புத்தக விமர்சனம்: கண்பேசும் வார்த்தைகள்

By News Room

எழுத்தாளர்: நா. முத்துக்குமார்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்

ஒவ்வொரு அத்தியாயத்திலும் தனது பாடல் ஒன்றின் வரிகளைக் கொடுத்துள்ளார். அந்தப் பாடல்தான் அவ்வத்தியாயத்தின் பேசு(பாடு)பொருள்.

ஆனால்...

அந்தப் பாடல் வரிகளை அத்தியாயத்தின் கடைசியில் வைத்துவிட்டு, முதலில் பல சுவாரசியமான விடயங்களைப் பற்றி பேசுகிறார். அந்தப் பாடலின் சூழல், அதை எழுத தான் அணுகப்பட்டது, அப்பாடலின் கரு, அப்பாடலின் சில முக்கிய வரிகள் தன் மனதில் உதித்ததன் பிண்ணனி, இப்படி பல சுவாரசியமான விடயங்களைப் பற்றி பேசுகிறார்.

ஒவ்வொரு அத்தியாயமும் சம்பந்தமில்லாமல் எங்கோ ஆரம்பிக்கும். இரு பக்கங்கள் வரை எந்தப் பாடலைப் பற்றி சொல்லப்போகிறார் என்று யூகிக்க முடியாது. அந்த சஸ்பென்ஸ் தான் படிப்பதற்கான சுவாரசியத்தைக் கூட்டிப் பெருக்குகிறது.

பல வருடங்களுக்கு முன் ஏதேனும் ஒரு நிகழ்வைக் கண்டிருக்கிறார், அப்போது  அந்நிகழ்வைப் பற்றி மனதில் சில வரிகள் தோன்றியிருக்கின்றன. மூளையின் ஞாபக அடுக்குகளில் சேமித்து வைக்கிறார். பல வருடங்கள் கழித்து ஒரு பாடல் எழுதவேண்டிய சூழலில் அந்நிகழ்வைப் பற்றி நினைவுகூர்ந்து அதே ஞாபக அடுக்குகளில் இருந்து அவ்வரிகளை எடுத்து பட்டி டிங்கரிங் செய்யாமல் உள்ளது உள்ளபடியே உபயோகிக்கிறார். இதையே பலப்பல பாடல்களுக்கு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிகழ்வு/வரிகள் என்று ரிப்பீட்ட்ட்டு....

இவருக்கு அதிர்ஷ்டவசமாக அமைந்த முக்கிய அம்சங்கள் —கவிதை வரிகளை ஊக்குவித்த இசையமைப்பாளர்களும் இயக்குநர்களும். அவர்களை நினைவுகூர்கிறார்.

பல பாடல்களுக்கு சூழ்நிலைக்கேற்ப வரிகளை முதலில் எழுதச் சொல்லி பிறகு அவ்வரிகளுக்கு மெட்டு போட்டிருக்கிறார்கள் பல இசையமைப்பாளர்கள். அதனால்தான் தன் கடந்த கால அனுபவங்கள், சூழல்கள், எதிர்கொண்ட நிகழ்வுகள், அவற்றைப் பற்றி தன் மனதில் தோன்றிய வரிகளை சுதந்திரமாக எழுத முடிந்திருக்கிறது.

இவர் இதில் சொல்லியிருக்கும் பல பாடல்கள் பிரபலமானவை. அதனால் எவருக்கும் நெருக்கம் உணர முடியும்.

பல பாடல்களின் வரிகள் ஏற்கனவே என்னைக் கவர்ந்தவை. இப்போது அவ்வரிகளின் பிண்ணனி பற்றியும் விரிவாகத் தெரிந்ததால் இன்னமும் ரசிக்கலாம்.

மொத்தத்தில்
ஒரு மழைக்கால மாலையில் பசுமையான செடி, கொடிகள் 
இருபுறமும் அமைந்த 
ஒரு மலையின் மீது 
போடப்பட்ட சாலையில், 
சொச்சம் பேர் மட்டுமே 
பயணிக்கும் பேருந்தின்
ஐன்னலோர இருக்கையில்
மழைச்சாரல்
மிருதுவாய் தெறிக்க
மலரும் நினைவுகளை
அசைபோடும் மனதுடன்
பயணிக்கும்
உணர்வைத் தருகிறது
இப்புத்தக வாசிப்பனுபவம் !! 

.
மேலும்