வீல்சேரில் வந்த வெள்ளிப் பதக்கம்!

By News Room

இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் இந்தியாவுக்கு இனிப்பான செய்தியை வழங்கியிருக்கிறார் பவீனா படேல்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில், வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் இந்த வீல் சேர் வீராங்கனை.

கடந்த சில நாட்களுக்கு முன் டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த பாரலிம்பிக் போட்டி.

இன்னும் சொல்லப்போனால் ஒலிம்பிக் போட்டியை விட அதிக சவாலானதாக பாரலிம்பிக் போட்டி கருதப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், மற்ற வீரர்களுடன் மட்டும் மோதினால் போதும். ஆனால் பாரலிம்பிக் போட்டியில் அப்படியில்லை. எதிரில் நிற்கும் வீரர்களோடு மட்டுமின்றி, தங்கள் உடலில் உள்ள குறைகளோடும் போராட வேண்டியிருக்கும்.

அந்த வகையில் ஒலிம்பிக்கை விட பாராலிம்பிக் போட்டி அதிக கடினமானதாக கருதப்படுகிறது.

இந்த பாராலிம்பிக் போட்டியில்தான் டேபிள் டென்னிஸில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார் பவீனா படேல்.

இவரது முழுப்பெயர் பவீனா ஹஸ்முக் பாய் படேல். குஜராத்தில் உள்ள வாத்நகர்தான் அவரது சொந்த ஊர். அவரது அப்பா ஹஸ்முக் பாய் படேல், உள்ளூரில் சிறியதாக கடை நடத்தி வந்துள்ளார்.

முதல் 12 மாதங்கள் வரை, உடலில் எந்த குறையும் இல்லாதவராகத்தான் பவீனா இருந்துள்ளார்.

அதன் பிறகுதான் போலியோமிலிதிஸ் பிரச்சினையால் அவரது கால்கள் செயலிழந்துள்ளன.

இந்த நிலையில் இருந்து பவீனாவை மீட்க அவரது அப்பா முடிந்தவரை முயன்றார். அறுவைச் சிகிச்சைகூட செய்யப்பட்டது.

ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகான உடற்பயிற்சிகளை முறையாகச் செய்யாததால், அவரால் மீண்டுவர முடியவில்லை. சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையைக் கழிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மாற்றுத் திறனாளியாக தங்கள் மகளின் வாழ்க்கை இருண்டு விட்டதே என பவீனாவின் பெற்றோர் கவலைப் பட்டுள்ளனர். ஆனால் மன உறுதி படைத்தவரான பவீனா, தனது குறைகளைக் கடந்து வாழ்க்கையில் வெற்றிபெறத் திட்டமிட்டார்.

நன்றாக படித்து ஆசிரியை ஆவது அவரது கனவாக இருந்துள்ளது. ஆனால் மாற்றுத் திறனாளி என்பதால், இதில் வெற்றிபெற முடியாமல் போனது.

இந்தச் சூழலில் மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கம் நடத்திவந்த கம்யூட்டர் பயிற்சியில் பவீனாவை அவரது அப்பா சேர்த்தார்.

இங்கு படிக்கும்போதுதான் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரான லாலா தோஷி என்பவரை அவர் சந்தித்துள்ளார். அவர் தந்த ஊக்கத்தால் டேபிள் டென்னிஸ் பயிற்சியில் ஈடுபட்ட பவீனாவுக்கு, பின்னர் அதுவே வாழ்க்கையாகிப் போனது.

ஆனால் தினமும் டேபிள் டென்னிஸ் பயிற்சி மையத்துக்கு செல்ல 2 பேருந்துகளில் மாறிச் செல்ல வேண்டியிருந்தது.

நமது ஊரில் பேருந்துகள் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த அளவில் வசதியாக இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

பல பேருந்துகளில் அவர்கள் ஏறுவதற்கே சிரமமாக இருக்கும். ஆனால் அந்தச் சிரமங்களை ஏற்றுக்கொண்ட பவீனா, ஊன்றுகோல்களின் உதவியால் மிகுந்த சிரமங்களுடன் பயிற்சிகளுக்கு சென்றார்.

வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்ட இந்த காலகட்டத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்த வீரர் ஒருவர் பவீனாவுக்கு உதவியாக இருந்தார்.

ஆரம்பத்தில் உள்ளூர் போட்டிகள் சிலவற்றில் வெற்றிபெற்ற அவர், பின்னர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தடம் பதிக்கத் தொடங்கினார்.

2011-ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த தாய்லாந்து டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், இதன்மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறினார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வென்ற இவர் தனக்கு ஒரு காலத்தில் உதவிய கிரிக்கெட் வீரரான நிகுல் படேலை திருமணம் செய்துகொண்டார்.

ஒரு காலத்தில் போட்டிகளுக்காகவும், பயிற்சிக்காகவும் ஷேர் ஆட்டோக்களிலும், பேருந்துகளிலும் பயணித்த பவீனா, பின்னர் விமானங்களில் பறக்கத் தொடங்கினார்.

33 நாடுகளில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்ற பவினா, பல போட்டிகளில் பட்டங்களை வென்றுள்ளார். இப்போது அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

.
மேலும்