'விளைப்பொருட்களை விவசாயிகள் பாதுகாக்க நடவடிக்கை'!

By News Room

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் பழங்கள், காய்கறிகளை சேமித்து வைக்கலாம் என்று தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் கொரோனாவினால் ஏற்பட்ட இரண்டாவது அலை தாக்குதலைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகளைக் களைந்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஊரடங்கு காலத்திலும் செயல்பட்டு வருகின்றன. எனவே, விவசாயிகள் கீழ்க்கண்ட வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விளைப்பொருட்களைப் பாதுகாத்து சேமித்திட கிடங்கு வசதி!

மாவட்டங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைப்பொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிகவிலை கிடைக்கப் பெறும் காலங்களில் விளைப்பொருட்களைக் கிடங்கிலிருந்து எடுத்து விற்பனைச் செய்திடலாம்.


பொருளீட்டுக்கடன் வசதி!

கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைப்பொருட்களை விவசாயிகளை அடமானத்தில் பேரில்  அதிகபட்சம் 75 சத சந்தை மதிப்பு அல்லது ரூபாய் 3 லட்சம் இவற்றில் எதுகுறைவோ அந்த அளவிற்கு பொருளீட்டுக் கடனாகப் பெற்றிடலாம். கடனிற்கான கால அளவு 180 நாட்கள் ஆகும். இதற்கான வட்டி 5 சதமாகும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாத்திட குளிர்சாதனக் கிடங்கு வசதி!

பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடி செய்திடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குளிர்சாதனக்கிடங்கு வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. விரைவில் அழுகக்கூடியப் பொருட்களை இக்கிடங்குகளில் வைத்து பாதுகாத்திடலாம். மேலும் விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்களிலும் குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் இதனை பயன்படுத்தி விளைப்பொருட்களை பாதுகாத்திடலாம்.

விவசாயிகள் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்திட மாநில அளவில் 044 22253884 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

மாவட்ட அளவில் விளைப்பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் சேமித்து வைத்தல் போன்றவைக்கு வேளாண்மை விற்பனைத் துறையின் விற்பனை குழு செயலர்/ வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.
மேலும்