருவாகும் உறவு, பின்னர் காதலாக மாறுகிறதா? அவரை சொந்த ஊருக்கு அழைத்து வரும் விமலின் திட்டம் என்ன ஆனது? ஆரம்பத்தில் அப்பாவியாகத் தெரியும் விமல், பின்னர் வேறு கோணத்தில் செயல்படத் தொடங்குவது ஏன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

விமலின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பை மீண்டும் பார்க்க முடிவது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஸ்ரேயா தனது மாயா கதாபாத்திரத்தை ஸ்டைலான தோற்றத்துடனும், தனக்கே உரிய நடிப்பு பாணியுடனும் கையாண்டிருக்கிறார். குறிப்பாக படத்தின் பல இடங்களில் ஸ்ரேயாவின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. விமலின் தந்தையாக பிரபு, பாட்டியாக கே.ஆர். விஜயா, தாயாக உமா பத்மநாபன் உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். வில்லன் கதாபாத்திரத்தில் தேவ் கில் நடித்துள்ளார்.

விமலின் இயல்பான, ஜாலியான நடிப்பு. ஸ்ரேயாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ், பிரபு, கே.ஆர். விஜயா உள்ளிட்ட மூத்த நடிகர்களின் பங்களிப்பு, அம்ரிஷ் இசையில் சில ரசிக்க வைக்கும் பாடல்கள், லண்டன் மற்றும் கிராமப்புற பின்னணியில் அமைந்த காட்சிகள் ஆகியவை படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட படம் என்பதால், ‘சண்டக்காரி’யில் அந்தக் காலகட்டத்தின் கமர்ஷியல் சினிமா பாணி அதிகமாகத் தெரிகிறது. விமலின் இயல்பான நடிப்பும் ஸ்ரேயாவின் கதாபாத்திரமும் படத்திற்கு சில சுவாரஸ்யமான தருணங்களை வழங்கினாலும், திரைக்கதையின் பலவீனம் ஒட்டுமொத்த அனுபவத்தை பாதிக்கிறது. விமல் மற்றும் ஸ்ரேயாவின் ரசிகர்களுக்கு ஒரு முறை பார்க்கக்கூடிய படமாக ‘சண்டக்காரி’ அமைந்துள்ளது