ஜனநாயகன் Vs சிக்மா? - CM விஜய்யுடன் மோதும் மகன் ஜேசன்!

jason-sanjay-cm-joseph-vijay-sigma-vs-jananayagan
ஜனநாயகன் Vs சிக்மா? - CM விஜய்யுடன் மோதும் மகன் ஜேசன்!

முதல்வர் விஜயின் கடைசி திரைப்படமாகக் கருதப்படும் ஜனநாயகன் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படம் ஒரே நாளில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தந்தை-மகன் படங்கள் நேருக்கு நேர் மோதுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனமான KVN Productions சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, தணிக்கை வாரிய உறுப்பினர்களின் பெரும்பான்மை கருத்தை அடிப்படையாகக் கொண்டு, படத்திற்கு யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் மூலம் படத்தின் வெளியீட்டுக்கு இருந்த சட்டத் தடை நீங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தது. இதனால் படத்தின் வெளியீடு மீண்டும் தாமதமானது. இதற்கிடையில், ஜனநாயகன் திரைப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்வராக பொறுப்பேற்றதால், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நீடித்தது.

தற்போது, ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சார் குழு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மறுபுறம், முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் JSJ Media இணைந்து தயாரித்துள்ளன. இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படமும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அன்றே படம் வெளியாகும் பட்சத்தில், தந்தை விஜயின் கடைசி திரைப்படமும், மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகப் படமான 'சிக்மா'வும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் சூழல் உருவாகும்.

எச். வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி டியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தை KVN Productions தயாரித்துள்ளது. விஜயின் அரசியல் பயணத்திற்கு முன் அவர் நடித்த கடைசி திரைப்படம் என்பதால் ஜனநாயகன் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதே நேரத்தில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இருப்பினும், ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, இரண்டு படங்களும் ஜூலை 31-ஆம் தேதி வெளியாகுமா என்பதான் தற்போது ரசிகர்கள் ஆவலை அதிகரித்துள்ளது. ஒருவேளை இருபடங்களும் ஒரே தேதியில் வெளியானால் ரசிகர்களுக்கு டபுஸ் ட்ரீட்டாக இருக்கும் என்கின்றனர் சினிமா துறையினர்.