மகாகவியின் கடைசிப் பயணம்!

By News Room

செப்டம்பர் 11
நள்ளிரவுத் தாண்டி மணி 
ஒன்றரை...
காலனை எட்டி உதைக்கப் 
பார்த்தவன் 
கால்களோடு கரங்களும் 
கட்டப் பட்டதோஒ!

ஒரு மாமணியின் நாவது 
அறுந்து போனது 
புதிய கோணங்கிச் சத்தம் 
நின்று போனது... 
எங்கள் சுதேசிச் சூரியன் 
மறைந்து போனது... 

வேதாந்த ஊற்று அது 
வெற்றுடம்பு ஆனது  
ஐயகோ! என்ன செய்வேன் 
எங்கள் மகாகவி 
மண்ணை விட்டுச் சென்றானே!

பிரபஞ்ச இயக்கத்தோடு 
தன்  இதயத்தை 
இணைத்திருந்தவனின் 
இயக்கம் நின்றதே 

பிரபஞ்ச மகாகவி 
விரைந்து போய் விட்டான் 
ஷெல்லியின் தாசன் 
எத்திசைப் பறந்தானோ...  

விண்ணில் பறந்தானா 
இல்லை ... 
விடுதலை பெறும்வரை 
மண்ணிலே இருக்கும் 
வரமதை பெற்றானா 

கனன்றுக் கொண்டிருந்த 
கவிச் சூரியன் 
அமைதியில் குளிர்ந்ததே 
வெடிச்சிரிப்பில் விண்ணவரை 
ஈர்ப்பவன் நொடிப் பொழுதில் 
மறைந்தானே!

பக்கத்தில் நின்றுப் 
பார்த்து கொண்டு இருந்தவர்களின் 
கண்களில் எல்லாம் 
கண்ணீர்ப் 
பெருக்கெடுத்து ஓடுகிறது    

விடியலை நோக்கி 
விடுதலை வேள்வி
செய்யச் சொன்னவன் 
இல்லாத காலைப் -
'பொழுது கருப்பாகவே விடிந்தது'

இரவிலும் ஒளிர்ந்த 
இளஞ்சூரியனின் மறைவு 
சொல்லி விடப்பட்டது... 
சொந்தமான நண்பர்களுக்கு 

சொல்லொண்ணா துயரத்தோடு 
வந்து சேர்ந்தனர் 
மாகவியின் 
நெஞ்சுக்கினியர்
துரைசாமி ஐயர்,

ஆச்சாரியார் மூவரோடு 
சுரேந்திரநாத் ஆர்யா 
சர்க்கரைச் செட்டியார், 
ஹரி ஹர சர்மா... 

எட்டயபுரத்தான்  
ஏறுபோல் நடந்த 
சிங்கத்தின்...
பூத உடலை 
எட்டுமணிக்கு ஏற்றி வைத்து  
பாடையோடு பயணம் 

சந்தனமாய் மணந்தவன் 
சங்கொலி எழுப்பி 
சாகாவரம் கேட்டவன் 
மாந்தரெல்லாம் அமரத்துவம் பெற 
ஆற்றுப் படுத்தியவன் 

அமரகவியின் ஆருயிர் தங்கிய 
அந்த சந்தன உடல் 
இப்போது அழ்கடலாய் 
அமைதியில் கிடக்கிறது.

பாரையேத் தன்கையில் 
வைத்துப் பார்த்தவனின் உடல் 
ஒரு பாடைக்குள் 
பத்திரமாகப் படுத்துக்கிடக்கிறது  

மகாகவியின் கடைசி ஊர்வலம் 
கூடிப் போனவர்கள் 
கொஞ்சம் அல்ல வெறும் 
இருபதுக்கும் குறைவு தானாம்...

இதயம் கனக்கிறது 
அநீதியின் சங்கருக்க 
ஆளுக்கொரு வாள் கொடுத்தவன் 
வாழ்வின் கடைசி ஊர்வலத்தில்...

என்னக் கொடுமையடா
நன்றிகெட்ட மக்கா 
நாய்களுக்கே உண்டந்த 
உணர்வே ஏனிப்படி 
நாயினும் கேவலமாக...

நடிக்கத் தெரியாதவனின் 
கடைசி ஊர்வலம் 
இப்படிதானோ... 

கூடவேத் திரிந்தக்- 
குவளைக் கண்ணனும் 
அன்புகாட்டிய லட்சுமண ஐயரும் 
ஆருயிர் நண்பன் ஆர்யாவும் 
பாரதியின் ஆக்கங்களை எல்லாம் 
அரங்கேற்றிய நெல்லையப்பரும்  

ஆளுக்கொரு பக்கமாய் 
அழுதபடி 
தூக்கிப் போயினரே...
 
பாவங்கள் ஏதும் 
செய்யாதவன் 
படுத்திருக்கும் பாடை அல்லவா
 
பாரமே இல்லாது 
பூப் போல இருந்ததாம்  
போய்ச்சேரும் வரை 

அதனாலே எடுத்தோர் 
தோளிலிருந்து 
இடமாற்றம் செய்யவில்லை.

மகாகவி 
இறக்கி வைக்கப் பட்டான்...
மகாத்துயரை 
எப்படி இறக்கி வைப்பது ?

சரேந்திரநாத் ஆர்யா வழங்கிய 
பாரதியின் சுந்தர கீர்த்தி!
சில மணித்துளிகள்...

மகாகவி அருகில் நின்று 
மனம் குளிர்ந்திருப்பான்!

கவிச்சூரியனால் 
ஒளி பெற்ற மற்ற கோள்கள் 
இப்போது இருண்டு போயின...
 
இடிவிழுந்த மனதில் 
இன்னல்கள் கோடியாயினும் 
கவிக்கோவை 
கட்டைகளில் இறக்கினர் 

காவியம் படைத்த 
கலைச் சூரியன் மேனியில் 
ஹரிஹர சர்மா 
கடைசியாக தீ மூட்டினார் ...

பற்றி எரிந்தது 
பாரதியின் உடல் ...
வேள்விப் பிரியனுக்கு 
வேதங்கள் போற்றிய அத்வைதிக்கு 
அக்னி யென்றால்  
அத்தனைப் பிரியமோ! 

பக்கத்தில் இருந்தவர்கள் 
யாவரின் 
பாலும் இதயங்களும்  
சேர்ந்துக் எரிந்தன ... 

ஒளிபடைத்த கண்களை 
ஓடி பாய்ந்து பெற்று 
தனதுக் கண்களுக்குள் 
சொருகி கொண்டது 
தீயின் பிளம்பு 

அச்சமில்லை 
அச்சமில்லை என்று 
அஞ்சாத நெஞ்சுடன் திரிந்தவனின் 
நெஞ்சை தஞ்சமெனக்- 
கொண்டது அந்த தீக் கொழுந்து 

காவியங்களை ஓவியங்களாகத்- 
தீட்டியவனின் கரங்களை 
தனது கன்னங்களோடு 
ஒத்திக் கொண்டது 
அந்த அக்னி தேவதை 

பாரத்ததை 
அளந்தவன் பாதமதை 
தனதாக்கிக் கொண்டு 
பரதமும் ஆடிக் களித்தது 
அந்த அக்னிக் கன்னி. 

ஆனால் 
மனிதநேயக் கடலாக 
கருணையை உற்பத்தி செய்த 
அவனின் 
இதயத்தை மட்டும் 
இறுக்கிப் பிடித்துக் கொண்டு...
 
ஓ ! வென்று 
அழுது புலம்பியதே அந்த அக்னி...

அழுதக் கண்ணீர் 
துடைக்க துடைக்க 
ஆறு போல் பெருகினாலும் 

நண்பர்கள் ஒருவரோடு ஒருவர் 
மற்றவரின் வலிக்கு 
மருந்தும் போட்டுக் கொண்டனர்... 

ஆனால் அந்த      
கிருஷ்ணாம் பேட்டை 
மயானம் மட்டும்....
ஆனந்தக் கண்ணீர் வடித்தது !

அது ஒரு மகாகவிஞனின்...
மகாப் புண்ணியவானின் 
தேகத்தை தாங்கியதால் வந்ததாம்!

பிரபஞ்ச இயக்கத்தில் கலந்தவன் 
பிரபஞ்சம் உள்ளவரை அதில் 
இயங்கிக் கொண்டே இருப்பான்! 

இந்த மகா புருஷனின் 
நினைவுகள் 
காலகாலத்திற்கும் 
நம்மோடு நிலைத்து நிற்கும் 

வாழ்க! வளர்க! மகாகவி பாரதியின் புகழ்!!!

.
மேலும்