ஜனநாயகன் - ஜனங்களை வென்றான் - விமர்சனம்

jananayagan-movie-review
ஜனநாயகன் - விமர்சனம்

ஒரு கொலைக் கேசில் கைதியாக சிறை தண்டனை அனுபவிக்கும் சிறைக்கைதி நாயகன். அந்த சிறையில் உள்ள ஒரு பெரும்புள்ளியைத் தப்பிக்க வைக்க போலியான ஜெயில் கலவரத்தை நடத்த திட்டம் தீட்டுகிறார்கள். நாயகன் அதை முறியடிக்கிறான். இதனால் ஜெயில் அதிகாரிக்கு நாயகன் மேல் நல் அபிப்ராயம் ஏற்படுகிறது.

மரணப்படுக்கையில் இருக்கிறார். கடைசி ஆசையாக நாயகனைப் பார்க்க விரும்புகிறார். சட்டத்தை மீறி அந்த ஜெயில் அதிகாரி நாயகனை பரோலில் அனுப்புகிறார். ஜெயில் அதிகாரியின் மகளுடன் நாயகனுக்கு ஒரு நல்ல பாண்டிங் உருவாகிறது.

ஒரு விபத்தில் அந்த ஜெயில் அதிகாரி இறந்து விட, நாயகன் அவரது மகளைத்தன் வளர்ப்பு மகளாக வளர்க்கிறான்.

மகளை மிலிட்ரி ட்ரெய்னிங் அனுப்ப ஆசைப்படுகிறான். ஆனால் மகளுக்கு அதில் ஆர்வம் இல்லை.

இது இப்படி இருக்க, நாயகன் எந்தக் கொலைக்கேசில் சிறை தண்டனை பெற்றானோ கொலை செய்யப்பட்டதாக நினைத்த ஆள் உயிருடன் இருப்பதை அறிகிறான். நாயகனுக்கும், வில்லனுக்கும் உண்டான பிளாஷ்பேக் என்ன? வில்லனின் புதிய திட்டம் என்ன? நாயகன் அதை முறியடித்தானா? என்பதை மீதித் திரைக்கதையில் சொல்லி இருக்கிறார்கள்.

நாயகனாக முதல்வர் விஜய். புதிய ஹேர் ஸ்டைல், பக்குவப்பட்ட நடிப்புடன் கலக்குகிறார். ஆக் ஷன் சீக்வன்சில் ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. அவர் பேசும் அரசியல் பஞ்ச் வசனங்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு. 'தளபதி கச்சேரி' பாட்டில் முதல்வர் விஜயின் டான்ஸ் கலக்கல் ரகம்.

ஒரே ஒரு குறை, வழக்கமாகப் பிரமாதமாக காமெடி செய்யும் முதல்வர் விஜய், ரொமாண்டிக் போர்சனில் குறும்பு காட்டும் முதல்வர் விஜய் - இந்த இரண்டு அங்கங்களும் மிஸ்சிங்க்.

நாயகியாக பூஜா ஹெக்டே படம் முழுக்க ஸ்லீவ்லெஸ் பிளவுசுடன் கிளாமராக வருகிறார். ஆனால் டூயட் எதுவும் இல்லை. குடும்ப விழா, கோவில் என எங்கே போனாலும் ஸ்லீவ்லெஸ் டிரஸ்தானா? என்ற கமெண்ட் தியேட்டரில் எழுந்தது!

நாயகனின் வளர்ப்பு மகளாக மமிதா பைஜூ கொஞ்சிப் பேசும் சிரிப்பு, குறும்பு கொப்புளிக்கும் கன்னம், சித்தா என நாயகனை விளிப்பது அனைத்தும் அழகு (சித்தப்பா என்பதன் சுருக்கம் தான் சித்தா)

ஜெயில் அதிகாரியாக கவுதம் வாசுதேவ் மேனன் காட்டும் கம்பீரம் கனகச்சிதம். ஆங்கிலம் அதிகம் பேசாமல் நார்மல் தமிழ் பேசுவது சிறப்பு.

வில்லனாக பாபி தியோல் மிரட்டி இருக்கிறார். அவரது ஜிம் பாடி அருமை. போலீஸ் ஆபீசராக வரும்போது அவமானப்படும் காட்சியில் அருமையான நடிப்பு.

ஐஏஎஸ் ஆபீசராக பிரியாமணி கெஸ்ட் ரோலில் வருகிறார்.

நேர்மையான ஆபீசராக நரேன், முதல்வராக நாசர், அரசியல்வாதியாக பிரகாஷ் ராஜ், நாயகனின் அம்மாவாக ரேவதி, போலீஸ் ஆபீசராக நிழல்கள் ரவி என அனைவரது நடிப்பும் கிளாஸ்.

அனிரூத் இசையில் 5 பாடல்கள் அனைத்தும் இனிமை. 'தளபதி கச்சேரி' பாட்டுக்கு தியேட்டரே செலிபிரேஷன் மோடில் கொண்டாடித் தீர்த்தது. அந்தப் பாட்டுக்கு நடன வடிவமைப்பும் அருமை. அனிரூத்தும் ஒரு சீனில் வந்து போகிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டம். ஆக்சன் சீக்வன்ஸ், க்ளைமாக்ஸ் காட்சிகளைப் படம் பிடித்ததில் லாவகம் தெரிகிறது.

பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங்கில் படம் 183 நிமிடங்கள் ஓடுகிறது. பின் பாதியில் கொஞ்சம் ட்ரிம் செய்து இருக்கலாம்.

பகவந்த்கேசரி தெலுங்குப் படத்தின் கதையை வாங்கி ஹெச்.வினோத் திரைக்கதை அமைத்திருக்கிறார். சதுரங்க வேட்டை படத்துக்குப்பின் வசனத்துக்கு அதிக முக்கியத்துவம் தந்த படமாக இது அமைகிறது.

ஓப்பனிங்க் சீனில் வரும் ஜெயில் கலவரக்காட்சி, ஆக்சன் சீக்வன்ஸ் அதகளம்.

நாயகனுக்கும், வளர்ப்பு மகளுக்குமான பாண்டிங் அருமை. விசுவாசம் அப்பா மகள் செண்ட்டிமெண்ட் போலவே இதிலும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

பிளாஷ்பேக் சீனில் போலீஸ் ஆபீசராக வரும் முதல்வர் விஜய் கலக்குகிறார்.

வில்லன்களாக வரும் பிரகாஷ் ராஜ், பாபிதியோல் இருவரது கேரக்டர் டிசைனும் வலிமையாக எழுதப்பட்டிருப்பது சிறப்பு.

கடைசி அரைமணி நேரம் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு பிரம்மாண்டம், கிராபிக்ஸ் ஒர்க்ஸ், விசுவல்ஸ் அருமை.