புத்தகம்: மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

By News Room

ஆசிரியர்: வ. ராமசாமி

பாரதியாரின் தகப்பனார் சின்னச்சாமி ஐயருக்கு எட்டயபுர சமஸ்தானத்துக்கும் இடையே அளவு கடந்த நேசம். மேனாட்டு இயந்திரங்களை எவர் தயவும் இல்லாமல் பிரித்து மறுபடி பூட்டக்கூடிய சக்தி பாரதியின் தகப்பனாருக்கு உண்டு. பாரதி கணிதம் அல்லது இயந்திரத் தொழிலில் ஈடுபாடு கொள்ள வேண்டுமென அவர் தந்தை விரும்பினார். பாரதியைக் கணக்கு போட அழைத்தால் மனத்துக்குள்ளேயே கணக்கு , பிணக்கு , வணக்கு , மணக்கு , ஆமணக்கு என அடுக்கிக் கொண்டே போவார். பாரதிக்கு கவிதையில் இருந்த நாட்டம் எனக்கு ஏனோ இல்லை.
தாயில்லாப் பிள்ளை: 
          தெருவில் ஏதோ ஒரு பிள்ளையை தாயில்லா பிள்ளை என்று யாரேனும் கூறிவிட்டால் பாரதியார் ஒருகணம் திகைத்து அங்கு நின்று விடுவார். அம்மா மீதான மயக்கம் என்றேனும் எனக்கு தீருமா என நண்பர்களிடம் குறைப்பட்டுக் கொள்வார்.
எட்டயபுரம் சமஸ்தானத்தில் பாரதி: 
          பாரதியாருக்கு ' பாரதி' என்ற பட்டம் எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்களால் வழங்கப்பட்டது. பாரதியின் மெலிந்த தேகத்தைப் பார்த்த ராஜா பூரணாதி லேகியம் சாப்பிட்டால் எல்லாம் சரியாகும் என்று பாரதிக்கு பழக்கிய தீய பழக்கம் அவரை தொடர்ந்து கொண்டே இருந்தது. 
பல மொழிகளில் வல்லவர்: 
          காசியில் இருந்த‌ பொழுது ஹிந்தியில் தேர்ச்சி பெற்றார். ஆங்கில நூல்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். 
பத்திரிக்கைப் பணி: 
         சுதேசமித்திரன்,  இந்தியா, கர்மயோகி போன்ற பல பத்திரிகைகளில் பாரதியார் பணியாற்றினார். இந்தியா என்ற வாரப் பத்திரிக்கையில் சுதந்திர வேட்கை பற்றி அவர் எழுதியதால் அப்பத்திரிகை பரபரப்பாக விற்கப்பட்ட காலமும் உண்டு. 
புலவனின் வறுமை: 
             கவிதையின் மீது காதல் கொண்ட பாரதியின் வாழ்க்கையில் பல சமயங்களில் வறுமை வாட்டியது. பாரதியின் பாடல்கள் மீது பற்றுக் கொண்ட பலர் அவருக்கு உதவ முன்வந்தாலும் எல்லா உதவிகளையும் அவர் ஏற்றுக் கொண்டதில்லை. கிடைக்கும் பணத்தையோ பொருளையோ தனக்கென வைத்துக் கொள்ளும் மனம் இல்லாதவர். அஃறிணை உயர்திணை என்ற பாகுபாடெல்லாம் அவர் உதவி செய்யும் பொழுது பார்ப்பதில்லை. 
பாரதியின் சுதந்திர வேட்கை: 
             பாரதியின் பாடல்கள் மீது பற்றுக் கொண்ட இளைஞர்கள் அவர் பாடலுக்காக காத்திருந்தனர். பாடல்கள் மூலம் சுதந்திரத் தீயை மக்களின் மனதில் மூட்டியவர் அவர். பாரதியார் பாடல்கள் பாடத் தொடங்கினால் மணிக்கணக்கில் பாடிக்கொண்டே இருப்பார். பாடல்களின் மீது சலிப்பு கொண்டு கூட்டம் ஒருநாளும் கலைந்ததில்லை. ஆங்கிலேயர்களை நாட்டிலிருந்து விரட்டாமல் சுதந்திரம் சாத்தியமில்லை என்பதை நம்பியவர். வெடிகுண்டுகள் தயாரித்து ஆங்கிலேயரை அழித்துவிட வேண்டும் என்ற அளவிற்கு ஆத்திரம் ஆங்கிலேயர்களின் மீது அவருக்கு. 
மகாகவி பாரதி: 
          நூல்களை வாசிக்கும் பொழுது அதில் ஏதேனும் ஒரு கதாபாத்திரமாக நாம் மாறி விடுவதுண்டு. பாரதியோ தான் படைக்கும் நூலிலுள்ள எல்லா கதாபாத்திரங்களாகவும் மாறி விட்ட படியால் தான் மகாகவி என்ற பெயரைப் பெற்றார். கண்ணனைத் தோழனாகவும், குழந்தையாகவும், காதலனாகவும் மாறி மாறி பாடிய பாடல்கள் இதற்கு நல்ல உதாரணம். பாரதியார் குயில் பாட்டு பாடுவதற்கு கதைக்களமாக இருந்தது கிருஷ்ணசாமி செட்டியாரின் தோப்பு. புதுச்சேரியில் புயல் வந்து எல்லா மரங்களும் சாய்ந்து  விட்ட போதிலும் கூட இந்த தோப்பிற்கு பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. 
             மரபுக் கவிதைகளால் கவிஞர்கள் மன்னர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த தருணத்தில் எளிய பாடல்களின் மூலம் ஏழை மக்களின் மனங்களைக் கவர்ந்தவர் மகாகவி பாரதி. 
        " சாதிகள் இல்லையடி பாப்பா" என்று குழந்தைகளுக்கு கூட சமுதாய சீர்திருத்தத்தை அறிவுறுத்தியவர் சமூக சீர்திருத்தவாதி பாரதி. 
      " ஆணுக்கிங்கே  பெண் இளைப்பில்லை" என்று பெண் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் பாரதி. 
       " ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" போன்ற பாடல்களைப் பாடி மக்கள் மனதில் விடுதலை வேட்கையை தூண்டிய சுதந்திரப் போராட்ட வீரர் பாரதி.

.
மேலும்