வில்லுக்கு விஜயன் ஏன்? எவ்வாறு?

By News Room

 #அஸ்திர_சஸ்திரங்களில்_அவன்_அடைந்த_உச்சம்

மந்திரங்களால் ஆயுதங்களாக மாற்றப்படுவதை அஸ்திரங்கள் என்றும் எப்போதும் தன்னுள் சக்தியை கொண்டு விளங்கும் பொருட்களைச் சஸ்திரம் என்றும் அழைப்பர்

#அஸ்திரங்கள்

திவ்ய அஸ்திரங்கள் கணக்கிலடங்கா அதைப் பலரும் அறிவர் ஆனால் இங்கு நாம் பார்க்கபோவது தனித்தன்மையான மகாஸ்திரங்கள்.

மஹாபாரதத்தில் பீஷ்மர் பரசுராமரின் பூரணச் சீடர் ஆவார். குரு துரோணர் பரசுராமரிடம் அஸ்திரங்களைத் தானமாகப் பெற்றார். கர்ணனோ அடிப்படையைத் துரோணரிடம் பெற்றுப் பிரம்மாஸ்திரத்தை பரசுராமரிடம் பெற்றான்

‎இங்கு மும்மூர்த்திகளின் அதிசக்தி வாய்ந்த அஸ்திரங்களையும் பெற்றவன் விஜயன் ஒருவனே

அதாவது பிரம்மதேவரின் பிரம்மசிரஸ்

விஷ்ணுவின் வைஷ்ணவாஸ்திரம்

‎ஈசனின் பாசுபதாஸ்திரம்

மேலும் நரனின் அம்சமாவதால் சுதர்சனத்தையும் ஏந்த வல்லவன். ‎(இது கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சுதர்சனத்தைப் பயன்படுத்த கூறி அதை அர்ஜுனன் வேண்டாமென்பதில் அறியலாம்)

விஜயனுக்கு அடுத்தபடியாக, துரோணரும் அஸ்வதாமானுமாவர் அதாவது பிரம்மசிரஸ் மற்றும் நாராயணாஸ்திரத்தை அறிந்தவர்கள்.

மும்மூர்த்திகளின் அஸ்திரத்திற்கு அடுத்தபடியாகப் பார்த்தால் திக்குகளைக் காக்கும் திக்பாலகர்களின் தனிப்பட்ட ஆயுதங்கள். ‎திக்குகளைத் தாங்கி அதைப் பாதுகாக்கும் பொறுப்பை இவர்கள் சிவபெருமான் மற்றும் நாராயணரிடம் இருந்து பெறுவார்கள். (உதாரணம் வளங்களுக்கு அதிபதியான குபேரன் அப்பொறுப்பையும் உயிர்களைக் கொல்லும் யமன் அந்தப் பொறுப்பையும் ஈசனிடமும் இந்திரப்பதவியை இந்திரனும் ஜலத்திற்கு அதிபதியான வருணன் அந்த நிலையை விஷ்ணுவிடமும் பெற்றனர்)

‎திக்குகளைக் காக்கப்போவதால் இவர்களுக்கு எனத் தனிசக்திகளையும் எவரும் வெல்ல இயலாத தனிப்பட்ட ஆயுதங்களையும் சூலபாணியும் சக்கரபாணியும் தந்தார்கள். இந்த ஆயுதங்களை ஈசன் மற்றும் விஷ்ணுவின் சக்திவாய்ந்த அஸ்திரங்களால் மட்டுமே தடுக்க முடியும் மற்றபடி பிரம்மாஸ்திரத்தாலும் முடியாது.

‎இந்திரனின் வஜ்ரம், அக்னியின் ஆக்நேயம், யமனின் கதை {யமதண்டம்}, வருணனின் வருணபாசம், குபேரனின் அந்தர்தானாயுதம் முதலிய ஆயதங்களை நேரடியாகத் திக்பாலகர்களிடம் இருந்தே பெற்றான்.

இந்திர லோகத்தில் வாயு, அக்னி, வசு, வருண, மருத, சித்த, பிரம்ம, கந்தர்வ, உரக, ராட்சச, விஷ்ணு, நைரிதர்களின் (அரக்க இனத்தின் ஒரு வகையினர்) ஆயுதங்களைப் பெற்றான்.

இதில் ஐந்திரியம் பார்த்தனுக்குப் பிரியமானதும் கௌரவச் சேனாதிபதிகளாலே தடுக்கப்பட முடியாதது ஆகும்.

#துவஷ்டதாரி_அஸ்திரம்: இது ஏவப்பட்டால் வீரர்களுக்குத் தங்களின் அருகில் இருப்பவர் கூட அர்ஜுனன் போலத் தெரிவார்கள். இதனால் ஒருவரை ஒருவர் அடித்துகொண்டு வீழ்வர். கிருஷ்ணனின் நாராயணர்கள் சேனையை இவ்வாறே அர்ஜுனன் கொல்வான். காண்டவ வனத்தில் இந்திரன் வரம்கேட்ட போது, இந்த அஸ்திரங்களை அர்ஜுனன் வரமாக வேண்டுவான்

#கந்தர்வ_அஸ்திரம்: இது ஒரு வீரனுக்கு நினைத்து பார்க்க முடியாத வேகத்தைக் கொடுக்கும். இந்த வேகத்தினால் அவன் சிறுது நேரத்திலேயே பலரை கொல்வான். ‎அர்ஜுனன் இதைத் தும்புரு என்ற கந்தர்வனிடம் பெற்றான். இந்தக் கந்தர்வ அஸ்திரத்தை இராமபிரான் உபயோகித்து உள்ளார். இராமாயணத்தில் அனைவரும் வீழ்வதைக் கண்ட இராவணன் மூவுலங்களையும் வென்ற மாவீரம் கொண்ட அரக்க சிரேஷ்டர்களால் நிறைந்த மூலபல சேனையை இராமனை வதைக்க அனுப்புகிறான். வானர சேனையில் அவர்களில் ஒருவன் ஏற்படுத்திய அழிவும் கூட மிகக்கொடுமையாக இருந்தது. இதனால் ஜகத்ரட்சகனாகிய தசரசநந்தனிடம் சரணடைகிறார்கள் வானர வீரர்கள். வனத்தில் சூறாவளி மரத்தின் கிளைகளை உடைத்தாலும் அதைக் காண முடியாதது போல, அசுரர்களின் சேனையில் இராமன் ஏற்படுத்திய அழிவை காணமுடிந்தாலும் இராமனை மட்டும் எவராலும் காண முடியவில்லை.

வாயு வேகமுடைய ரதங்கள் 7 கோடியே 28 லட்சமும்

மிகுந்த பலம் கொண்ட யானைகள் 13 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரமும்

சிறந்த வீரர்களுடன் உள்ள குதிரைகள் 10 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரமும்

கையில் கதாயுதம், ஈட்டி போன்ற ஆயுதங்களை ஏந்திய காலாட் படையினர் 145 கோடியே 80 லட்சமும்

என ரத, கஜ, துரக, பதாதிகளையும் கொண்ட சதுரங்க பல சேனையை

இராமன் மிகச்சரியாக #மூன்றே_முக்கால்_நாழிகையில் முடித்தார்.

பீஷ்மருக்கு நீரளித்த பர்ஜன்ய ஆயுதமே பலரிடம் இல்லாதது

நிவாதகவசர்களில் இருந்து சித்திரசேனன் சகுனி வரை எவராலும் உருவாக்கப்படும் மாயையை அகற்ற கூடியவன்

சிவகவசம் இது சிவபெருமானே இந்திரனை காக்க அளித்த கவசமாகும் இதைத் துரோணரின் மூலம் அர்ஜுனன் அறிவான் இதைப் பிளக்க வழியே இல்லை எனத் துரோணர் கூறுவார்.

இதையும் விஜயன் தர்மயுத்தத்தில் உபயோகிக்க வில்லை.

(துரியோதனன் கதாயுத்ததில் பீமனால் மட்டுமல்லாமல் எவராலும் வீழ்த்த முடியாதவன் ஆவான் அதற்கான காரணங்களில் சிவகவசமும் ஒன்றாகும்.

காரணம் துரியன் பிறக்கும்போதே இடுப்பிற்கு மேல்பகுதி வஜ்ரமாகப் பிறந்தவன் மேலும் சிவகவசமும் பூட்டப்பட்டதால் இடுப்பிற்கு மேல்பகுதி பெரும் சக்திவாய்ந்தது.

கதாயுத்த நியதிப்படி இடுப்பிற்கு மேல்மட்டுமே தாக்க வேண்டும். துரியனின் மேல்பகுதிகொண்ட பாதுகாப்பின் காரணமாக அவனைக் கதாயுத்தத்தில் எவராலும் வீழ்த்த இயலவில்லை)

நான்முகப் பிரம்மாவின் பிரம்மசிரஸ் அஸ்திரத்தை திருப்பியழைத்தவன் பார்த்தனே அது தேவர்த்தலைவனான இந்திரனாலும் முடியாத காரியம்.

#சஸ்திரங்கள்

காண்டவ வனத்தில் அக்னியை நிறைவுசெய்ததால் காண்டீபத்தையும் வற்றாத அம்பறாத்தூணி மற்றும் தேரையும் அக்னியிடம் பெற்றான்.

#காண்டீபம் - கன்வ முனிவர் அகில நன்மைக்காகத் தவம்செய்யும்போது அவரின்மேல் புற்றுவளர அதில் மூங்கில்கள் வளர்கின்றன தவத்தில் வளர்ந்ததால் அவற்றின் சக்தியை உணர்ந்த பிரம்மதேவர் அவற்றில் சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவிற்குப் பிநாகம் மற்றும் சாரங்கம் என்ற இருமாபெரும் விற்களைச் செய்தார். அதன்பின்பும் மீதமிருந்த மூங்கில்களைக் கொண்டு தர்மத்தை காக்க செய்த வில்லே காண்டீபம் ஆகும்.

விற்களில் ரத்தினமான இதை முறையே பிரம்மதேவர், ஈசன், பிரஜாதிபதி, இந்திரன், சந்திரன், வருணன், அர்ஜுனன் ஆகியோர் ஏந்தியுள்ளனர்.

(ஆனால் ஈசன் அர்ஜுனனிடம் நீ நரனாய் இருக்கும்போது ஏந்திய வில்லே இது எனக்கூறுவார்)

எடுக்க எடுக்க வற்றாத அம்பறாத்தூணிகள் இரண்டு இதனால் யுத்தத்தில் அம்புகள் தீரும் பிரச்சனை வராது.

#அக்னி_அளித்த_ரதம் - இது பெரும் தவத்திற்குப் பின் தேவசிற்பி விஸ்வகர்மா உருவாக்கியது ஆகும். பெரும் குரங்கை கொடியாகக் கொண்ட இந்த ரதம் பிறகு பீமசேனரின் வேண்டுதலால் அனுமக்கொடியை கொண்டதாக மாறும்.

குருசேத்திரத்திற்கு முன் தேவசிற்பியினால் இந்திரன் மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவதையான தாத்ரி மூலம் இந்த ரதம் மேலும் மெருகூட்டப்படும்

சித்திர ரதன் கொடுத்த சாரதியின் விருப்பதற்கு ஏற்ற நிறத்தை மாற்றிகொள்ளும் திறன் உடையதும் மனோ வேகத்தைக் கொண்டதும் நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் பறக்கும் திறன்கொண்ட நூறு குதிரைகள் இந்த ரதத்தை இழுத்துச்சென்றன. சூரிய பிரகாசத்தைக் கொண்ட இந்த ரதம் போருக்குப் பின் பஸ்மமாக்கப்பட்டது.

தனது கை நளினத்தைத் தாங்காமல் விற்கள் உடைவதால் ஒரு வில்லும்

கணைமழையைப் பொழிவதால் தீராத அம்பறாத்தூணியும்

பல ஆயுதங்கள் எடுத்துசெல்வதால் சிறந்த ரதமும்

பார்த்தனால் கேட்கப்பட்டதால் அக்னி அதை உவந்து அளிப்பார். காண்டவ வனத்தில் தேவர்கள், தானவர்கள், தைத்தியர்கள் முதலிய பலரையும் தனது உயிரை பொருட்படுத்தாமல் எதிர்க்க போவதிற்காக அளித்த சன்மானம்.

#முடிவுரை

அர்ஜுனன் பற்பல யுகங்கள் வாழும் தேவர்கள், அசுரர்கள், தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் என அனைவரும் சேர்ந்து வந்தாலும் வெல்லப்பட முடியாதவன்

போருக்குமுன் பாசுபதம் போன்ற தெய்வீக ஆயுதங்களைப் போரில் உபயோகிக்காமல் தர்மயுத்தத்தில் வெற்றி பெறலாம் எனக்கூறியவன்.

அர்ஜுனன் அறிந்த அஸ்திரங்களில் 80% அவன் தர்மயுத்தத்தில் உபயோகிக்க வில்லை. பாசுபதம், வைஷ்ணவம், பிரம்மசிரஸ் மற்றும் திக் பாலகர்களின் வஜ்ரம், அக்நேயம் முதலிய ஆயுதங்கள் போரை தனியாளாக முடிக்க வல்லவை.

ஆனால் தர்மயுத்ததில் அவனும் உபயோகிக்கவில்லை. வாசுதேவனும் அவனை உபயோகிக்கவிடவில்லை.

ஜெயத்ரதனை கொல்ல போகும்போதே ஒரே நாளில் ஏழு அக்ரோணிகளைக் கொன்றான்.

இந்தச் சமயம் கந்தர்வ ஆயுதத்தை உபயோகித்து இருப்பானேயானால் அன்றே போர் முடிந்து இருக்கும்

இல்லை விராடத்தைப் போன்று மயங்க வைத்தால் நொடிப்பொழுதில் ஜெயத்ரதனை நெருங்கி இருக்கலாம்.

அர்ஜுனன் அறிந்த மாயத்தைக் கூட அவன் அங்கு உபயோகிக்க வில்லை.

(கிருஷ்ணன் சூரியனை மறைத்தது இடைசொருகல் என நீக்கி விட்டனர்)

சர்வேஸ்வரனான ஈசனிடமும், வசுக்களின் சாபப்படி தனது மகன் பாப்ருவாகனனிடமும், கிருஷ்ணன் மறைந்த பிறகும் அஷ்ட வக்ரரின் சாபத்தினால் துவாரகை கொள்ளையர்களிடமும் மட்டுமே அர்ஜுனன் தோல்வியைத் தழுவினான். வேறு எங்குமே அவனது தோல்வியோ இல்லை புறமுதுகிட்டான் என்றோ மூல நூலில் கூறப்படவில்லை.

இக்காரணத்தாலேயே அவன் விஜயன் என்ற பெயரும் பெற்றான்

இவையே அர்ஜுனனை நமது முன்னோர்கள்  வில்லிற்கு விஜயன் எனக்கூற காரணங்களாகும்.

.
மேலும்