பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்!

By News Room

பிரபல எழுத்தாளர் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் (99) வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் காலமானார்.  அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், தமிழக முதல்வர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922- ஆம் ஆண்டு கி.ராஜநாராயணன் பிறந்தார். ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ பெருமாள் ராமானுஜம் என்பதுதான் கி.ரா.வின் இயற்பெயர்.

ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ரா. பின்னர் எழுத்தாளராக மாறினார். கி.ரா. எழுதிய 'மாயமான்' என்ற சிறுகதை 1958- ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதைகள் என இலக்கியத்தின் பல தளங்களில் இயங்கியவர் கி.ரா. 'கரிசல் கதைகள்', 'கொத்தைப் பருத்தி', 'கோபல்ல கிராமம்' போன்றவை இவரின் முக்கிய படைப்புகள் ஆகும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றிய கி.ரா. நல்ல இசை ஞானம் கொண்டவர்.

பல்வேறு விருதுகளைப் பெற்றவர் கி.ரா.!

'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக 1991- ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் கி.ராஜநாராயணன். இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசு விருது, தமிழ் இலக்கியச் சாதனை விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.


'கரிசல் இலக்கியத்தின் தந்தை' எனப் போற்றப்பட்டவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். 'வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர்', 'தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்' என்றழைக்கப்பட்டவர். 'தலைசிறந்த கதை சொல்லி' எனப்போற்றப்பட்ட கி.ரா. தள்ளாத வயதிலும் தளராமல் எழுதியவர்.

.
மேலும்