ஆசீவகமும் ஐயனார் வரலாறும்

By News Room

நூல் விமர்சனம்: 99/200
நூல்: ஆசீவகமும் ஐயனார் வரலாறும்
ஆசிரியர்: க. நெடுஞ்செழியன்
பக்கங்கள்: 450
விலை:₹700
பதிப்பகம்: மனிதம்

ஆசீவகத்தின் தோற்றம், வளர்ச்சி , பௌத்த, ஜை(சை)ன இலக்கியங்களில் ஆசீவகம் பற்றி உள்ள குறிப்புகள் மற்றும் ஆசீவகம் பற்றி பிறர் செய்த ஆய்வுகளை இலக்கிய கல்வெட்டு சான்றுகளோடு ஒப்பிட்டு மற்றும் நேரில் நிறைய இடங்களுக்கு சென்று கள ஆய்வு செய்து ஆசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். 

இந்த நூலின் மிகப்பெரிய வெற்றியும், பலமும் என்னவென்றால் நாம் இழந்த பலவற்றை வெளிக்கொண்டு வந்துள்ளது என்றும் கூறலாம். இன்று நாம் வணங்கிக் கொண்டு இருக்கும் ஐயனார்கள் உண்மையில் யார்? அவர்களுக்கு ஏன் சைவ உணவு படைக்கப்படுகிறது?  அவர்களுக்கு ஏன் குதிரை மற்றும் யானை வாகனமாக உள்ளது? 

வெள்ளையன், வெள்ளையம்மாள், பாண்டியன், பாண்டியம்மாள் இந்த பெயர்களுக்கும் ஆசீவகத்துக்கும் என்ன தொடர்பு? கருப்பசாமி, முனி இவர்கள் எப்படி வணங்கப்பட்டு வருகிறார்கள்? என்ன வரலாறு இவர்களுக்கு? ஆசீவகத்தின் எச்சங்கள் இன்று எல்லா பக்கமும் எப்படி பரவியுள்ளது? சைவ, வைணவ கடவுள்கள் எப்படி ஆசீவக அடையாளங்களை தனக்கானதாக எடுத்துக் கொண்டது? குறிப்பாக கொற்றவை, முருகன், சிவன். முன் காலத்தில் முருகன் கோவிலில் படையல் இட்டு படைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஏன் இல்லை என்பதற்கான பதிலும் இந்த நூலில் உள்ளது.

நாம் பல நூல்களில் முருகனின் ஊர்தி மயில், யானை, சேவல் என்று படித்து இருப்போம் இலக்கியங்களில் கூட நிறைய சான்றுகள் உள்ளது. ஆனால் இது உண்மையில் எப்படி இவருக்கு வந்தது ? சிவன்,கொற்றவை இருவருக்கும் யானைக்கும் என்ன தொடர்பு? இது எதை குறிக்கிறது? என பல வரலாற்று உண்மைகளை தெளிந்த ஆய்வுடன் நோக்கி கூறி இருப்பது மிகவும் அருமை.

நிறைய கோவில்களில் யானை, முதலை, யாளி இருந்தால் அதற்கு என்ன பொருள்?  இது எப்படி சமயப் போராட்டங்களை சுட்டி காட்டுகிறது என்பதை தகுந்த ஆய்வுகளுடன் ஆசிரியர் விளக்கியுள்ளது மிகச் சிறப்பு.

யானையைக் குறியீடாகக் கொண்டவர்கள் ஆசீவகர்கள். அவர்களைச் சைவர்கள் அழித்தார்கள் என்ற செய்தியைக் குறியீட்டு மொழியாக விளக்குவதே சிவன் யானைத் தோலைப் போர்த்திக் கொண்டதாகக் கூறுவதாகும். இக் குறியீடு தொடக்கத்தில் கொற்றவைக்குரியதாக இருந்து, பின்னரே சிவனுக்குரியதாக மாறுகிறது.

ஐயனாருக்குரிய சேவற்கொடியும், வெள்ளையானையும் முருகனுக்குரியனவாக மாற்றப்பட்டுள்ளன. ஆசீவகத்தின் வரலாற்றில் இதுவொரு கட்டம் என்றால், யானையின் தோலை உரித்த செயல்களைக் கொற்றவைக்கும் பின்னர் சிவனுக்கும் ஏற்றிச் சொல்லும் நிலை ஆசீவக வரலாற்றின் அடுத்த கட்டம் ஆகும்.

தமிழ்நாட்டில் பல ஐயனார்களை நாம் வழிப்பட்டு வருகிறோம் ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பெயர்களை தக்க ஆய்வு செய்து பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இந்த நூலை படித்த பிறகு ஒரு வேளை இருக்குமோ? என்ற சிந்தனை தான் நம்மை பற்றிக் கொள்ளும். அந்த அளவுக்கு ஆசீவகம்+ ஐயனார் தொடர்பு நம்முடன் இணைக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு செல்லும் போது படிக்கட்டில் ஏறி செல்வோம். அதில் எத்தனை படிக்கட்டுகள் உள்ளது? குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் இருந்தால் என்ன பொருள்? பதினெட்டாம் படி கருப்பு மற்றொரு பக்கம் பதினெட்டு படி ஐயப்பன் ? ஏன் இந்த பதினெட்டு? இதற்கு முன்னால் இந்த பதினெட்டு என்பது ஆசீவகத்தில் எதன் அடிப்படையில் இருந்தது? என்பதை எல்லாம் படிக்கும் போது பல வரலாற்று எச்சங்களை நாம் எப்படி எல்லாம் மறந்து உள்ளோம். தற்போது அவை இந்த அளவுக்கு நம் முன்னோர்களால் நமக்கு கடத்தப்பட்டு வந்துள்ளது என்பது மிகப் பெரிய ஆச்சர்யம் தான். உண்மையான வரலாறு எது என்றே தெரியாமல் ஆனால் நாம் அவற்றை வணங்கி கொண்டு உள்ளோம். இந்த நூலை படித்த பிறகு அது தெளிவு பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

நாம் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை இதெல்லாம் படித்து இருக்கிறோம் ஆனால் இதில் ஆசீவகம் பற்றி இருந்த குறிப்புகளை அறிய தவறி விட்டோம். நிறைய ஆய்வாளர்கள் பிற சமயங்களுக்கும் பிற இனத்தாருக்கும் தூக்கி கொடுத்து விட்டார்கள் நம் மெய்யியலை. அதை பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் மீண்டும் நமக்கே அளித்துள்ளார் தன் ஆய்வுகளின் மூலம்.

சாத்தன், மற்கலி, கணி, என பல பெயர்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. நிறைய ஆய்வாளர்களின் கருத்துகளை சுட்டிக் காட்டி, பிழை யான கருத்துகளை மறுத்தும், அதற்கு என்ன சரியான தீர்வு என்பதையும் பதிலாக கொடுத்துள்ளார் ஆசிரியர்.

கோவிலுக்கு சென்றவர்கள் இதுவரை அங்கு இருக்கும் சிலைகளை அல்லது மூலவரை மட்டும் தான் கவனித்து இருப்பார்கள். ஆனால் இந்த நூலை படித்த பிறகு சிலைகள் கூற வருவது என்ன? கோவிலில் இந்த மரம் ஏன் இங்குள்ளது? இந்த மரத்துக்கும் இந்த கோவிலுக்கும் என்ன தொடர்பு? இதை பற்றியெல்லாம் அறிந்து கொள்ள முயல்வார்கள்.

புதுக்கோட்டை, மதுரை, திருச்சி மற்றும் சில பகுதிகளில் ஆசீவகச் சான்றுகள் நிறையவே உள்ளது. இந்த நூலில் சில புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

பகுத்தறிவு என்ற சொல்லுக்கு பொருத்தமானவர்கள் தமிழர்கள். வானியல், அணுவியல், உளவியல் என பல துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். இந்த நூல் உறுதியாக நம் சிந்தனையை மாற்றும் படித்து முடித்த பிறகு.

.
மேலும்