பாரதியார் சரித்திரம்

By News Room

பாரதியார் சரித்திரம்
ஆசிரியர்- செல்லம்மா பாரதி
கிண்டில் பதிப்பு
பக்கங்கள் - 145

        பாரதியாரின் நூற்றாண்டு நினைவை ஒட்டி கிண்டிலில் வெளியிடப்பட்டிருக்கிறது இந்த நூல்.பாரதியாரின் துணைவி செல்லம்மா அவர்களின் பார்வையில் விரிகிறது.கலைஞர்களுடனான வாழ்க்கையின் கடினங்களையும் சங்கடங்களையும் சொல்லியே  தொடங்குகிறார்.ஊரோடு ஒத்து வாழாத ஒரு மனிதனை,காலங்கள் கடந்தபின் போற்றிப் புகழுகிற சமூகம் சமகாலத்தில் அவனை பைத்தியக்காரன் என்று பரிகசிக்கிறது.அவருடனான செல்லம்மா அவர்களின் வாழ்வும் பல சிரமங்களைத் தாங்கித்தான் நடந்திருக்கிறது.

        பாரதியாரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அழகாக தொகுத்திருக்கிறார்.ஐந்து வயதிலேயே தாயை இழந்த பாரதியாருக்கு ,சிற்றன்னையாக வருபவரின் அன்பு முழுமையாகவே கிடைக்கிறது.படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாத பாரதியார்,கனவுலகில் சஞ்சரித்துக் கற்பனையில் கவிதை எழுதியே மகிழ்கிறார்.வயதானவர்களுக்கு இடையே அமர்ந்து அவர்கள் சொல்லும் தத்துவங்களை ஆராய்ச்சி செய்வதிலேயே அவரின் பெரும்பாலான நேரம் கழிகிறது.தான் இயற்றிய கவிதைகளை எட்டையபுர மகாராஜாவிடம் வாசித்துக் காண்பித்து அவரை மகிழ்விப்பதும் அவருக்கு வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது.

       பாரதியாரின் பதினான்கு  வயதில் அவருக்கு விவாகம் நடக்கிறது.செல்லம்மாள் அவர்களுக்கு ஏழு வயது.காதல் ரசம் நிறைந்த பாடல்களைப் பாடி மனைவியைச் சீண்டுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.பாரதியாரின் அத்தை மேல் அவர் கொண்டிருந்த அன்பையும் இந்த இடத்தில் செல்லம்மாள் அவர்கள் கூறுகிறார்.அத்தையும் அவர் கணவரும், காசிக்குச் செல்ல விரும்பி பயணப்படுகிறார்கள்.அங்கே மிகுந்த செல்வாக்கோடு இருக்கிறார்கள். இந்நிலையில் எதிர்பாராத சமயத்தில் பாரதியாரின் தந்தையின் மரணம் அவரை நிலைகுலையச் செய்கிறது.வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்.ஆதரவற்ற  பாரதியாரை காசிக்கு அழைக்கிறார் அவரது அத்தை.அங்கேயே கலாசாலையில் சேர்ந்து அவரின் படிப்பும் தொடர்கிறது.படிக்கும் நேரங்கள் தவிர கங்கை நதிக்கரையில் அமர்ந்து கவிதை புனைவதிலே விருப்பம் கொண்டிருந்திருக்கிறார். 

        அந்தணர்களுக்கு உரிய ஆசாரங்களை கடைப்பிடிக்காமல்,குடுமியையும் எடுத்துவிட்டு,பெரிதாக மீசை வைத்துக் கொண்டு வந்த பாரதியைக் கண்ட அவரது அத்தையின் கணவர்,கோபத்தில் கொதிக்கிறார்.அந்தக் கோபம், ஓதுவார் வராத சமயத்தில் பாரதியார் இறைவன் மேல் பாடிய பாடலை கேட்டு பனி போல விலகி விடுகிறது.உன்னைப் போல ஞானமும் இறைவனின் மேல் உண்மையான பக்தியும் உடையவனுக்கு குடுமியும் வேண்டாம்,பூணூலும் வேண்டாம் என்று புகழ்ந்து மகிழ்கிறார் அத்தையின் கணவர். 

        சில காலங்களுக்குப் பின்,டெல்லிக்கு வந்த மகாராஜா பாரதியையும் தன்னுடன் எட்டயபுரத்திற்கு அழைக்கிறார்.அப்படி,செல்லம்மாள் உடனான இல்வாழ்க்கை எட்டயபுரத்தில் தொடங்குகிறது.கற்பனை உலகில் சிறகடித்துப் பறந்து பல கவிதைகள் வரித்த பாரதி,தன் மனைவிக்கும் பசிக்கும் என்பதையே மறந்து விடுகிறார்.ஒருசமயம் எட்டயபுரம் மகாராஜா தந்த ஐநூறு  ரூபாய்க்கும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு, அழியும் பொருளுக்கு ஆசைப்படாதே,அதனால்தான் அழியாத கல்விச் செல்வத்தைக் கொண்டுவந்தேன் என்றுகூறி மனைவியை சமாதானப்படுத்துகிறார். மகாராஜா நன்றாக பார்த்துக் கொண்டாலும் பாரதியாருக்கு எட்டையபுரத்தில் இருப்பதில் பெரிதாக விருப்பம் இல்லை.மகாராஜாவுக்கும் இவருக்கும் சிறு மனக்கிலேசம் வந்தபோது,அதையே காரணமாக வைத்து மதுரைக்குச் சென்று தமிழ் பண்டிதராக சில மாதங்கள் பணியாற்றுகிறார். அங்கிருந்து சென்னைக்கு சென்று சுதேசமித்திரன் பத்திரிகையில் பணிக்குச் சேர்கிறார்.

        1906இல் தாதாபாய் நவரோஜி காங்கிரஸ் தலைவராக இருந்த சமயத்தில்,அவர் எழுப்பிய சுயராஜ்யம் இன்னும் கோஷத்தில் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் சேர்கிறார்.நாட்டின் விடுதலைக்காக பலபாடல்களை இயற்றி,மக்களிடையே விடுதலை வேட்கைக்கு வித்திடுகிறார். சுதேசி இயக்கத்திற்கு பின்னான பல நிகழ்வுகள் அவரை அரசாங்கத்தின் வெறுப்பிற்கு ஆளாக்குகிறது.அரசாங்கத்தின் கையில் அகப்பட்டால் தன் தேச சேவை முடங்கும் என்பதற்காக புதுவை செல்ல முடிவு செய்கிறார்.

        பட்டினி கிடந்தால் கூட சற்றும் உற்சாகம் குறையாமல் இருக்கும் பாரதியாருக்கு கட்டுண்டு கிடப்பது மட்டும் பிடிக்காத ஒன்று.சிறைவாசத்தின் கட்டுப்பாடுகளை நண்பர்களின் மூலம் அறிந்த அவருக்கு, கூடுமானவரை அரசாங்கத்தின் கையில் அகப்படாமல் தேச சேவை செய்ய வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது.இத்தனை அரசாங்க கெடுபிடிகளுக்கு  இடையிலும்சிறிதும் சோர்வடையாதவராகவே இருந்திருக்கிறார் பாரதியார்.

        புதுவையில் தேர்தல் சமயம் நடந்த பல கலவரங்களில்,பாதுகாப்பற்ற நிலையில் பல இரவும் பகலும் இவர்கள் கழிக்க வேண்டி இருந்திருக்கிறது.வ.வே.சு ஐயர் அவர்களின் குடும்பம், பிறந்த  குழந்தையை  வைத்துக்கொண்டு தைரியத்தோடு போராடி பல துயரங்களை கடக்கிறார்கள்.ஒவ்வொரு இரவும் வேறுவேறு இடங்களில் தங்கி பெரும்பாலான சமயம் கிருஷ்ணகான சபையிலுமாக அவர்களின் அன்றைய கலவர நாட்கள் கழிந்திருக்கின்றன.

        பாரதியார் ஒரு புதுமை விரும்பியாக இருந்திருக்கிறார்.பெண்களை அடைத்து வைப்பது, சுதந்திரம் இல்லாமல் கட்டுக்குள் வைத்திருப்பது இவற்றை விரும்பாத அவர்,பெண்களின் முக்கியத்துவத்தை கூறி,யாருக்கும் அஞ்சாமல் மனதில் கலக்கம் இன்றி ஆண்களோடு சரிசமமாக பழகுவதை ஊக்குவித்துப் பேசி தைரியமூட்டுகிறார்.மகளிடம் அவரின் உரையாடல் ஒன்று மிகச் சிறப்பு.சாகுந்தலம் வாசித்துக் கொண்டிருந்த சமயத்தில் பிறந்த குழந்தை ஆதலால், மகளுக்கு சகுந்தலை என்று பெயர் சூட்டி மகிழ்கிறார். 

        பல சோதனைகள் போலீஸாரிடமிருந்து வந்தாலும்,நண்பர்களுடன் சேர்ந்து அனைத்தையும் எளிதாகவே கடந்து வருகிறார்.வ.வே.சு ஐயருடனான அவரின் நட்பு சிறப்பான ஒன்று.சோகக் கதைகளையே எழுதும் வ.வே.சு ஐயரின் முடிவும்கூட ,அவர் எழுதிய கதையில் குளத்தில் மூழ்கி மரித்த ஒரு பெண்ணைப்போல மிக சோகமாக இருந்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

        செல்லம்மாள் அவர்கள்,கீதையை சமஸ்கிருதத்தில் பாராயணம் செய்தபோது உச்சரிப்பு சரியில்லாததை கவனித்து,அதை தமிழில் அழகாகப் பாடிச் சொல்லித் தந்ததை நெகிழ்வோடு பகிர்ந்திருக்கிறார்.தெரியாத பாஷையில் அர்த்தம் புரியாமல் சொல்லித் திண்டாடுவது தேவையற்றது என்பது பாரதியின் எண்ணம்.

        புதுவையிலிருந்து,பிறந்த மண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை பாரதியை ஆட்டிப்படைக்கிறது.துணிந்து வருபவரை கடலூரில் வைத்து போலீஸ் கைது செய்கிறது.பின் சில இடங்களுக்கு  மட்டும் செல்லலாம் என்ற நிபந்தனையோடு வெளியே வருகிறார்.கடையத்தில் வாசம் துவங்கும் அவர்களுக்கு,பெரிதாக மாற்றம் ஒன்றும் வந்துவிடவில்லை. கடுமையான யோகாப் பயிற்சியின் மூலம் பாரதியின் உடல்  எலும்பும் தோலுமாக மாறுகிறது.எழுத்தின் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் அவரின் ஆசைப்படி "கலா நிலையம்" அமைக்கும் அளவிற்கு இடமோ பொருளோ இல்லை. 

        பசியில் வேப்பம்பழம் பறித்துத் தின்னும் பிள்ளைகளைக் கண்டு,பசித்துயரின் கொடுமையை பாடல் மூலமே தீர்த்துக் கொள்கிறார் .கையில் இருக்கும் பணத்தை, நாளைக்கு என்று சேர்த்து வைக்காமல் அன்றைய தேவையை அது பெரும்பாலும் மற்றவர்களுக்காகவே தீர்க்கிற குணம் அவருடையது.உடையை சரியாகத் தைக்காத தையல்காரனிடம்கூட அவரின் கோபம் வெளிப்படுவதில்லை. மக்கள் நோய்வாய்ப்பட்டு உதவி இல்லாமல் கிடக்கும் சமயம்,அவரின் குரலே மற்றவர்களுக்கு எழுச்சியாகிறது.இத்தனை கம்பீரமும்,தைரியமும் நிறைந்தவரின்  முடிவு அவர் நேசித்த யானையினால் வருகிறது.

        பட்டினிக்கிடையே சிறிது உணவு கிடைத்தால் அதில் முக்கால்பாகமும் காக்கை,குருவிகளுக்கு பகிர்ந்தளிக்கும் அவரின் விலங்குகள்மீதான நேசம்,திருவல்லிக்கேணி யானையிடமும் தொடர்கிறது.அறியாமல் அவரைத் தாக்கிய யானை கால்களுக்கிடையே கிடக்கும் அவரை ஒன்றும் செய்யாமல் குற்றவுணர்வால் தவிக்கிறது.அதன் அன்பு நம்மையும் நெகிழ வைக்கிறது.

        ஒவ்வொரு பாடலும் பிறந்ததன் பின்னணி பல கதைகளை உடையது.சிறு வயதில் கேட்ட பாஞ்சாலியின் நாடகம் "பாஞ்சாலி சபதமாக" மாறுவது,அந்நிய நாட்டில் நம் மக்களின் உழைப்பு "கரும்புத் தோட்டத்திலே"பாடலாக,உணவின்றித் தவிக்கும் மக்களைக் கண்டு ஜகத்தினை அழிக்கும் கோபம்,சுதந்திரத்திற்கான அச்சமில்லை,அழியாப் புகழ்பெற்ற அவரின் பாடல்களை மட்டுமில்லாமல் அவரைப் பற்றியும் தெரிந்துகொள்ள அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.அவரின் பாடல்களையும் இடையே தந்து சிறப்பித்திருக்கிறார் செல்லம்மா அவர்கள்.

.
மேலும்