மருத்துவ படிப்புக்கான தரவரிசை வெளியீடு

By Senthil

இந்தியா முழுவதும் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரத்து 349 இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 650 இடங்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், அரசு கல்லூரியில் 200 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 1,760 இடங்கள் என மொத்தம் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

இதில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 19-ந் தேதி தொடங்கி ஜனவரி 7-ந் தேதி வரை ‘ஆன்லைன்’ மூலம் பெறப்பட்டன.

இளநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த தகுதியான மாணவ-மாணவிகளின் தர வரிசை பட்டியல் 24-ந் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை நேற்று அவர் வெளியிட்டார். மேலும் அவர், அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் பெயர் பட்டியலையும், முதல் 10 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பெயர்களையும் வெளியிட்டார்.

அப்போது தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, கூடுதல் இயக்குனர் டாக்டர் வசந்தா மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

.
மேலும்