தீராத வியாதியையும் தீர்த்தருளும் திருவெண்காடு சிவபெருமான் திருத்தலம்

By saravanan

திருவெண்காடு திருத்தலம் சீர்காழிக்கு அருகில் உள்ளது. நவக்கிரகங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம் எனவும் போற்றப்படுகிறது.

ஆரண்யேஸ்வர் என்கிற திருநாமத்துடன் சிவனார் காட்சி தந்தருளும் திருத்தலங்கள் பிரபலம். அதில் ஒன்று  வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர். மற்றொண்டு திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர்.

திருவெண்காடு திருத்தலத்தில் அகோர சிவத்தை வணங்கி வழிபட்டால், தீயசக்திகளை விரட்டுவார். துர்குணங்கள் கொண்டவர்களை விலக்குவார். புதன் பரிகாரத் தலமான திருவெண்காட்டு சிவனை வணங்குங்கள் தீராத வியாதியையும் தீர்த்தருள்வார் சிவனார்.

சோழ தேசத்தில், காவிரி ஆற்றை வைத்துக்கொண்டு கோயில்கள் குறித்து வைக்கப்பட்டன. காவிரியின் வடகரைக் கோயில்கள், தென்கரைக் கோயில்கள். வடகரையில் 63 கோயில்கள் தென்கரையில் 127 கோயில்களும் அமைந்துள்ளன. திருவெண்காடு திருத்தலம், காவிரி வடகரை திருத்தலம்.  திருவெண்காடு வடகரை திருத்தலங்களில் 11வது திருத்தலம்.

நோய் தீர்க்கும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது திருவெண்காடு.

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
 பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே
என்று இந்தத் தலத்து இறைவனைப் போற்றுகிறது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சீர்காழி முதலான ஊர்கள் வழியாக திருவெண்காட்டுக்கு பேருந்தில் செல்லலாம்.

காசி க்ஷேத்திரத்துக்கு இணையான கோயில் இதுவென்று போற்றப்படுகிறது.

மருத்துவாசுரன் எனும் கொடிய அரக்கன், சிவ வரம் பெறுவதற்காக, கடும் தவம் மேற்கொண்டான். சிவனாரும் அவனுக்கு வரமளித்தார்.  வரம் கிடைத்ததுமே, தேவர்களையும் முனிவர் பெருமக்களையும் துன்புறுத்தினான் மருத்துவாசுரன்.

மருத்துவாசுரன் எனும் தீயசக்தியை அறிந்த சிவபெருமான், அண்ட சராசரமும் நடுங்கும் வகையில், அகோர சிவமாக உருவெடுத்தார். அசுரனையும் வதம் செய்தார். அன்றில் இருந்து இன்றுவரை திருவெண்காட்டில், ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.

நவக்கிரகங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.  திருவெண்காட்டில் புதன் பகவானுக்கு தனிச்சந்நிதியே அமைந்துள்ளது.  

அருள்பெறுவோம் வாருங்கள்!

.
மேலும்