தொடங்கியது மாம்பழ சீசன் - வியாபாரிகள் மகிழ்ச்சி

By Senthil

மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் சேலம் மார்க்கெட்டுக்கு மல்கோவா, சேலம் பெங்களூரா மாம்பழங்கள் வரத்து சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, அடிமலைபுதூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, ஏற்காடு அடிவாரம், தும்பல், கருமந்துறை, வாழப்பாடி, மேட்டூர், காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.

இந்த பகுதிகளில் பறிக்கப்படும் மாம்பழங்கள், சேலம் மார்க்கெட்டுக்கும், தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக சேலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மாம்பழம் அனுப்பப்படுகிறது.தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி இருப்பதால், சேலம் மார்க்கெட்டுக்கு மல்கோவா, குண்டு, சேலம் பெங்களூரா, செந்தூரா, குதாதத், கிளிமூக்கு உள்ளிட்ட ரகங்களின் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் வரை நாள் ஒன்றுக்கு 10 டன்னாக இருந்த வரத்து, தற்போது 50 டன்னாக அதிகரித்துள்ளது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். மேலும், சேலம் மார்க்கெட்டில் இருந்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், கேரளாவுக்கும் அதிகளவில் அனுப்பப்படுகிறது. மே 1ம் தேதிக்கு மேல் வரத்து 100 டன்னாக அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

.
மேலும்