ஸ்ரீ பாலதண்டாயுதபாணி வாலீஸ்வரர் கோவில் வாலிகண்டபுரம்

By News Room

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி 
வாலீஸ்வரர் கோவில்
வாலிகண்டபுரம் பெரம்பலூர் மாவட்டம்

“ஏன் காமாட்சி, உன் அக்கவுண்ட்ல ஆயிரம் கோடி சேர்ந்திருக்குன்னு சொன்னியாமே... உன்கிட்டே எதுடீ அவ்வளவுபணம்?’
“ஏன் கணக்குல ஆயிரம்கோடி இருக்கறது வாஸ்தவம் தான். ஆனா, அத்தனையும் பணமா இல்லை. புண்ணியமா இருக்கு!’
“என்ன சொல்றே! அவ்வளவு புண்ணியம் உனக்கு எப்படி வந்திச்சு?’
“ஒரு கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். அவ்வளவுதான். அம்புட்டு புண்ணியம் சேர்ந்திடுச்சு!’
“எந்த கோயிலுக்கப் போனே? எப்படி அவ்வளவு புண்ணியம் வந்துச்சு? கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்!’

“கோயில் இருக்கற தலம், வாலிகண்டபுரம். சுவாமி, திருவாலீஸ்வரர், அம்பாள் வாலாம்பிகைங்கற பாலாம்பிகை.
வானர அரசனான வாலி, கொஞ்சம் ஜாலி பேர்வழிங்கறது எல்லாருக்கும் தெரிஞ்சவிஷயம். ஆனா தினமும் அவனோட முதல் ஜோலி, சிவபெருமானை வழிபடறதுதான். அதுக்கப்புறம்தான் சாப்பாடுகூட.
ஒரு சமயம் வாலிக்கு திடீர்னு ஒரு பயம் வந்தது. எப்பவும் இப்படி சபலத்தோடயே இருக்கறதால, தன்னோட பலம் எல்லாம் போயிடுமோங்கற அச்சம்தான் அது.
அதனால, மற்ற எல்லாத்தையும் ஒதுக்கிவைச்சிட்டு, சித்தம் முழுக்க சிவனை இருத்தி நித்தம் ஒரு தலம் சென்று வழிபட்டான் வாலி. மொத்தம் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது ஊருக்குப்போயாச்சு. திரேதா யுகத்துல பிரம்மா பூஜித்த ஒரு தலத்துல ஆயிரமாவது நாள் சிவ வழிபாட்டை வாலி செய்துகிட்டு இருந்தப்ப அவனுக்கு காட்சிதந்தார், சிவபெருமான்.’
“ஆயிரம் யானை பலம் எனக்கு வேண்டும். அதோடு, என் எதிரே வந்து நிற்பவர் எவரானாலும் அவர் பலத்தில் பாதி எனக்கு வந்துவிடவேண்டும்.’
வாலி கேட்ட வரம் உடனே கிடைச்சுது. அவனோட பலம் அதிகரிச்ச மாதிரியே தலைகனமும் கூடி“சு. அதனால அவன் மனசுல ஒரு எண்ணம் எழுந்தது. இப்போது சிவ பெருமானால் கூட என்னை ஜெயிக்க முடியாது. நான் அவர் எதிரில் போய் நின்றால், அவர் பலத்திலும் பாதி எனக்கு வந்..! அவனோட நினைப்பு முழுசா முடியறதுக்குள்ளே அவன் முன்னால வந்து நின்னுது ஒரு தண்டம்.
அதை அசட்டையா அசைக்க நெருங்கினான். அதேசமயம் அவனோட மொத்த பலமும் போய் மழுமையா நொறுங்கினான். அப்போதுதான் வாலிக்குப் புரிஞ்சுது அந்த தண்டத்தின் அற்றலுக்கு முன்னால் தான் வெறும் தண்டம்னு.
தலைகனம் விட்டு தண்டனிட்டான். தன்னை மன்னிக்க வேண்டினான். உடனே, அந்த தண்டத்துக்கு உரியவரான முருகன் அவன் முன்னால் காட்சிதந்தார்.
“ஆயிரம் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்தால் உன் சாபம் தீரும்...!’
குறைதீ வழிசொன்ன குமரனைக் கும்பிட்டுட்டு, உடனடியா ஒரு சிவலிங்கத்தை ஊஹூம், ஆயிரம் சிவலிங்கங்கள் ஒரே லிங்கத்துல அமைஞ்ச சகஸ்ர லிங்கத்தை ஆகாயத்துல பிரதிஷ்டை செஞ்சு கும்பிட்டான் வாலி. அவனோட சாபம் தீர்ந்தது.
முக்கண்ணனையும் முருகனையும் துதிச்ச வாலி, “என் சாபம் தீர்ந்த இந்த ஊர், என் பெயராலேயே அழைக்கப்பட வேண்டும். இத்தலத்தில் நீங்கள் என்றென்றும் எழுந்தருளி இருக்கவேண்டும்’ அப்படின்னு வேண்டினான்.
“சரி’ன்னு சொன்னார், சர்வேசன்.
இதோ இன்னிக்கும் அதே தலத்துல வந்த நாள் முதல் இந்த நாள் வரை, தன் அருள்ல எந்த மாற்றமும் இல்லாமல் கோயில் கொண்டிருக்கார் திருவாலீஸ்வரர்.
கோயிலோட தலபுராணக் கதை இது. இப்போ கோயிலோட அமைப்பைப் பார்க்கலாம்.
எழுநிலை கொண்ட ராஜகோபுரத்தின் வழியா உள்ளே நுழைஞ்சா, மனசுல இருந்து ஒரு சுமை உடனடியா குறையறது தெரியும். அதுக்குக் காரணம், அந்தக் கோபுரம்தான். தலையை உயர்த்தி கோபுரத்தை உச்சியிலேர்ந்து, கீழே வரைக்கும் முழுசா பார்த்தா, ஆயிரம் கோபுரங்கள் அதுல இருக்கறது தெரியும். வழக்கமாக காணப்படும் கோபுரம் தெய்வ வடிவங்கள் இங்கே இல்லை. அதற்கு பதிலா, சின்னச் சின்னதா ஆயிரம் கோபுரங்களைச் செதுக்கியிருக்காங்க.
ஒரு கோபுரத்தை தரிசிச்சாலே கோடி பாவம் விலகும். இங்கே ஆயிரம் கோபுரங்கள். ஆயிரம் கோடி பாவங்கள் விலகினா மனசோட பாரம் குறையாதா என்ன?
பாவம் விலகியாச்சு சரி... புண்ணியம்? அது, கோயிலுக்குள்ள போனா கிடைக்கும்.
முதல்ல நம்மைக் கவர்றது, வாயிலின் இடதுபுறம் இருக்கற திருக்குளமான சரவண தீர்த்தம். வறண்டு இருந்தாலும், அமைப்பும் அழகும் அசத்தலா இருக்கு. கி.பி. 1389ல் கட்டப்பட்டதாம் இது.
முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறைன்னு கம்பீரமாகவும், கலையழகோடும் இருக்கு கோயில். கிட்டத்தட்ட 1087 வருஷத்துக்கு முந்தி கட்டப்பட்ட கோயில்னு, பராந்தக சோழன்காலத்து கல்வெட்டை ஆதாரமா வெச்சு சொல்றாங்க.
மகா மண்டப நுழைவாயில் இடதுபக்கம், விசித்திரமான வடிவத்துல அமர்ந்திருக்கார், ஆனைமுகன். வலதுபக்கம் வள்ளி தேவசேனாபதி இருக்கார்.
கருவறையில் இறைவன் பாணத்திருமேனியரா பரவசக் காட்சியளிக்கிறார். கிருதயுகத்தில பிரம்மா வழிபட்டதால, பிரம்மபுரீஸ்வரர். திரேதாயுகத்துல வாலி வணங்கியதால் வாலீஸ்வரர். சங்ககாலத்துல கண்டீரக்கோ எனும் அரசன் பூஜித்ததால கண்டீர நாதர். திருவாலீஸ்வரமுடையார், திருவாலீஸ்வர மகாதேவர் இப்படி ஏராளமான பெயர்கள் இவருக்கு.
கரம் குவித்து சிரம் தாழ்த்தி சிவனை வணங்கிட்டு வலம் வந்தால், முதல்ல நாம பார்க்கறது வீரமும் அழகும் மிளிரக் காட்சி தரும் வேலவனின் திருவடிவைத்தான். சுமார் எட்டடி உயரத்தில், நம் ஏழ்பிறவி வினை தீர்க்கும் ஆறுமுகன், அஞ்சேல் என அபய வரதம் காட்டி நிற்கிற பிரம்மாண்டமான தோற்றம் வேறெங்கும் இல்லாத வித்தியாசமான அமைப்பு!
இடுப்புல ஒரு கரம் ஊன்றி, தண்டாயுதத்தை மறுகையில் ஏந்தி, இத்தலம் வருவோர்க்கெல்லாம் எப்போதும் நான் துணை இருப்பேன்னு சொல்லாமல் சொல்றது மாதிரி காட்சிதர்றான், பாலதண்டாயுதபாணி. அருணகிரிநாதர், திருப்புகழ்ல இந்த சரவணனை, பெரிய வாலி கொண்ட புரமே அமர்ந்து வளர் தம்பிரானே! என்று போற்றிப் பாடியிருக்கிறார்.
வடிவேலனை வேண்டிக்கிட்டு சுற்றுவதைத் தொடர்ந்தா, வலதுபுறம் ஆயிரம் லிங்கங்களை உள்ளடக்கிய சகஸ்ர லிங்கத்தைப் பார்க்கலாம். சகஸ்ர லிங்கத்தை வாலி ஆகாயத்துல பூஜித்ததை நினைவுக்கூர்ந்து இதை அøம்சிருக்காங்க. ஆயிரம் மடங்கு புண்ணியம் கிட்டும் இவரை வழிபட்டால்.
வழக்கமான கோஷ்ட தெய்வங்கள், சண்டேசர், நவகிரகங்கள் எல்லாம் இங்கேயும் இருக்காங்க. பிராகாரத்துல வள்ளி - தேவசேனா சமேத சுப்ரமண்யர் சன்னதி இருக்கு. இவரை, குன்றம் எறிந்த பிள்ளையார்னு சொல்லுது கல்வெட்டு.
பரிவாரதேவதையா, ஜேஷ்டாதேவி தன் பிள்ளைகளோட காட்சி தர்றதையும் பார்க்கலாம். வாராகி, சாமுண்டியோட இருக்கற ஜேஷ்டா தேவின்னும் சொல்றாங்க.
முன் மண்டபத்தின் வலதுபக்கம் தனிச் சன்னதியில பாலாம்பிகை வாலாம்பிகை, பிரகன்நாயகி என்றெல்லாம் அழைக்கப்படற அம்பிகை தரிசனம் தர்றா. அங்குச பாசம் ஏந்தி அபயவரதம் காட்டி நிற்கிற அன்னையை தரிசிக்கறப்போ ஏற்படற மனநிறைவுல, என்ன வேணும்னு வேண்டிக்கக் கூட மறந்துடுவோம்ங்கறதுதான் உண்மை.
மண்டபத்தோட இடதுபக்கம் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார், ஆண்டாள், கருடன், அனுமன் எல்லாரும் ஒருசேர காட்சி தர்றாங்க.
சிவபூஜை செய்ய வாலி லிங்கம் ஸ்தாபிச்சது, மாலை சாத்தினது, பூப்போட்டு அர்ச்சித்தது இப்படிப் பல சிற்பங்களை கோயில் முழுக்க பல தூண்கள்ல செதுக்கி இருக்காங்க.
ஆயிரம் கோபுரங்களை உள்ளடக்கிய ராஜகோபுரம்; வாலி ஆயிரம் முறை சிவவழிபாடு செய்ததைக் குறிக்கும் சகஸ்ர லிங்கம்; இவற்றோட இந்த ஆலய வளாகத்துல சூட்சும வடிவில் இருக்கற ஆயிரம் அண்ட லிங்கங்களும் இருக்கறதால, ஒரு தடவை வாலிகண்டபுரம் வந்து வாலீசரையும், பாலாம்பிகையையும் வணங்கினாலே ஆயிரம்கோடி மடங்கு புண்ணியம் சேர்ந்துடும்னு சொல்லுது, சகஸ்ர கோடி மகா புண்ய விதானம்! அமைதியான சூழல். கலையும் கடவுளும் சேர்ந்து இருக்கற கோயில். ஆயிரம்கோடி மடங்கு புண்ணியம் எல்லாம் கிடைக்கற தலம். போயிட்டு வாங்க. உங்களுக்கே அந்தப் புனிதம் புரியும்!

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் இருக்கிறது கோயில். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 13 கி.மீ.
- ஜெயாப்ரியன்

.
மேலும்