முதுமை கால பாரம் ஏன்?

By News Room

ஆளவந்தார் அந்த ஊரில் முக்கியப் புள்ளி. தன் மனைவி மற்றும் மூன்று
மகன்களுடன் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தார்.

மூன்று மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்த அவர், தன் சொத்தை நான்கு பங்காக சமமாக பிரித்து ஆளுக்கு ஒரு பங்கைப் பிரித்து அவர்களுக்குத் தந்தார். தன் தேவைக்காக ஒரு முடிவு செய்தார்.

சொத்தில் ஒரு பங்கை தன் கூடவே வைத்துக் கொண்டார்.

சில ஆண்டுகள் சென்றன. அவரது மனைவியும் அவரை விட்டு மறைந்து போக தனித்து விடப்பட்டார்.

ஒரே ஒரு நம்பிக்கையான உதவியாளர் மற்றும் சில வேலைக்காரர்கள். இவர்களே அவர்களுக்கு இப்போது துணையாக இருந்தனர்.

இதுவே அவர் வாழ்க்கை நிலை தற்போது.

தந்தை தனியாகத் துன்பப்படுவதை பார்த்து அவர் மூன்று மகன்களால் தாங்க முடியவில்லை.

ஒரு நாள் அவர்கள் மூவரும் கூடிப் பேசி அவரிடம் வந்தார்கள்.

அப்பா, நீங்கள் ஏன் தனியாக இந்த வீட்டில் கஷ்டப்பட வேண்டும்? உங்களுக்கு என்று இருக்கும் சொத்தையும் எங்களுக்கு சமமாக பிரித்துத் தந்து விடுங்கள்.

எங்களில் யார் வீட்டில் வேண்டுமானாலும் உங்கள் விருப்பம் போல தங்கியிருங்கள்.

உங்களுக்கு எந்த குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று பாசத்துடன் அழைத்தார்கள்.

ஆளவந்தார் நினைத்தார். மகன்களுடன் தங்குவது நல்லது என்று அவருக்கும் பட்டது. இருந்தாலும் சிந்தித்து முடிவு செய்வோமே.?
என்று அவர் மனதுக்குள் திடீரென தோன்றியது.

ரொம்ப சந்தோஷம். ஒரு 
மூன்று மாதம் கழித்து வாருங்கள் நான் என் எண்ணத்தை அப்போது சொல்கிறேன் உங்களிடம் என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

பிள்ளைகளை தந்தை காப்பாற்றுவது போல தந்தையை பிள்ளைகள் காப்பாற்றுவார்களா.? என்று அன்றுமுதல் ஒரே சிந்தனை அவருக்கு.

தன் உதவியாளரை அழைத்த ஆளவந்தார், நம் வீட்டுத் தோட்டத்தில் குருவி ஒன்று புதிதாக கூடு கட்டியுள்ளது. அதில் சில குருவிக் குஞ்சுகள் உள்ளது போலத் தெரிகிறது.

தாய் குருவியை இல்லாத சமயம் அதன் குஞ்சுகளை மட்டும் அந்த மரத்தில் ஏறி அந்தக் கூண்டோடு பத்திரமாக எடுத்து வா என்று பணித்தார்.

உதவியாளரும் அவர் சொன்னது போலவே அந்தக் குருவி கட்டிய கூடோடு குருவிக் குஞ்சுகளை கொண்டு வந்தார்.

அந்த குருவிக் குஞ்சுகளை தகுந்த பாதுகாப்போடு வைத்தார் ஆளவந்தார்.

அந்த குஞ்சுகள் வெளியே வர முடியாதபடி சின்ன தடுப்பு அமைத்து அந்தக் கூண்டை தன் படுக்கையறை ஜன்னல் அருகே தொங்க விட்டார்.

தாய்க்குருவி அந்தக் கூண்டை கண்டு பிடித்து அருகே வந்தது. கூவியபடியே அதை சுற்றிச் சுற்றிப் பறந்தது.

தன் குஞ்சுகள் அங்கிருந்து வெளியே வர முடியாது என்பதை அறிந்தது.

இருந்தாலும் அந்தக் குருவி வெளியே பறந்து சென்று வேளா வேலைக்குத் தவறாமல் தன் குஞ்சுகளுக்கு உணவைக் கொண்டு வந்து ஊட்டியது.

சிறிது காலம் சென்ற பின் குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்தது.

கூண்டிற்கு உள்ளேயே பறக்கத் தொடங்கின அவைகள்.

இப்போது ஆளவந்தார் வேறு ஒரு வேலை செய்தார். தன் தோட்டக்காரனை வைத்து அந்த தாய்க் குருவியை பிடித்து வெளிவர முடியாத ஒரு கூண்டில் அடைத்து அந்தக் கூண்டை எடுத்து வரப் பணித்தார்.

அந்த குஞ்சுக் குருவிகள் இருக்கும் அதே கூண்டிற்கு அருகிலேயே அந்தக் கூண்டை தொங்க விட்டார்.

இப்போது அவர் அந்த குஞ்சுகள் இருக்கும் கூண்டைத் திறந்து விட்டார்.

அதில் இருந்த எல்லா குஞ்சுகளும் வெளியே உற்சாகமாக பறந்து சென்றன.

அந்தக் குஞ்சுகள் பறப்பதைக் கண்ட தாய்க் குருவிக்கு ஆனந்தம்.

தன் மகிழ்ச்சியை அது உரத்த குரலில் வெளிப்படுத்தியது.

வெளியே பறந்து சென்ற அதன் குஞ்சுகள் அங்கு வரும், தாய்க்குருவியை பார்க்கும், அதற்கு உணவு கொண்டு வரும் என்று எதிர்பார்த்தார் ஆளவந்தார்.

ஆனால் அதன் குஞ்சுகள் எதுவுமே அந்த தாய்க் குருவி இருக்கும் கூண்டு பக்கமே வரவில்லை.

பொறுத்துப் பார்த்து விட்டு அந்த தாய்க்குருவிக்கு பல தானியங்களையும் அளித்து. பிறகு அந்த கூண்டைத் திறந்து விட்டார்.

ஆனால் என்ன ஒரு ஆச்சரியம், எங்கு வெளியே சென்றாலும் அந்த தாய்க் குருவி திரும்பவும் அந்தக் கூண்டிற்கே வந்தது. 

ஆளவந்தாரிடம் நல்ல தோழமையையும் பாராட்ட ஆரம்பித்தது.

ஆளவந்தார் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் இப்போது அவர் கூறியது போலவே மூன்று மாதங்கள் கழித்து அவரது மூன்று மகன்களும் வந்தார்கள். 

அப்பா எங்களுடன் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள் என்றும் சொன்னார்கள் முஸ்தீபாக.

ஆளவந்தார் மூன்று மகன்களையும் வரவேற்றார்.

அவர்கள் மனது நோகாமல் விதமாக பின்வருமாறு சொன்னார்,

என்னை இப்படியே விடுங்கள். உங்கள் அம்மா வாழ்ந்த இந்த வீட்டில் வாழ்ந்து எனக்கு பழக்கமாகி விட்டது.
எனவே நான் இங்கே தனிமையாகவே வாழ ஆசைப்படுகிறேன்.

எனக்கு பிறகு என் பங்கான இந்த சொத்தையும் நான்காக பிரிக்க உத்தேசித்துள்ளேன்.

மூன்று பகுதிகள் உங்கள் மூவருக்கும் மற்றும் ஒரு பகுதி என் உதவியாளார் மற்றும் இந்த வீட்டு வேலைக்காரர்களுக்கு என்று உயில் எழுத உத்தேசித்துள்ளேன்.

அடிக்கடி உங்கள் குடும்ப சகிதமாக என்னை வந்து பார்த்துக் கொள்ளுங்கள்.
என் உடல்தான் இங்கே. உயிர் என்றும் உங்களோடு என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

இப்போது அவர் மனம் தெளிவாக இருந்தது. 

அந்த தாய்க் குருவி அவர் தோளில் எங்கிருந்தோ பறந்து வந்து அமர்ந்தது. நீங்கள் உங்கள் மகன்களிடம் சொன்னது சரிதான் என்று அது சொல்வது போல ஆளவந்தாருக்குத் தோன்றியது.

நீதி: "எலி வலையானாலும் தனி வலையாக இருப்பது" நன்று.

நம் பிள்ளைகள் நம்மை கடைசி வரை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள், என்ற நம்பிக்கை இருந்த போதிலும். நாம் ஓய்வு எடுத்துக் கொள்ளும் காலம், நமக்கென்று சொத்து சேர்த்து வைத்துக் கொண்டு தனியாக இருப்பது நலம் யாருக்கும் பாரமாக இருக்காமல்?

.
மேலும்