பெயிண்ட் பூசியதால் தான் இறந்தாரா கருப்பு சுப்பையா!

comedy-actor-karuppu-sabbaiya-death
பெயிண்ட் பூசியதால் தான் இறந்தாரா கருப்பு சுப்பையா!

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் கருப்பு சுப்பையா. எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வித்யாசமான திருடராக வெண்ணிற ஆடை மூர்த்தியின் தையல் கடையை உடைத்து திருடுவதற்கு முன்னரே கடை வாசலில் நோட்டம் இட்டு படுத்திருப்பாரே அருமையா இருக்கும்.

இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சார்ந்தவர், கருப்பு சுப்பையா, மொட்டை சுப்பையா என பல பெயர்கள் இவருக்கு உண்டு. பார்த்த உடனே வசீகரிக்கும் கிராமத்து எளிமையான மனிதராக எளிமையின் நிறமான அடர் கறுப்பு நிறத்தில் இவர் இருந்தார். இந்த கறுப்பு நிறம் தான் இவரின் ப்ளஸ் பாயிண்ட். இதைவைத்துதான் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆப்ரிக்காவின் ஒரிஜினல் நிறமான கருப்பு நிற ஆப்ரிக்க மனிதராக பிரபு, கவுண்டமணி நடித்த ஜல்லிக்கட்டுக்காளை படத்தில் ஜிம்பலக்கடி பம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது இவரின் வரவேற்க தகுந்த படங்களில் ஒன்றாக இருந்தது.

மோகன் நடித்த சரணாலயம் என்ற படம், தேங்காய் சீனிவாசன் பிரின்ஸிபால், கருப்பு சுப்பையா அலுவலக உதவியாளர், தேங்காய் சீனிவாசனுடனே ஃபைலை தூக்கி கொண்டு அலைவார். சட் சட்டென சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் கோபப்படும் தேங்காய் சீனிவாசன் தனக்கு கோபம் வரும்போதெல்லாம் பக்கத்தில் நிற்கும் கருப்பு சுப்பையாவை போட்டு அடிப்பார், இதில் ஒரு காட்சியில் மோகன் அந்தக்கால ராஜா வேஷம் போட்டு கல்லூரியில் நடந்து சென்று கொண்டிருக்க, என்னயா வேஷம் இது என கருப்பு சுப்பையாவிடம் தேங்காய் சீனிவாசன் சொல்ல, சார் இது எல்லாம் என்ன வேஷம் அந்தக்காலத்துல நாடகத்துல நாங்க பாடாத பாட்டா என நடையலங்காரம் கண்டேன் என பாட நைசாக கையில் வைத்திருக்கும்ஃபைலை வாங்கி வெளு வெளு என கருப்பு சுப்பையாவை வெளுத்தெடுப்பார் தேங்காய்.

கவுண்டமணி, செந்தில் காமெடிக்கு பிறகு இவருக்கும் கவுண்டமணிக்குமான காமெடி பொருத்தமா இருக்கும். ஏய் ஜிம்பலக்கடி பம்பா, ஆப்ரிக்கா அங்கிள் என கவுண்டமணி சொல்லும் காட்சிகள், மாப்ள ஒரு குட் நியூஸ் என்ன சொல்லு, உங்க அத்தை மூணு மாசம் முழுகாம இருக்கா என சொன்ன உடன், தூ என மூஞ்சில துப்பி, நீ நல்லா இருக்க மாட்டடா, நல்லாவே இருக்க மாட்ட என கவுண்டமணி அழுதுகொண்டே சொல்லும் காமெடிகள் செமயா இருக்கும்.

கீதாஞ்சலி படத்தில் சாமியாராக ஏமாற்றும் கவுண்டமணியிடம் தன்னிடம் அதிகம் பணம் உள்ளது அதனால் நிம்மதி இல்லை என சொல்வதும் அதற்கு கவுண்டமணி கொடுக்கும் தீர்வும் நல்ல காமெடியா இருக்கும்.

1961ல் வெளிவந்த, இந்திரா என் செல்வம் என்ற படம் தான் இவரின் முதல் படம் அதன் பின் குமுதம் படத்தில் நடித்தார் அதன் பிறகு எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் ப்ளாக் அண்ட் ஒயிட் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார் இவர். பச்சை விளக்கு, பழனி, மகாகவி காளிதாஸ், ராமன் எத்தனை ராமனடி, எங்கள் தங்கம் என எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார் இருப்பினும் 80 மற்றும் 90களில் தான் முன்னணியாக குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்தார் இவர். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் இவர்.

இவர் பெரிய மருது படத்தில் செய்த உடம்பெங்கும் ஈயம் பூசிக்கொண்ட காமெடி ஃபேமஸ், நிறைய விசாரித்துவிட்டு சின்ன குடத்தை கொண்டு வந்து ஈயம் பூசியதால் கவுண்டமணி அவரை படுக்க வைத்து ஈயம் பூசிவிட்டு விடுவார், இப்படி உடலெங்கும் ஈயம் பூசியதால் தான் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என மறைந்த மனோபாலா உள்ளிட்டவர்கள் சொல்லி இருந்தாலும், பெரிய மருது படம் வெளிவந்தது 1994, அவர் இறந்தது 2013.
பெயிண்ட் பூசியதால் பிரச்சினை ஆகி அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம், அதனால் அவர் இறந்தார் என சொல்வதை ஏற்க முடியவில்லை,

மனோபாலாவின் அந்த பேட்டியிலும் 300 ரூபாய் சம்பளத்துக்கு அப்படி ஒரு வேடத்தில் நடித்து மறா நாளே இறந்து விட்டார் என கூறுகிறார் இதை எப்படி ஏற்க முடியும். இதன் பின் 20 வருசம் உயிருடன் இருந்திருக்கிறார். பெரிய மருதுக்கு பிறகு 1997ல் வெளிவந்த தெம்மாங்கு பாட்டுக்காரன் வரை 4 வருடம் நடித்திருக்கிறார்.ஆனால் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு சரியாக கவனிக்க ஆள் இன்றி இறந்துள்ளார் என கூறப்படுகிறது, இது வேண்டுமானால் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது. ஆக வயோதிகம் அதனால் ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் தான் இவர் உயிரிழந்துள்ளார் என அறிந்து கொள்ள முடிகிறது. பல பத்திரிக்கை செய்திகளில் இவர் உடலில் அலுமினிய பெயிண்ட் பூசியதால் தான் இறந்தார் என சொல்கிறார்கள் இது உண்மையா என தெரியவில்லை.