அவன் - நூலாசிரியர் : சிவசங்கரி

By News Room

வாசிப்பை நேசிப்போம்
தலைப்பு : நாவல்
நூல் : அவன் 
நூலாசிரியர் : சிவசங்கரி
வெளியீடு : திருமகள் நிலையம்
மதிப்புரை : சு.ஸ்ரீவித்யா

வாசிப்பை நேசிப்போருக்கு 
அன்பு வணக்கம்!

தொடர்ந்து வாசித்து வந்தாலும் 
போட்டிக்காகத் தேர்வு செய்கையில் நான் மதிப்புரை வழங்கும்  நூல் புதிய நூலாக இருக்க வேண்டும் என்பதை விட அதன் தரத்தையே கருதி முடிவு செய்கிறேன்.

எதிர்மறையாக அல்லாமல் நல்லதை மட்டுமே மாணவர்களுக்கு ஊட்ட வேண்டும் என்ற எனது ஆசிரியப் பணியின் அறத்தை இங்கே கடைப்பிடிக்கிறேன்.அதே நேரம் 
தீயவை என்று கருதுபவற்றை எழுதுவது அநீதிக்கெதிரான குரல் என்பதால் 
நல்லதொரு இலக்கோடு பதிவு செய்யப்படும் விமர்சனமோ,
 நூலோ  எதிர்மறையாகாது.

மரியாதைக்குரிய படைப்பாளியான சிவசங்கரி அவர்களின் தனித்தன்மையே பெண்ணியவாதியாக மட்டும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் 
சமூகத்தின் பிரதிநிதியாக பரந்து பட்ட 
பார்வையோடு தன் படைப்புகளை முன்வைப்பதுதான்.
வளரிளம் பருவத்தினர் மீதான அவரது அக்கறையே 'அவன்' 
என்றும் சொல்லலாம்.
1970 ல் அமெரிக்கா சென்றிருந்தபோது தனக்குள் விழுந்த 'போதை மருந்து' வித்து 'அவனாக' வெளிப்பட்டதாக முன்னுரையில் கூறுகிறார்.

இந்நூலுக்காக போதை அடிமைகள்,பெற்றோர்கள்,மருத்துவர்கள் என பலரை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்ட பிறகே எழுதியுள்ளார்.ஆனந்த விகடனில் தொடராக வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற பின் 
நூலாக்கம் செய்யப்பட்டது.

வெறும் இன்பத்துக்காக,ஆர்வத்தினால்,
நட்பு நிர்பந்தத்தினால்,பணத்தைக் கொடுத்து அன்பை ஈடுகட்ட நினைக்கும் பெற்றோர்,தலைமுறை இடைவெளி என்ற பெயரில் இளையதலைமுறையினரைக் கட்டம் கட்டிப் பிரித்து வைப்பது,குடும்பங்களில் சரியான தகவல் தொடர்பின்மை என போதையின் பாதையில் இளைய தலைமுறை செல்வதற்கான அடிப்படைக் காரணங்களை சுட்டிக் காட்டுகிறார்.

எல்லாவற்றிலும் ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் வசதியான பெற்றோருக்கு மகனான ப்ரேம் அதற்கு மாறாக தனியறையைத் தூய்மையாக வைத்துக்கொள்ளாத
சோம்பேறியாக  நாவலின் துவக்கத்தில் தாயின் விமர்சனத்துக்கு ஆளாகிறான்.

முதல்நாள் சிநேகிதர்களுக்காகக் கொடுத்த பார்ட்டியில் ஜென்டில் மேனாக நடந்து கொள்வதாக நினைத்துக்கொண்டு தந்தையே அவனுக்கும் ஒயின் தருவது அவனுக்கு உற்சாகம் தருகிறது.
சிகரெட் ஏற்கனவே பழக்கம்.

அக்கா ஸந்த்யா சுறுசுறுப்பாக organised ஆக,திறமைசாலியாக இருப்பதை தாய் ரேவதி எடுத்துச் சொல்வது ப்ரேமுக்கு எரிச்சலூட்டுகிறது.
ஸந்த்யா தம்பியிடம்  தன்னை Friend ஆகப் பார்க்கச் சொல்லி தன் அக்கறையை வெளிப்படுத்துகிறாள்.
பண்பாடு,பெரியவர்களிடம் மரியாதை என்று வளர்ந்தவள் 
தம்பியின் மீதான அன்பு,நம்பிக்கையால் அவனது நடவடிக்கைகள் வினோதமாகத் தெரிந்தும் பெற்றோரிடம் புகார் சொல்லாமல் தவிர்த்து விடுகிறாள்.
நாவலின் போக்கில் ஓபியம் அபின்,ஹெராயின்,ஹசீஷ்,ப்ரவுன் ஷுகர்,அவற்றுக்கு அடிமையாகும் மாணவர்களது அனுபவங்கள்,
அவர்களுக்கு ஏற்படும் மன,உடல் பாதிப்புகள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உபரியாக உலகளாவிய போதை மருந்து சந்தை என நாம் அறிந்திராத இருண்மையின் பக்கங்கள் இடம் பெறுகின்றன.

மும்பை பள்ளிக்கூட வாசல்களில் ஐஸ்க்ரீம்,இனிப்புகளில் கலந்து தந்து  குழந்தைகள் போதைக்கு அடிமையாக்கப் படுவது குறித்து அப்போது பாராளுமன்ற உறுப்பினரான அமிதாப் பச்சன் உரையாற்றியது,
ஊமத்தங்காய்பொடி,எலி பாஷாணப் பொடி போன்றவை போதை மருந்துகளில் கலக்கப் படுவது,
போதை அடிமைகள் சொந்த வீட்டிலேயே திருடுவது,போதைக்கு அடிமையான பெண்கள் உடலை விற்று போதையைத் தொடர்வது என அதிர்வலைகளை  பெட்டிச் செய்திகளாகத் தந்திருக்கிறார்.

முதல் நாள் கல்லூரியில் பதிநான்கு வயதிலேயே பீர் பழகிவிட்ட  பணக்காரனான சுனில் அறிமுகம்.
தந்தையை இழந்து தாயின் உழைப்பில் வளர்ந்த அப்பு ப்ரேமுக்கு நண்பனாகிறான்.
அப்புவுக்கு சுனில் போல பணக்காரனாக விரலிடுக்கில்  சிகரெட்டோடு வலம் வரும் ஏக்கம் பிறக்கிறது.
எளிய குடும்பப் பின்னணியில் பாட்டி,அம்மா அனைவரும் தன்னை ஒடுக்குவதாக உணர்கிறான்.
தாழ்வு மனப்பான்மை போதைப் பழக்கத்தை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.

ஸ்மாக் எனப்படும் ஆபத்தான போதை மருந்தை உட்கொண்டு
 ப்ரேம் அனுபவிக்கும் மரணத்துக்கு  நெருக்கமான  துன்பத்தை
ஆசிரியர் கண்முன் படமாக ஓடவிட்டுள்ளதை வாசிக்கும் யாரும் கனவிலும் போதையின் பக்கம் திரும்பமாட்டார்கள்.

குடும்பத்தினரின் அன்பு ப்ரேமை மீட்டதா இல்லையா என்பது மீதிப் பகுதியில்.

அன்பு,நட்பு,காதல்,இலக்கியம்,
இசை உள்ளிட்ட கலைகள் என கொடையான விஷயங்கள்  தரும் தீங்கற்ற போதையை அறிந்தவர்கள் மனிதவாழ்க்கையை அவலத்துக்குத் தள்ளும் போதைக்கு ஒரு போதும் அடிமையாக மாட்டார்கள் என்று என் மாணவர்களுக்குச் சொல்லும் தருணங்களில் எல்லாம் 'அவன்' நாவலைத் தவறாமல் பரிந்துரைத்து விடுகிறேன்.

அறிவு சார் மன இயக்கம் அடுத்த தலைமுறையை உயர்த்தும் ; அதே சமயம் போதை அடிமைகள் பெருகும் சமூகம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு தனது பண்பாட்டு வேர்களையும்  பெருமைகளையும்  தொலைக்கும் என்பதை தமிழக மதுச் சாவு எண்ணிக்கைகளில்  இன்றும்
 பார்க்கிறோம்.

சமூக அக்கறை,மானுடம் என்று பேச்சளவில் இயங்குபவர்கள் பலர் மது,போதைத் தீமைகளை தீமையாகக் கருதுவதோ அவற்றுக்கு எதிராக இயங்குவதோ கிட்டத்தட்ட இல்லை என்பதோடு ஆண்களிடையே இயல்பான ஒன்றாக ஏற்கப் பட்டு
விட்டதையும் பார்க்க முடிகிறது.

நாளைய தலைமுறை எல்லா வகையிலும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தை விதைத்து பெரும் மரியாதைக்குரியவராகிறார் சிவசங்கரி.

(இந்நூலின் பாதிப்பில் என் மாணவர்களிடையே மது,போதைத் தீமை குறித்துப் பேசியபோது சில மாணவர்கள் எரிச்சலடைந்ததை உணர்ந்தேன்.)

Tasmac ஐக் கடந்து செல்லும் போது யாரோ ஒரு பெண்ணின் தந்தையோ,கணவனோ,
சகோதரனோ,மகனோ சிலசமயம் ஆடையற்ற நிலையிலும் உணர்வற்றுக் கிடப்பதைக் காணும் 
உணர்வுள்ள யாரும் 'அவன் ' நாவலுக்காக சிவசங்கரியை நேசிக்காமல் இருக்க முடியாது.

போதை புகுந்து விட்ட வீடுகளில் பெண்களே மிகுந்த  துயரத்தைச் சுமப்பவர்கள் என்பதால் எந்த வித போதைக்கும் உங்கள் வாழ்க்கைத் துணையை அனுமதித்து விடாதீர்கள் என்று என் மாணவிகளிடம் வலியுறுத்தி வருகிறேன். 

ஒவ்வொரு பள்ளி,கல்லூரி நூலகத்திலும் அவசியம் இடம் பிடிக்க வேண்டிய நூல் 'அவன்' என்பதை அடிக்கோடிட்டே சொல்லலாம்.

.
மேலும்