பொங்கல் பரிசு மஞ்சள் பை மூலம் 120 கோடி கமிஷன் - அண்ணாமலை குற்றச்சாட்டு

By Senthil

தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருச்சி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில். தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்பாக 21 பொருட்களை கொடுத்தார்கள். வெல்லம் வாங்க மக்கள் வாளிகளை கையில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. மஞ்சள் தூளுக்கு பதிலாக மரத்தூளும், மிளகுக்கு பதிலாக பருத்தி கொட்டையும் வழங்கி முறைகேடு செய்துவிட்டு உள்ளாட்சி தேர்தலில் அதனை சாதனையாக சொல்லிக் கொண்டு ஓட்டு கேட்கிறார்கள்.

மேலும், ஒரு மஞ்சள் பைக்கு ரூ.5, ரூ.10 தான் விலை இருக்கும். ஆனால் பொங்கல் தொகுப்பில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட மஞ்சள் பையின் விலை ரூ.60 என நிர்ணயிக்கப்பட்டது. 2 கோடியே 15 லட்சம் மஞ்சப்பைகளை வாங்கி அதை ரேசன் கடை மூலமாக கொடுத்து ரூ.120 கோடி கமி‌ஷன் அடித்து இருக்கிறார்கள்.

நீட் தேர்வு வேண்டாம் என மு.க.ஸ்டாலின் நாட்டில் உள்ள 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் 12 முதல்வர்களும் ஸ்டாலினின் நீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பதிலே சொல்லவில்லை. ஏனென்றால் அனைவருக்கும் தெரியும். நீட் யாருக்கும் எதிரானது கிடையாது என்று. தமிழகததில் நீட் தேர்வில் வெற்றி பெற்று ஏராளமான மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பா.ஜ.க. கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அந்தக் கூட்டத்தில் மாநில தலைவர் பேசினார்.

.
மேலும்