12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவிப்பு

By News Room

கொரோனா ஊரடங்கு காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதில் தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது. தி.மு.க ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் +2 பொதுத்தேர்வு உறுதியாக நடக்கும் என்று கூறிவந்தார்.

பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பிலும் பள்ளிக்கல்வித்துறையினர் ஆலோசனை நடத்திவந்த நிலையில், அந்த பரிந்துரைகள் முதல்வர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது. கமலஹாசன், திருமாவளவன் போன்றோர் தாமதமானாலும், பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெற வேண்டும் என்று கூறிவந்தனர்.

மத்திய அரசு சி.பி.எஸ்.இ தேர்வுகளையும் ரத்து செய்திருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார். மாணவர்களின் உடல் நலனை கருத்தில்கொண்டும், பல்வேறு தரப்பிலிருந்து வந்த ஆலோசனைகளை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்படுவதாக முதல்வர் கூறியிருக்கிறார்.

மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமையாசிரியர்கள் கொண்டு ஒரு குழு அமைக்கப்படும். இந்தக்குழு, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்  என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, 2020, 2021 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.
மேலும்