கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள்

By News Room

வெறும் "சினிமா கலைஞர்" என்ற சின்ன சிமிழுக்குள் இவரை அடக்கிவிட முடியாது.. அந்த துறையையும் தாண்டி பல துறைகளில் வியாபித்து வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார்.

எந்த படமாக இருந்தாலும்சரி, தனக்கென்று ஒரு கிளைக்கதையை உருவாக்கி, அதில் விஞ்ஞான பூர்வமான சிந்தனைகளை, காமெடியுடன் நிரப்பி ததும்பி தரும் கலைநேர்த்தி இவரிடம் இருந்தது.

இப்போது காமெடி டிராக் என்கிறார்களே, அதை அப்போதே கொண்டு வந்தவர் இவர்தான்! 

தமிழ் சினிமாவில் காமெடி ஜோடி முறையை முதலில் அறிமுகப்படுத்தியவரும் சாட்சாத் இவரேதான்!

வியாபாரத்திற்காகவோ, பணத்திற்காகவோ, ஆபாசத்தையோ, விரசத்தையோ ஒருபோதும் இம்மியளவும் இவர் அனுமதித்தது கிடையாது..!

தரம் குறையாமல், புதுமையான சிந்தனையையும், பகுத்தறிவு கொள்கையையும், மனித நேய கருத்துக்களையும் தனது படைப்பில் எப்போதுமே இருப்பது போல கவனித்து கொள்வார்.

ஒருமுறை இவரை வைத்து எடுத்த படம் ஒன்று தோல்வி அடைந்துவிட்டது.. அந்த படத்தை பார்க்க இவர் தியேட்டருக்கு போனார்.. தியேட்டரில் கூட்டமே இல்லை.. மறுநாள் அந்த புரொடியூசரை கூப்பிட்டு அனுப்பி,  "நான் நடித்தும் உன் படம் ஓடலை.. என்னால உனக்கு நஷ்டம்.. நீ எனக்கு தந்த பணத்தை இந்தா வாங்கிக்கோ" என்று சொல்லி மொத்த பணத்தை திருப்பி தந்த குணாளன்!

"என்னப்பா, கிருஷ்ணன் ஐயாயிரம் வாங்குறான்... பத்தாயிரம் வாங்குகிறான்… அவனுக்கு சினிமாவிலே அது கொடுக்கிறாங்க… இது கொடுக்கிறாங்க..ன்னு நீங்க சொல்லலாம். ஆனா, எனக்கு அதெல்லாம் லட்சியம் இல்லே. எனக்கு முக்கியம், மத்தவங்களை சந்தோஷப்படுத்தணும், அது தவிர பணம் சம்பாதிச்சுடணும்... மாடிகட்டணும். ஏரோபிளேன்ல ஏறி ஆகாசமெல்லாம் பறக்கணும் என்கிற ஆசை எனக்கில்லை. இப்போ, சொல்லுங்க… நான் ஒரு தேச பக்தனா இல்லியா?" என்று யதார்த்தமாக கேட்டவர் கலைவாணர்.

1957ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அண்ணாவை எதிர்த்து ஒரு டாக்டர் போட்டியிட்டார். அப்பொழுது காஞ்சிபுரத்திற்கு அண்ணாவுக்காக பிரச்சாரம் செய்ய வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை,  அண்ணாவை பற்றி பேசாமல்,  அந்த டாக்டரை பற்றியே புகழ்ந்து கொண்டிருந்தார்..!

கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. இறுதியாக கலைவாணர், "இவ்வளவு நல்ல டாக்டரை நீங்க சட்டசபைக்கு அனுப்பினால், உங்களுக்கு எல்லாம் வைத்தியம் பார்க்கிறது யார்? அதனால் டாக்டரை உங்க ஊரிலேயே வெச்சுக்குங்க.. சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அண்ணாவை சட்டசபைக்கு அனுப்புங்கள்" என்று சொல்லிவிட்டு கிளம்பினாராம்.

சிந்தனையையும், சிரிப்பையும் கலந்த அவரது சேவையை பலர் பாராட்டி சார்லி சாப்ளினோடு ஒப்பிட்டு பேசினர். அதற்கு கலைவாணரோ, "சாப்ளினை ஆயிரம் துண்டுகளாக வெட்டினாலும் அவரது ஒரு துண்டுக்கு கூட நான் ஈடாக மாட்டேன்" என்று தன்னடக்க பதிலை உதிர்த்தார்.

கடைசிவரை ஒழுக்க சீலராகவே வாழ்ந்தார்.. நடிப்பு என்ற பெயரால்கூட தன் மனைவி மதுரத்தை தவிர வேறு எந்த பெண்ணையும் தொட்டு நடித்தது இல்லை.. நன்றாக ஆர்மோனியம் வாசிப்பார்... மிருதங்கம் வாசிப்பார்.. டிராயிங் சூப்பராக வரைவார்.. தன்னை நாடி வந்தவர்களுக்கு "இல்லை" என்று சொல்லாத ஈரமனசுக்காரர்.

இவரது பற்றி  தெரிந்து கொண்ட ஒரு பிச்சைக்காரர் தினமும் வீட்டுக்கு வந்து எதையாவது வாங்கிட்டு போய்ட்டே இருந்தாராம்.. இதை பார்த்த நண்பர்கள், "அவர் உங்களை ஏமாத்தறார்.. இனிமேல் எதையும் தராதீங்க"ன்னு சொல்லி தடுத்துள்ளனர்..!

அதற்கு கலைவாணரோ, "விடுய்யா... அவன் என்னை ஏமாத்தி மாடி வீடா கட்ட போறான்? வயித்துப்பாட்டுக்கு தானய்யா கேக்குறான்?" என்ற சொன்ன அரிய மனசுக்கு சொந்தக்காரர். 

கொடுக்க இனிமேல் தன்னிடம் எதுவும் இல்லை என்பதாலோ என்னவோ, 49 வயசிலேயே அந்த சிரிப்பை நிறுத்தி கொண்டார்.

திராவிட இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த அதே நேரத்தில் கலைவாணருக்கு சோஷலிசத்தின் மீதும் விஞ்ஞானத்தின் மீது அளவுகடந்த பற்று இருந்தது.. குறிப்பாக சோவியத் பூமியின் மீது பெரும் மரியாதை இருந்தது.. எத்தனையோ நிகழ்ச்சிகளில் சோவியத் நாட்டை பற்றி மனம் குளிர்ந்து சிலாகித்திருக்கிறார். 

ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை சட்டமன்ற தேர்தலில் நிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது... இதற்காக டெல்லியில் கலைவாணரை சந்திக்க பிரதமர் நேருவும் நேரம் ஒதுக்கியிருந்தார்.

இதை கேள்விப்பட்ட ஒரு அரசியல் பிரமுகர், "தமிழ்நாட்டில் கூத்தாடிகளும், கோமாளிகளும் சட்டசபைக்குள் புகுந்து வந்தால் அது உருப்படுமா? சட்டசபையை அந்த கடவுள்தான் காப்பாத்தணும்" என்றார். 

இந்த விஷயம் கலைவாணர் காதுகளுக்கு எட்டியது..  அடுத்த செகண்டே, பிரதமர் நேருவை சந்திக்காமலேயே சென்னை திரும்பி விட்டாராம்.

சிரிப்பும், சிந்தனையும், பகுத்தறிவும், பக்குவமும், மனித நேயமும், மக்கள் பற்றும் கொண்ட கலைவாணரையே அன்று சட்டசபைக்குள் அனுமதிக்க மறுத்த தமிழகம் இது! 

ஆனால், இன்றோ, இவர்களை தவிர வேறு யாரும் ஆட்சியில் அமர முடியுமா என்ற கேள்வி எழுந்து வருவது காலத்தின் விசித்திரம்தான்! 

இந்திய திரை உலக தோட்டத்தின் குறிஞ்சி மலர்தான் கலைவாணர்...!!

வெள்ளித்திரை வானின் கற்பக விருட்சம்தான் நம் கலைவாணர்...!!

நன்றி: ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்

.
மேலும்