உணர்ச்சிகள் A படமா? A1 படமா?

unarchigal-kamal-movie
உணர்ச்சிகள் A படமா? A1 படமா?

நான் வீட்டிலிருந்து ஸ்கூல் போகும் சாலையில் ஒரு பெரிய சுவற்றில் மட்டும் சினிமா வால் போஸ்டர் ஒட்டி இருப்பார்கள் . அந்த சுவரில்தான் எங்கள் பகுதிகளில் ஓடும் படங்களை பற்றி தெரிந்து கொள்வோம் . அப்படி பள்ளிக்கு செல்லும்போது பார்த்தும் மனசு பட படத்த" பட போஸ்டர்தான் "உணர்ச்சிகள் . அப்போது அது மறு வெளியீடாகதான் இருந்திருக்க வேண்டும் .

அந்த படத்தை ஏதோ ஒரு பலான' பட ரீதியில் போஸ்டரை பார்த்து கடந்து செல்லும் மக்கள் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டார்கள் . ஆனால் அந்த படம் சில வருடங்கள் கழித்து வந்து இருந்தால் பெருமளவு பேசப்பட்டு இருக்கும் என்று எவரும் அறியவில்லை . அப்போது வீடியும் (Venereal disease (VD)) எஸ்டிடியும் (sexually transmitted infection disease (STD) சேர்ந்து பெற்ற செல்லப்பிள்ளை எய்ட்ஸ் (AIDS) பூமியில் பிறந்திருக்கவில்லை .

பாலியல் ரீதியாகப் பரவும் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கதையை ஆபாசம் என்ற முலாம் பூசாமல் 'உணர்ச்சிகள் என்ற பெயரில் 1976-ல் திரைக்கு வந்தது. இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கவிருந்த கமல், தனது நண்பன் ஆர் சி சக்தியுடன் கதாசிரியராக இணைந்து உதவி இயக்குனராகவும் கை கோர்த்து இருக்கிறார் .

கதைப்படி முத்து என்ற #கமலஹாசன் பரமக்குடி பக்கத்தில் ஒரு கிராமத்தில் வேலை செய்யுற 18 வயது அப்பாவி இளைஞன். அவனது பண்ணையார் முதலாளி எஸ் வி ராமதாஸ் சகோதரியான (எல். காஞ்சனா) ஒரு விதவையால் அவன் பாலியல் ரீதியாக உபயோகம் ஆகிறான் . சிகப்பு ரோஜாக்கள் படத்தில் பிளாஷ் பேக்கில் சின்ன வயசு கமலுக்கு நடக்குமே, அதேபோல் பாலியல் தொல்லைகள் மூக்கும் முழியுமாக இருக்கும் இந்த கமலுக்கும் நடக்கிறது. ஆனால் இந்த விதவை பெண் வாழ விரும்பி ஓடிப்போக அவனை கேட்க அந்த அப்பாவி பயப்படுகிறான் .

அத்தோடு ஊரைவிட்டு ஓடி போக எத்தனித்த விஷயம் குடும்ப கௌரவம் பரம்பரை பெருமை பேசும் பண்ணையார் ராமதாஸ் காதுக்கு போக ஊரைவிட்டு கமல் எஸ்கேப் ஆகிவிடுகிறார் . ஆள் அரவமற்ற நிலையில் இருக்கும் அப்போதைய எழும்பூர் ஸ்டேஷனை வந்தடைகிறார் .

சென்னையில் ஒரு பணக்கார நடுத்தர வயது பெண்மணி ( லலிதாஸ்ரீ ) காம வேட்டைக்கு மீண்டும் பலியாகி பின்னர் ஒரு மேற்படி " லாட்ஜில் ரூம் பாயாக வேலைக்கு சேர்கிறார் . அங்கு மரகதம் (ஸ்ரீவித்யா ) என்ற ஒரு பாலியல் தொழிலாளியைச் சந்திக்க அவளுடன் நெருக்கமாகிறான் . ஆனால் அவளோ சகோதரத்துவத்துடன் இவனிடம் பழகுகிறாள் .

கடந்த அனுபவத்தால் பாலியலில் மீது ஈர்ப்பு மேலோங்க பல இடங்களில் பல பெண்களிடம் உறவு கொள்ள முத்து ஒரு கட்டத்தில் பாலியல் நோயால் பாதிக்கப்படுகிறான். இறுதியில் வாழும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக தன் இளம் வயதிலேயே இறந்தும் விடுகிறான்.

மரகதமாக வரும் ஸ்ரீவித்யாவின் நடிப்பு அற்புதம் . அவர் பேசும் வசனங்கள் அதி அற்புதம் . படத்தில் வழக்கம் போல் "எஸ் பாஸ் " என்று மட்டும் சொல்லி விட்டு போகாமல் படம் முழுக்க வரும் எஸ் வி ராமதாஸை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது . அவர் மனைவியாக சந்திரகாந்தா .

ராமதாஸ் நண்பனாக கே .கோபாலகிருஷ்ணன் . துரோகம் செய்யும் மனைவியிடம் பாசத்தை பொழியும் இந்த அப்பாவி கேரக்டரை பார்க்கும்போது சிரிப்பும் பரிதாபமும் சம விகிதத்தில் வருகிறது . அவர்களை மன்னித்து மீண்டும் தப்பு செய்ய ஒரு ஆஃபர் தரும்போது பரிதாபம் குபீர் சிரிப்பாக போய் விடுகிறது . மேஜர் சுந்தராஜன் ஒரு டாக்டராக வருகிறார் .

அந்த எழுபதுகளில் இப்படி ஒரு கதையை யோசித்து அதை படமாக்க எண்ணியதற்கே மனமுவந்து கமலையும் ஆர் சி சக்தியையும் பாராட்டலாம் . இந்த படத்திற்கு உணர்ச்சிகள்' என்ற தலைப்பை தவிர வேறு பொருத்தமான தலைப்பு கிடையாது . இந்த தலைப்பை பரிசீலித்தது உலக நாயகன் தானாம் !

இந்த படத்தை மலையாளத்தில் ராசலீலா என்று எடுத்த வேகத்தில் படத்தை முடித்து 1975 ஆம் ஆண்டு இந்த உணர்ச்சிகள் படத்திற்கு முன்பே வெளியாகி வெற்றியும் பெற்றது திரையுலக ஆச்சர்யம் . இந்த படம் எடுக்க நான்கு ஆண்டுகள் வரை ஆனது என்று சொல்லப்படுகிறது . படத்தில் கமலின் சிகை அலங்காரமும் மீசை வேறுபாடும் இதை நமக்கு உணர்த்துகிறது .

ஆனால் ராசலீலா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளில் வெற்றி பெற்றது . மலையாள படத்திற்கு சலில் சௌத்ரி இசையமைத்துள்ளார் . தமிழ் இசை ஷியாம் . சங்கரன் நாயர் இயக்கிய இப்படம்தான் ஜெயசுதாவிற்கு முதல் மலையாள படம் .

அந்த விதவை வேடத்தில் ஜெயசுதாதான் நடித்து இருப்பார் என்று தெரிகிறது . உடன் எம்.ஜி. சோமன், பஹதூர், , கனகதுர்கா ,மணிமாலா , ராஜஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர் . *தெரிந்தால் யார் யார் எந்த கேரக்டரில் நடித்தனர் என்பதை கமெண்ட் செக்சனில் சொல்லவும் . ஏனென்றால் அசல் படத்திற்கு முன்பே வெளியான மலையாள திரைப்படமான ராசலீலா, தற்போது எந்தவொரு முக்கிய ஓடிடி தளத்திலும் கிடையாது .

படத்தில் நடிகர் கோபாலகிருஷ்ணன் ஒரு டைலாக் சொல்லுவார் , "உலகத்துல மூணு விதமான யோக்கியனனுங்கதான் இருக்காங்க .. ஒருத்தன் தவறு செய்ய தெரியாத யோக்கியன் , தவறு செய்ய முடியாத யோக்கியன் , தவறு செய்ய பயந்த யோக்கியன் ."

அதுமாதிரி 'சூழ்நிலையில் தவறு செய்ய எண்ணும் யோக்கியருக்கு இந்த படம் ஒரு பாடம் .