சிவஸ்தலம் பெயர்: திருநெடுங்களம்

By News Room

இறைவன் பெயர்

நித்யசுந்தரர்

இறைவி பெயர்

ஒப்பிலா நாயகி

தேவாரப் பாடல்கள்

சம்பந்தர்

மறையுடையாய் தோலுடையாய்

எப்படிப் போவது

திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மி. சென்றால் நெடுங்களம் அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
திருநெடுங்களம்
திருநெடுங்களம் அஞ்சல்
திருச்சி வட்டம்
திருச்சி மாவட்டம்
PIN - 620015
தொடர்பு : 0431 - 2520126
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

 

மக்கள் பேசும்போது மட்டும் இத்தலத்தை 'திருநட்டாங்குளம்' என்கின்றனர்.

தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றிக் கைத்தலம் பற்ற, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம், ஒளிமதிச்சோலை என்று வழங்குகிறது.

கோயில் இரண்டு கோபுரங்களுடனும்,இரண்டு பிரகாரங்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. 5 நிலை கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலத்தில் நானகு கரங்களுடன்அம்பாள் காட்சி தருகிறாள். வடக்கு வெளிப் பிரகாரத்தில் அகஸ்தியர் சன்னதியும், இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தமும் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும் உள்ளது.

உள்ளே கருவறையில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் நடுநாயகமாக விளங்கும் ஈசன் திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்த நிலையில் உள்ளார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம். கோயில் கோயில் கருவறையில் பார்வதி அரூபமாக உள்ளதாஎ ஐதீகம். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

நெடுங்களம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலையில் சூரிய ஒளி சுயம்பு மூர்த்தியாக உள்ள மூலவர் மீது விழுகிறது. இத்தலத்தின் தீர்த்தங்களாக அகத்திய தீர்த்தம் மற்றும் சுந்தர தீர்த்தம் ஆகியவை உள்ளன. சுந்தர தீர்த்தக் கரையில் உள்ள கருப்பண்ண சுவாமிக்குப் பானக நைவேத்யம் செய்து பலருக்கும் வழங்கினால் நோய் தீருமென்பது நம்பிக்கையாக இருந்து வருகின்றது. இத்தலத்தில் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது. இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி விந்தையான அமைப்புடையவராக விளங்குகிறார். யோக தட்சிணாமூர்த்தியாக சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார். அகத்தியர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் "இடர் களையும் திருப்பதிகம்" என்று போற்றப்படுகிறது. இப்பதிகத்தில் உள்ள 10 பாடல்களிலும் இடர்களையாய் என்ற குறிப்பைக் காணலாம். இடர்கள் நீங்கி இன்பம் பெற இப்பதிகத்தை படித்து வந்தால் நலம் பெறுவது உறுதி என்று சம்பந்தர் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

சிறப்புகள்

 

இங்குள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது.

மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது.

நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன.

இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.

கல்வெட்டில் இத்தலம் "பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்" என்றும்; இறைவன் பெயர் "நெடுங்களத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன

  K.S.BALAMURUGAN.

.
மேலும்