ஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா?

By News Room

முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி விரதம் ஆகியவை முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாகும்.

கார்த்திகை என்பது முருகனின் பெயர்களுள் ஒன்றான கார்த்திகேயன் என்ற பெயரை குறிக்கும். அதுவே காலப்போக்கில் கிருத்திகை என்று மருவியுள்ளது. எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடி கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது.

உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப்பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த அறுபடை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகை விழாவும் ஒன்று.

உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோவில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமர்சையாக நடக்கும்.

தை மாத கார்த்திகையை விட ஆடி மாத கார்த்திகை சிறப்பானதாகும். இது தேவர்களின் மாலைக் காலம் ஆகும். இக்காலத்தில் உப்பில்லா உணவை உண்டு கார்த்திகை விரதம் இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாத கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. 

.
மேலும்