பாரதியார் கவிதைகள்

By News Room

பரந்து விரிந்த பழைய தமிழிலக்கிய மாளிகைக்குள் அடியெடுத்து வைப்பவர்கள், முதலில் "பாரதி" என்ற நுழைவாயிலின் வழியாகத்தான் பெரும்பாலும் உள்ளே பிரவேசிக்கிறார்கள். ஏனெனில், பாரதி, பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான ஒரு இணைப்புப் பாலம்.. மரபில் வேரூன்றிப் புதிய பூக்களைக் கொடுத்த புரட்சி விருட்சம்...

பாரதியைப் புரிந்துகொண்டால், அவனது வார்த்தை பிரயோகங்களை, கவிதை வீச்சுகளை, கவிமொழி நடைகளைத் தெளிந்துவிட்டால், அவன் காலத்துக்கு முந்தைய மரபிலக்கியங்களில் புலமை பெறுவது ஒருவருக்கு எளிதாகிவிடும். அவன் காலத்துக்குப் பிந்தைய இலக்கியங்களை உள்வாங்கிக்கொள்வதும் சுலபமாகிவிடும். எனவே, தமிழிலக்கிய வானில் சிறகை விரிக்க அவாவும் இளைய தலைமுறையினர் முதலில் பாரதி என்னும் விண்வெளியை,  தாங்கள் பறந்து பழகும் இடமாகத் தேர்வுசெய்வது மிகப் பொருத்தமாயிருக்கும்.

இதைக் கருத்தில்கொண்டு, பாரதியார் கவிதைகள் முழுவதற்கும் உரை எழுதப்பட்டு, மூலமும் உரையும் அடங்கிய பதிப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. இது நான்காவது பதிப்பு.

கவிதைகளில் உள்ள வார்த்தை எதுவும் விடுபட்டு விடாமல் எல்லாச் சொற்களையும் உள்வாங்கிக்கொண்டு எழுதப்படும் பொழிப்புரையாக உரையை எழுதியிருக்கிறேன். தேவையான அருஞ்சொற்பொருளும், இலக்கணக் குறிப்பும் கொடுத்திருக்கிறேன். மாணவர்களுக்கும், புதிதாக இலக்கியப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் இந்நூல் உச்சபட்சமாக உதவக்கூடும்.

பாரதியார் கவிதைகள் எளிமையானவைதானே, அவற்றிற்கு உரை தேவையில்லை என்று சில புலவர்கள் சொல்லக்கூடும். இது புலவர்களை இலக்காக வைத்து எழுந்த நூல் அல்ல, தமிழிலக்கியப் பரப்பிற்குள் புக விரும்பும் புதியவர்களை இலக்காகக்கொண்டு உருவான நூல்! (பாரதியாரே தம்முடைய கவிதைகள் சிலவற்றிற்குப் பொழிப்புரையும், குறிப்புரையும் எழுதியிருக்கிறார்)

இந்நூலைக் கண்கவர் வனப்புடன் சிறந்த கட்டமைப்புடன் கற்பகம் புத்தகாலயம் திரு. நல்லதம்பி அவர்கள் அச்சுவாகனம் ஏற்றியிருக்கிறார். காலத்தின் தேவையைக் கருதி மக்கள் மன்றத்தில் வந்திருக்கின்ற நூல்... பாரதியார் கவிதைகள் எல்லாவற்றிற்கும் உரையுடன் வந்திருக்கும் முதல்நூல்...
              - பத்மதேவன்

நூல் விவரம்:
பாரதியார் கவிதைகள் (மூலமும் உரையும்)
உரையாசிரியர்- கவிஞர் பத்மதேவன்.
பக்கங்கள்- 1096.
விலை- ரூ.900.

நூல் வெளியீடு:
கற்பகம் புத்தகாலயம்,
தி.நகர்,
சென்னை-17.
தொடர்பு எண்:   9380623980
 

.
மேலும்