இலங்கைக்கு நிவாரண பொருட்கள்- முதலமைச்சர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

By Senthil

இலங்கையை பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அவதியுற்று வருகின்றனர். அந்நாட்டுக்கு  இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. 

இந்நிலையில், இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது.

இதையடுத்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழு இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளது. 
இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

முதற்கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன.

.
மேலும்