பராசக்தி மூவி விமர்சனம்

parasakthi-movie-review
பராசக்தி மூவி விமர்சனம்

1950களிலேயே லேசான இந்தி எதிர்ப்பு தென்னக மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில், வங்காளம், மராட்டி பேசும் மும்பை போன்ற மாநிலங்களில் இருந்ததாக காண்பிக்கப்படுகிறது. அதற்கு சில போராட்டங்கள் செய்து நாயகன் சிவகார்த்திகேயன் அதையெல்லாம் விட்டு ரயிலில் கரி அள்ளி போடும் வேலையை செய்து வருகிறார். 1964 பண்டிட் ஜியின் மறைவுக்கு பிறகு என கதை ஆரம்பிக்கிறது.

சிவகார்த்திகேயன் நண்பர் , பாண்டியராஜன் அவர்களின் மகனான பிரித்வி, இவர்கள் வீட்டுக்கு எதிர்புறம் தெலுங்கு மொழி பேசும் எம்.பி ஆனந்த் அவர்கள் வீடு உள்ளது. ஆனந்தின் மகள் தான் நாயகி ஸ்ரீலீலா.

தெலுங்கு மொழி பேசுபவர்களும் இந்திக்கு எதிராக உள்ளனர், நாயகி ஸ்ரீலீலாவும் இந்திக்கு எதிராக உள்ளார். நாயகன் சிவகார்த்திகேயனை விரும்புகிறார். ஹிந்தி எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார், அடுத்த கட்ட வேலைக்கு செல்லும் சிவகார்த்திகேயனுக்கு ஹிந்தி எல்லாம் சொல்லி கொடுக்கிறார் , ஆனால் கதைப்படி ஹிந்திக்கு நாங்கள் எதிரி அல்ல, அதை கண்டிப்பா திணிக்க கூடாது என்றுதான் சொல்கிறோம் என்பதுதான் மையக்கருத்து.
சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வா ஒரு மாணவர் படையை உருவாக்கி தைரியமாக போராடுகிறார். தம்பி அதர்வாவிடம் அதெல்லாம் வேண்டாம் என கண்டிக்கிறார் சிவா. இவர்கள் இருவரின் பாட்டியாக மருது படத்தில் விஷால் பாட்டியாக வருவாரே அவர் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனை மனப்பூர்வமா காதலிக்கும் ஸ்ரீ லீலா, சிவகார்த்திகேயனுக்கு இந்தி எதிர்ப்பு ஆர்வம் இல்லாதது குறித்து வருந்துகிறார், மேலும் சிவாவின் தம்பி அதர்வாவுக்கு ஆதரவாக பல போராட்டங்களுக்கு டெக்னிக்கலாக பல உதவிகள் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் இந்தி திணிப்பால் ஒருவர் உயிர் துறப்பதை பார்க்கும் சிவா தானும் இந்தி திணிப்புக்கு எதிராக போராட நாயகி ஸ்ரீ லீலா, தம்பி அதர்வா துணையுடன் போராடுகிறார்.
இதை டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் மத்திய அரசின் சிறப்பு காவல் அதிகாரி ஜெயம் ரவி தடுத்து நிறுத்த நினைக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சராலேயே கட்டுப்படுத்த முடியாத டெல்லி சப்போர்ட்ல சிறப்பு அதிகாரம் படைத்தவராக ஜெயம் ரவி வருகிறார்.

இந்திக்கு எதிரான போராட்டத்தில் சிவாவின் தம்பி அதர்வாவை சு*ட்*டு வீழ்த்துகிறார் ஜெயம் ரவி. இதனால் வெகுண்டெழும் சிவா , ஜெயம் ரவியை என்ன செய்தார் என்பது கதை.
படத்தில் சிவகார்த்திகேயனை விட அதிகம் ஸ்கோர் செய்பவர் ஜெயம் ரவி, வில்லத்தனத்தில் மிரட்டி விட்டார் மிரட்டி, சுதந்திர போராட்டத்தின்போது பலரை சு*..டு வீழ்த்திய ஆங்கிலேய அதிகாரி ஜெனரல் டயர் போல எல்லாரையும், குருவியை சுடு *வது போல சு***டு வீழ்த்திக்கொண்டே இருக்கிறார். பேச்சில் செயலில், உருவத்தில் செமயாக மிரட்டி இருக்கிறார். மறந்தும் கூட சிரிக்காமல் விறைப்பு காட்டும் செமயான போலீஸ் அதிகாரியாய் நல்ல போலீஸ் உடல்மொழியுடன் நடித்துள்ளார். அவரின் வில்லத்தன ஆக்டிங்கை பயன்படுத்தி அடுத்தடுத்து அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்க வச்சு அவரை சில இயக்குனர்கள் ஓய்த்துவிடக்கூடும் எச்சரிக்கை தேவை.

சிவகார்த்திகேயனின் நடிப்பும் ஓக்கேதான் , சொல்லிக்கொடுத்ததை நடித்திருக்கிறார், அந்த வகையில் குறை வைக்கவில்லை.

ஜெயம் ரவிக்கு அடுத்து அனைவரையும் கவர்பவர் நாயகி ஸ்ரீ லீலா, அந்த கால சரோஜா தேவி டைப் சேலைகள், காஸ்ட்யூம்ஸ் என இவருக்காக இயக்குனரும் காஸ்ட்யூம் டிசைனரும் பார்த்து பார்த்து செய்திருக்கின்றனர். நாயகியும் அழகு அவரின் நடிப்பும் ரொம்ப க்யூட், அவரின் அந்தக்கால 60களின் காஸ்ட்யூம்ஸ்சும் ரொம்ப அழகு. அழகான பெண்ணாக மட்டுமல்லாமல் அதிரடியாகவும் மிரட்டுகிறார்.

சிவகார்த்திகேயன் 1960களின் ஆண் அல்லவா, அந்தக்கால ஆண் உடை ரொம்ப சிம்பிள் ஆக தான் உள்ளது உதாரணமாக சாதாரணமாக ஒரு சட்டை, சாதாரண துணியில் எந்த ஸ்டைலும் இல்லாத ஒரு பேண்ட், ஆனால் ஸ்ரீ லீலாவுடன் பாடல் காட்சிகளில் பார்க்கும்போது ரொம்ப அழகா இருவரும் தெரிகின்றனர்.

மதுரை, பொள்ளாச்சி, காரைக்குடி, பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது மற்றும் சில காட்சிகள் தத்ரூபமாக செட் போடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. கலை இயக்குனரை கண்டிப்பா பாராட்டலாம்.

மதுரையின் மாப்பிள்ளை விநாயகர் சோடா, ஸ்ரீபாலகணேஷ் அரிசி ஆலை, அந்தக்கால விளம்பரங்கள், கற்பகம் பட போஸ்டர் என அந்தக்கால விஷயங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளனர்.

அந்தக்கால உடைகளை எல்லோருக்கும் அப்படியே கொடுத்துள்ளனர்.
படத்தின் கதாபாத்திரங்களை சில காட்சிகளில் ஒரிஜினல் கதாபாத்திரங்கள் போலவும், சில நேரங்களில் கற்பனை கதாபாத்திரங்கள் போலவும் எந்த சாயலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக கற்பனை மற்றும் சில உண்மை சம்பவங்களை கலந்து எடுத்துள்ளார் இயக்குனர், முக்கிய தலைவர்கள் கதாபாத்திரங்களையும் எதற்கு வம்பு என்ற அடிப்படையில் பெயர் குறிப்பிடாமலே தான் காண்பிக்கின்றனர்.

1964ல் பண்டிட் ஜியின் மறைவுக்கு பிறகு தான் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டதாக காட்டப்படுகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ஜெயம் ரவி சில மாணவர்களை பிடிப்பதற்காக ஒரு ஊரையே போட்டுத்தள்ளுவது போல் கிராம மக்கள் அனைவரையும் துன்புறுத்துவது கற்பனை கலந்த காட்சியாகத்தான் இருக்க கூடும்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் சில இடங்களில் நடந்தது, கலவரங்கள் ஏற்பட்டது, இதனால் தமிழ்நாடு எங்கும் மக்கள் நிம்மதி இல்லாமல் இருந்தது போல, சுதந்திர காலம் போல கொஞ்சம் அதிகப்படியான காட்சிகள் மட்டும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.
மற்றபடி இயக்குனர் யாரையும் பகைத்துக்கொள்ளவில்லை, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது என்பதையே கற்பனையும் உண்மையும் கலந்து பதிவு செய்துள்ளார்.

பாடல் காட்சிகளும் 1960களின் காட்சி அமைப்புகளும் ரொம்ப அருமை. படத்தின் வேகம் ஸ்லோவாவும் இல்ல, பாஸ்ட்டாவும் இல்ல இரண்டும் கலந்தது போல இருந்தது. அதனால் படத்துக்கு எந்த பாதகமும் இல்லை. படத்தின் முக்கிய பலம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார். பல நண்பர்கள் சொல்வது போல இவர் நடிப்பை விட்டுவிட்டு இசையை தொடர்ந்தால் பிரமாதமாக வரலாம்.

படம் முடிந்த பிறகு இதில் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் நீத்தவர்கள் பற்றி சின்ன டாகுமெண்டரி போல காட்டுகிறார்கள்.

ஹிந்தி ஆதரவு, திராவிட எதிர்ப்பு, இதை எல்லாம் மறந்துவிட்டு சாதாரண ஒரு மனிதன் மன நிலையில் பார்த்துவிட்டு வந்தால் ஓக்கே, அவர்கள் கருத்தை சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவுதான் வெறுப்புடன் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

படத்தின் மைனஸ் நான் ஏற்கனவே சொன்னபடி ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை சுதந்திர போராட்டம் ரேஞ்சுல கடுமையாக காண்பித்ததுதான். சிவகார்த்திகேயனை அடித்து துவைத்து மிதித்து மூஞ்சி மொகரை எல்லாம் பஞ்சராக்கி நகத்தை பிடுங்கி என்னென்னவோ கொடுமை செய்யும் ஜெயம் ரவியிடம் இருந்து தப்பித்து அடுத்த காட்சியிலேயே டெல்லிக்கு போய் லேசான காயங்களுடன் பளிச்சென மத்திய அமைச்சரிடம் பேசுவதுஎல்லாம் நம்ப முடியாத லாஜிக் மீறல். இப்படி சில காட்சிகள் மட்டும்தான்.

படம் ஓக்கே தான் ஒருமுறை பார்க்கலாம். ஹிந்தி எதிர்ப்பில் ஆர்வமில்லாதவர்கள் பார்த்தால் கூட அந்த 1960களின் காட்சியமைப்புகளை பார்ப்பதற்காக பார்க்கலாம்.