ஹீரோ மடியில் உட்கார மாட்டேன் - நடிகை சுஹாசினி

actress-suhasini-biography
ஹீரோ மடியில் உட்கார மாட்டேன் - நடிகை சுஹாசினி

80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுஹாசினி. அழகு, இயல்பான நடிப்பு என்பதைத் தாண்டி தனது கதாபாத்திரங்கள் மற்றும் படப்பிடிப்பு காட்சிகள் குறித்தும் ஆரம்ப காலத்திலேயே தெளிவான முடிவுகளை எடுத்த நடிகையாக இருந்திருக்கிறார். இன்றைக்கு ஒரு நடிகை தனக்கு பிடிக்காத காட்சியை மாற்றச் சொல்வது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் 1980களின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் அல்லது நடன இயக்குநர் கூறியதை ஒரு இளம் நடிகை மறுப்பது அவ்வளவு எளிதான விஷயமாக இருக்கவில்லை.

1980ஆம் ஆண்டு ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சுஹாசினி, அடுத்தடுத்த படங்களில் நடித்து வேகமாக பிரபலமாகி வந்தார். அப்படி 1981ஆம் ஆண்டு ஒரு படப்பிடிப்பில் காதல் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர். பூங்காவில் அமர்ந்திருக்கும் கதாநாயகனின் மடியில் சுஹாசினி அமர வேண்டும் என்பதுதான் அந்த காட்சியின் ஒரு பகுதி. ஆனால் காட்சி குறித்து தெரிந்தவுடனேயே அதை செய்ய முடியாது என்று சுஹாசினி மறுத்துவிட்டாராம்.

“இது இந்தியா... 1981ஆம் ஆண்டு. ஒரு பூங்காவில் ஒரு பெண் ஆணின் மடியில் இப்படி அமர்ந்திருப்பது இயல்பாக இருக்காது. அதனால் நான் அப்படி நடிக்க மாட்டேன்” என்று படக்குழுவிடம் நேரடியாக கூறியதாக சுஹாசினியே பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைவுகூர்ந்துள்ளார். நடிகையாக வந்த ஆரம்ப காலத்திலேயே இப்படியொரு முடிவை அவர் எடுத்தது அங்கிருந்தவர்களையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

ஆனால் பிரச்சினை அத்துடன் முடிந்துவிடவில்லை. அதே காட்சியில் ஹீரோ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஐஸ்கிரீமை அவர் சுஹாசினிக்கும் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கும் சுஹாசினி உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். “அவர் சாப்பிட்ட அதே ஐஸ்கிரீமை நான் சாப்பிட மாட்டேன். எனக்கு தனியாக இன்னொரு ஐஸ்கிரீம் கொண்டு வாருங்கள்; காட்சியை மாற்றுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதைக் கேட்ட நடன இயக்குநருக்கே பெரிய அதிர்ச்சி ஏற்பட்டதாக சுஹாசினி தெரிவித்துள்ளார். காரணம் அன்றைய காலகட்டத்தில் படப்பிடிப்பில் ஒரு நடிகை “இந்தக் காட்சியை செய்ய மாட்டேன்” என்று கூறுவதையே பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம். ஆனால் “ஒரு ஐஸ்கிரீமை கூட நான் வேண்டாம் என்று சொல்லக்கூடாதா?” என்று கேள்வி எழுப்பிய சுஹாசினி தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இறுதியில் அவர் விரும்பியபடி காட்சியிலும் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட பிரச்சினைகளை தனியாக எதிர்கொள்வது கடினம் என்பதையும் சுஹாசினி அப்போதே புரிந்து வைத்திருந்தார். அதனால் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு ஆதரவாக பேசக்கூடிய ஒருவரையாவது முதலில் கண்டுபிடித்துக் கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். “இந்த மாதிரியான போராட்டங்களை தனியாக வெல்ல முடியாது” என்பதே அவரது கருத்தாக இருந்திருக்கிறது. நடிகையாக இருந்தபோதும் தனக்கு எது சரி, எது தவறு என்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இன்னொரு படப்பிடிப்பில் பாடல் காட்சியில் நடிக்க சென்றபோது, படமாக்கப்படவிருந்த பாடலின் வரிகளை கேட்ட சுஹாசினிக்கு அது பிடிக்கவில்லையாம். அந்த வரிகளில் நடிக்க விருப்பமில்லை என்று முடிவு செய்த அவர், காரில் இருந்து கீழே இறங்கவே மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பாடல் காட்சியை படமாக்க படக்குழு தயாராக இருந்த நிலையிலும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த அந்த அளவுக்கு உறுதியாக இருந்துள்ளார்.

சுஹாசினியின் இந்த குணம் திரையுலகிலும் பிரபலமாகிவிட்டதாக தெரிகிறது. பின்னாளில் நடிகை ஷோபனாவும் ஒரு படப்பிடிப்பில் தனக்கு பிடிக்காத காட்சியை செய்ய மறுத்திருக்கிறார். அப்போது அந்த இயக்குநர் ஷோபனாவிடம், “நீ என்ன சுஹாசினியா?” என்று கேட்டதாக சுஹாசினியே பகிர்ந்துள்ளார். இதைக் கேட்ட ஷோபனா பின்னர் சுஹாசினியிடம் வந்து, “உங்களைப் பற்றி இயக்குநர்கள் ஏன் இப்படிக் கேட்கிறார்கள்?” என்று விசாரித்திருக்கிறார்.

அதற்கு சுஹாசினி கூறிய பதில்தான் இன்னும் சுவாரசியமானது. “ஆமாம்... இன்னும் நிறைய சுஹாசினிகளும் ஷோபனாக்களும் உருவாக வேண்டும். அப்போதுதான் நடிகைகள் ‘முடியாது’ என்று சொல்வதையும் அவர்கள் பழகிக்கொள்வார்கள்” என்று கூறியிருக்கிறார். தனக்கான எல்லையை நிர்ணயித்துக் கொள்வது ஒரு நடிகையின் உரிமை என்பதில் அப்போதே அவர் தெளிவாக இருந்திருக்கிறார்.

பின்னாளில் ‘சிந்து பைரவி’ போன்ற படங்களின் மூலம் தேசிய விருது பெறும் அளவுக்கு உயர்ந்த சுஹாசினி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நடிகையாக மாறினார். ஆனால் அவர் உச்சத்தை அடைவதற்கு முன்பே, ஹீரோவின் மடியில் அமரச் சொன்ன காட்சிக்கும், அவர் சாப்பிட்ட அதே ஐஸ்கிரீமை சாப்பிடச் சொன்னதற்கும் “முடியாது” என்று சொன்ன சம்பவம், அன்றைய சினிமா சூழலில் ஒரு நடிகை தனது முடிவில் எந்த அளவுக்கு உறுதியாக இருந்தார் என்பதைக் காட்டும் அதிகம் பேசப்படாத சம்பவமாக இருக்கிறது.