கலைஞர் பிறந்த நாள் - அரசு விழாவாக இன்று கொண்டாட்டம்

By Senthil

கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தி.மு.க. எனும் மாபெரும் பேரியக்கத்திற்கு அரை நூற்றாண்டுக் காலம் அசைக்க முடியாத ஜனநாயகத் தலைவராகவும், அண்ணாவின் அன்புத் தம்பியாகவும் திகழ்ந்தவர் கருணாநிதி. 

சமுதாய காவலர் அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் தலைப்புச் செய்தியாக இருந்தவர். 5 முறை முதல்-அமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை-எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல சமூக நலத்திட்டங்களை திறம்படச் செயல்படுத்தி, இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர். இந்தியாவிற்கே முன்னோடியாய் சமூகநீதி காத்து சமத்துவபுரம் அமைத்த சமுதாயக் காவலர். தன் வாழ்நாளின் இறுதிவரையில் தமிழாய் வாழ்ந்து தமிழாய் நிலைத்தவர். 

ஓய்வறியாக் கதிரவன் போல் தன் வாழ்நாளின் இறுதிவரையில் ஓய்வென்பதையே அறியாமல், அடித்தள மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து அல்லும் பகலும் அயராது உழைத்தவர். கருணாநிதிக்கு மென்மேலும் பெருமை சேர்க்கின்ற வகையிலும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி பிறந்த நாளான ஜூன்.3-ந்தேதி (இன்று) அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச் சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். 

அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சீரோடும் வெகு சிறப்போடும் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.
மேலும்