தருமை ஆதினம் பட்டண பிரவேச நிகழ்ச்சி - பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் உத்தரவு

By Senthil

மயிலாடுதுறை அருகேயுள்ள  தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேச நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதனிடையே, இந்நிகழ்ச்சிக்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, ஆதீன குருமார்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து முன்வைத்த கோரிக்கையை ஏற்று பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 22ஆம் தேதி பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், இன்று தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டண பிரவேச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜா சிவபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், பட்டணப் பிரவேச நிகழ்ச்சியின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பாதுகாப்பு கோரி இதுவரை ஆதீனத்தின் தரப்பில் விண்ணப்பிக்கவில்லை எனவும், பாதுகாப்பு கோரி விண்ணப்பித்தால் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் தருமபுரம் ஆதினத்தை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்பிக்கும்படி தருமபுரம் ஆதீனத்துக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன், ஆதீனத்தின் சார்பில் அளிக்கப்படும் விண்ணப்பத்தை பரிசீலித்து பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

.
மேலும்