சுஜாதாவின் சொர்க்கத் தீவு புத்தகம்

By News Room

ஆண்டு விழா கொண்டாட்டத்திற்காக அறிவியல் பிரிவில் வாசித்த புத்தகம் தான் சொர்க்கத் தீவு...

சுஜாதா அவர்களின் முதல் அறிவியல் புனைவு கதை தான் சொர்க்கத் தீவு...

மனிதனின் ஆகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று கணினி என நாம் அறிந்ததே

சொர்க்கத் தீவை சத்யா என்னும் ஒருவன் ஒரு கணினியின் உதவியால் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.
அவன் தான் அங்கு தலைவன். தன்னை தானே கடவுள் என சொல்லிக் கொள்கிறான்..

மனிதனின் உணர்ச்சிகளான அன்பு, கோபம், பாசம், பொறாமை, பழி உணர்வு, வெறி, காதல், காமம் என எதுவும் இன்றி வாழ்வதை நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா...

அப்படி எதுவும் இன்றி வாழ்ந்தால் அது எப்படி இருக்கும்...

சொர்க்கத் தீவில் வசிக்கும் அனைவரும் அப்படி ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார்கள்..

இது போன்ற எந்த  உணர்வுகளையும் அறியாமல் வளர்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சில வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

சொந்தமாக சிந்தனை செய்யும் அறிவோ அவ்வாறு சிந்தனை செய்ய வேண்டும் என்ற உணர்வோ ஏற்படாமல் கட்டுப்படுத்த தினமும் அவர்களுக்கு மருந்து வழங்கப்படுகிறது..

கொடுக்கப்படும் மருந்தின் அளவு ஒரு கணினியின் கட்டளைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது...

ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் அவர்கள்  ரோபோவை போலவே எவ்வித ஆசாபாசங்களும் இன்றி ஒரு மெஷின் போலவே வாழ்கிறார்கள்...

ஐயங்கார் என்பவன் கணினித் துறையில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண சென்னைவாசி..

அவனது அலுவலகம் ஒரு கணினியை இவனது கட்டுப்பாட்டில் கொடுத்திருக்கிறது. அது சரியாக இயங்குகிறதா என கண்காணிப்பதே இவனது வேலை...

எப்பொழுதும் போல அன்றும் வேலைக்கு வரும் ஐயங்கார் ஒரு பெண்ணால் சொர்க்கத் தீவிற்கு கடத்தப்படுகிறான்..

அங்கு போன பின்பு தான் அங்கு இருப்பவர்களின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவனிற்க்கு தெரிகிறது. ஆனால் தான் எதற்காக கடத்தபட்டோம் என்ற விவரம் அறியாமல் குழம்புகிறான்.

அவனது காவலிற்கு ஒரு அழகான பெண் இருக்கிறாள். அவனது விருப்பப்படி நடந்து கொள்கிறாள். சில நாட்கள் அந்த இன்பத்தில் திளைக்கும் ஐயங்கார் அதற்கு பின்பே தனக்கு இருக்கும் கட்டுப்பாடுகளையும் காவலையும் பற்றி அறிந்து கொள்கிறான்...

சொர்க்கமாக தோன்றிய அனைத்தும் சிறையென்று உணர்கிறான். ஆனால் தான் எதற்காக கடத்தப்பட்டோம் என்று மட்டும் யாரிடம் கேட்டும் பதில் வரவில்லை...

அவனிற்கு ஒன்று மட்டும் புரிகிறது. இங்கு நடக்கும் அனைத்திற்கும் காரணம் சத்யா என்ற ஒரு தனிமனிதன். அவனிற்கு தன்னால் ஏதோ ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது என. . அதனால் சத்யாவை சந்திக்கும் தருணத்திற்கு காத்திருக்கிறான்.

அதன்படியே சத்யாவிடம் இருந்து இவனிற்கு அழைப்பு வருகிறது. ஆனால் அதற்கு முன்னே அவனை பார்த்துக் கொண்ட அந்த பெண் இவனிடம் தனியாக பேச வேண்டும் என ரகசியமாக சொல்கிறாள்..

ஐயங்கார் ஆர்வம் தாங்காது அவளை சந்திக்க போகவும் அவளும் அவள் காதலனும் சொர்க்கத் தீவில் நடக்கும் அனைத்தையும் சொல்லி தங்களுக்கு உதவும்படி கேட்கிறார்கள்...

சத்யாவை அவன் சந்திக்கப் போக அவனோ தான் ஒரு பெரிய விஷயம் செய்வது போல பெருமையாக சொல்லிக் கொள்கிறான்...

கணினி சில நாட்களாக சரியாக வேலை செய்யாததால் இங்கு குழப்பம் நடப்பதாக சொல்கிறான்..

அதனால் கணினியை சரிப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் அதற்கு சன்மானமும் திரும்ப வீட்டிற்கு போகலாம் என்றும் கேட்டுக் கொள்கிறான்..

ஐயங்கார் வேறு வழியின்றி அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு கணினியை பழுது பார்க்கிறான். ஆனாலும்  அந்த பெண்ணும் அவளது காதலனும் சொன்னதே மனதிற்குள் ஓடுகிறது..

விரைவிலேயே கணினியை சரிப்படுத்தி விட்டு அதை சத்யாவிடம் சோதித்தும் காட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான்...

என்னதான் சொன்ன வேலையை முடித்துக் கொடுத்தாலும் சொன்ன வாக்கை சத்யா காப்பாற்றுவானா என பயந்து கொண்டிருக்க சத்யா சொன்னபடியே அனுப்பி வைக்கிறான்.

ஐயங்கார் தன் வீட்டில் இருந்தபடியே சொர்க்கத் தீவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அசை போட்டுக் கொண்டிருக்கிறான்..

சத்யாவை அவன் ஏமாற்றி அங்கிருக்கும் மக்களை அவன் காப்பாற்ற தேவையானதை செய்து முடித்ததை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறான்..

அதுவரைக்கும் கதையை படித்து விட்டு ஐயங்காரை திட்டிக் கொண்டிருக்கும் நமக்கு ஒரு டுவிஸ்ட்டை வைத்து கதையை முடிக்கிறார் சுஜாதா..

அப்படி என்ன செய்தான்... எப்படி சத்யாவை ஏமாற்றினான் என்பதே கதையின் முக்கிய திருப்பம்...

படிக்க விறுவிறுப்பான கதை.. அறிவியல் முன்னேற்றத்தை எண்ணி நாம் பெருமைப்படுகிறோம். அப்படி இருக்க அனைத்தும் இயந்திரங்களால் கட்டுப்படுத்தப்படால் நமது வாழ்க்கை முறை எப்படி மாறும் என கண் முன்னே ஒரு பயத்தை காட்டுகிறது சொர்க்கத் தீவு...

-----------------------------------------------------------------------------
#22RM155
83/ 100+
புத்தகம் : சொர்க்கத் தீவு
ஆசிரியர்: சுஜாதா
பக்கங்கள்: 168
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
விலை: 80

-----------------------------------------------------------------------------

.
மேலும்