விதியை வெல்ல முடியுமா ?

By News Room

நம் தலையெழுத்தை மாற்றும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உண்டு என்பதை இந்த கதை மூலம் உணர்வோம் 
பிச்சைக்காரன் ஒருவன் கோயில் வாசலில் தங்கியிருந்தான். கோயிலுக்கு வந்த மகான் ஒருவரிடம், ''ஐயா! என் விதியை மாற்ற முடியுமா'' எனக் கேட்டான். ''கைலாயம் சென்று சிவனை தரிசித்தால் உன் நிலை மாறும்'' என்றார். 

பிச்சைக்காரனும் உடனடியாக கயிலாயம் நோக்கிப் பயணித்தான். வழியில் செல்வந்தர் ஒருவரை சந்திக்க நேர்ந்து, அவரது வீட்டில் தங்கினான். சிவனை சந்திக்கச் செல்வதை தெரிவிக்கவே செல்வந்தர், ''என் மகளுக்கு பேசும் திறன் இல்லை. எப்போது அவள் பேசுவாள் என சிவனிடம் கேட்டுவா'' என வேண்டினார். அவனும் சம்மதித்து விடைபெற்றான். செல்லும் வழியில் மலை ஒன்று குறுக்கிடவே கடக்க முடியாமல் தவித்தான். அதையறிந்த மந்திரவாதி ஒருவர் நிபந்தனையுடன் உதவ முன்வந்தார். ''நான் நீண்ட காலமாக மோட்சம் பெற விரும்புகிறேன். கைலாயம் செல்லும் நீ என் எண்ணம் எப்போது நிறைவேறும் என கேட்டுச் சொல்ல வேண்டும்'' என்றார். பிச்சைக்காரனும் சம்மதித்தான். 

மந்திரவாதியும் மந்திரக்கோலால் எளிதாக மலையை கடக்க உதவினார். மீண்டும் பயணத்தை தொடர்ந்தான் பிச்சைக்காரன்.
வழியில் ஓடிய ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. அதைக் கடக்க யோசித்த போது, அங்கிருந்த ஆமை நட்பு பாராட்டியது. ''ஆற்றைக் கடக்க உதவுகிறேன். அதற்கு நீ கைம்மாறு செய்ய வேண்டும். என்ன செய்தால் பறக்கும் சக்தியை நான் பெற முடியும் என சிவனிடம் கேட்க வேண்டும்'' என்றது. பிச்சைக்காரனும் ஏற்கவே அவனை மறுகரைக்கு சுமந்து வந்தது.

இறுதியில் பிச்சைக்காரன் கைலாயத்தை அடைந்து சிவனிடம் ஆசி பெற்றான்.
அப்போது சிவன், ''பக்தனே! உனக்கு மூன்று வரங்கள் தர தயாராக இருக்கிறேன்'' என்றார். அவன் மனதிற்குள், '' விதியை மாற்றுவதோடு செல்வந்தர், மந்திரவாதி, ஆமை என மூவரையும் சேர்த்து நான்கு வரம் தேவைப்படுகிறதே.... ஆனால் மூன்று வரம் தருவதாகச் சொல்கிறாரே'' என யோசித்தான்.

வழக்கம்போல் பிச்சை எடுத்து தன் வாழ்நாளை கழிக்க முடிவெடுத்தான். கொடுத்த வாக்குறுதிபடி அந்த மூவரின் பிரச்னைக்கு தீர்வு கேட்கலாம் என சிவனிடம் தீர்வு கேட்டு விடைபெற்றான். அந்த விடைகளை தெரிவிக்கும் ஆவலுடன் கிளம்பினான். வழியில் முதலில் ஆமையைச் சந்தித்தான். ''உன் ஓட்டை கழற்றி எறிந்தால் உனக்கு பறக்கும் சக்தி வந்து விடும்'' என்றான். அப்படியே ஆமையும் ஓட்டை பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டு வானில் பறந்தது. அந்த ஓட்டில் பவளம், முத்துக்கள் இருந்தன. அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். பின்னர் மந்திரவாதியைச் சந்தித்தான். ''மந்திரக்கோலை விட்டு விட்டால் மோட்சம் கிடைக்கும்'' என்றான்.

மந்திரவாதியும் அதை பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டு மோட்சத்தை அடைந்தார். கடைசியாக செல்வந்தரை சந்தித்தான். ''உன் மகள் எப்போது அவள் மனதிற்கு பிடித்த ஆண்மகனைப் பார்க்கிறாளோ அப்போது பேசுவாள்'' என்றான். வீட்டின் மாடியில் இருந்து இறங்கி வந்த செல்வந்தரின் மகள் பிச்சைக்காரனைக் கண்டதும் மனதைப் பறி கொடுத்தாள். அவளுக்குப் பேச்சு வந்தது. செல்வந்தரும் தன் ஒரே மகளை பிச்சைக்காரனுக்கு மணம் முடித்து வைத்தார்.

அன்று முதல் அவனது வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை. நமக்காக வேண்டுவதை விட பிறர் நலனுக்காக வேண்டினால் கடவுளின் அருளால் நம் துன்பங்கள் ஓடி விடும். அத்துடன் நம் தலையெழுத்தை மாற்றும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உண்டு.

.
மேலும்