இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு

By Senthil

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, இன்னிக்கு பிற்பகல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 1.42 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 18.72 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுத இருக்காய்ங்க

நம் நாட்டில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுதலாம். பிற்பகல் 2 முதல் மாலை 5.20 மணி வரை நேரடி முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் 497 நகரங்களில் நடக்கும் தேர்வை மொத்தம் 18 லட்சத்து 72,341 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உட்பட 18 நகரங்களில் நடக்கும் தேர்வில் 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். சென்னையில் மட்டும் 31 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.

தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.40 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி தரப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவர்களுக்கு எந்தக் காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது.


தேர்வுக்கு வரும்போது ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவேண்டும். தேர்வர்கள் தங்கள் கையில் வெளிப்படையான தண்ணீர் பாட்டில், 50 மிலி சானிடைசர் பாட்டில் கொண்டு செல்லலாம். ஹால்டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்திசெய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் அதை ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது.

அதேபோல, தேர்வறையில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தற்போது கரோனா நோய்த் தொற்று பரவல் இருப்பதால், தேர்வர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். உடல் வெப்பம் அதிகமாக இருந்தால், அந்த மாணவர் தனி அறையில் தேர்வு எழுத வைக்கப்படுவார். தேர்வு வளாகங்களில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தேர்வு மையங்களிலேயே மாணவர்களுக்கு என் 95 முகக்கவசம் வழங்கப்படும். ஆடைக் கட்டுப்பாடு உட்பட இதர வழிகாட்டுதல்களையும் மாணவர்கள் தவறாது பின்பற்ற வேண்டும். தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால், தேர்வின்போது மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவிச்சிருக்காய்ங்க

.
மேலும்