மொத ராத்திரி Movie Review

mothanrathiri-movie-review
மொத ராத்திரி Movie Review

பிரம்மாதமான ஊரக(Rural) கதை.

இயக்குனருக்கு இது முதல் படம் என்பதே ஆச்சர்யம். இயக்கத்தில் நல்ல அனுபவம் தெரிகிறது. 24 மணி நேரத்திற்குள் நடக்கின்ற கதையை மிக நேர்த்தியான சம்பவங்களாகக் கோர்த்து ஒவ்வொருவரின் வாழ்க்கையின் சித்திரத்தையே கண்முன் காட்டிவிடுகிறார்.

ஒரு திருமணம், திருமணத்தில் மாப்பிள்ளைக்கும் விருப்பமில்லை, பொண்ணுக்கும் விருப்பமில்லை. இருவருக்கும் அவரவர் பக்க நியாயங்கள் இருக்கின்றன. இரண்டு குடும்பத்திற்கும் தத்தமது பிள்ளைகளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது தெரியும். இரண்டு குடும்பங்களும் "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்" என்பதற்கிணங்க ஆளுக்கொரு ரகசியத்தை மறைக்கிறார்கள். ரகசியம் அம்பலமாகிய பிறகு நடந்தது என்ன!

எளிமையான ஒரு வரிக் கதையை அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, நிலப்பரப்பை மையமாக வைத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அட்டகாசமாக எழுதி இருக்கிறார் இயக்குனர். வசனங்களில் எல்லாம் வட்டார மொழிவழக்கு தெறிக்கிறது.

திரைப்படத்திற்குள் ஓர் இயல்புத்தன்மை தடம்மாறாமல் இறுதி வரைக்கும் இருந்தது. நாமே ஒரு சம்பவத்தை வேடிக்கைப் பார்க்கிறோம் என்பதான உணர்வு, அதற்கு காரணம் அத்தனை பேரின் நடிப்பு. அதிலும் நாயகனின் அக்காவாக ஒருவர் வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே அவர் ராஜ்ஜியம்தான். அதே போல நாயகியின் சித்தியாக வருபவர்.

தனக்கொரு லட்சியக்கனவு இருந்ததை சித்தி சொல்கின்ற இடம், நிறைய பெண்களால் தங்களைப் பொருத்திக் கொள்ளக்கூடியது. ஆசைகளையும் கனவுகளையும் துறந்துவிட்டு துறக்க நிர்பந்திக்கப்பட்டு வாழ்கின்ற வாழ்க்கையில் முந்தைய கனவுகளைப் பற்றி பேச நேரும்போது கண்களில் பொங்கிய ஆர்வமும் நிறைவேறாமல் போய்விட்ட வலியுமாக அவர் சொல்லச் சொல்ல அந்தக் கதாபாத்திரம் அதன் உச்ச தருணத்தை எட்டிவிடுகிறது.

இறுதிக் காட்சியில் நாயகனிடம் நாயகி அழுதுகொண்டே புலம்புகின்ற இடமும் அப்படியானதே!

நாயகன் ரிஷிகாந்த் மிக இயல்பாக நடிக்கிறார். இந்தக் கதைக்கு சாலப் பொருந்துகிறார். ஒரு ரஜினிகாந்த் தன்மை அவரிடம் இருக்கிறது. அதுவும் உறுத்தலின்றி இருக்கிறது என்பதால் கேள்விகளில்லை.

தலைப்பிற்கும் படத்திற்கும் பெரிதாக சம்பந்தம் ஒன்றும் இல்லை. எந்த தலைப்பை வைத்திருந்தாலும் இந்தப் படம் பெயர் வாங்கிவிடும். அதற்குரிய உழைப்பு படத்திற்குள் இருக்கிறது.

சிரித்து, ரசித்து, யோசித்து வர உகந்த திரைப்படம்.

நல்வரவு, இயக்குனர் ராஜா கருப்பசாமி.