கவுண்டமணி பற்றி ஃபிளாஷ்பேக்.

By News Room

1970 ல் வெளியான
'ராமன் எத்தனை ராமனடி'யில்,
ஒரே ஒரு காட்சியில்
ஒரே ஒரு நிமிடம் மட்டுமே டிரைவராக வந்து போவார் கவுண்டமணி.

அப்போது கவுண்டமணி ஒரு சாதாரண ஜூனியர் ஆர்டிஸ்ட்.
அவ்வளவுதான்.
அந்த ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் எப்படி இருந்திருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன்.

யாரோ ஒரு அஸிஸ்டண்ட் டைரக்டர் வந்து கூப்பிட்டிருப்பார்.
"யாருப்பா அது டிரைவர் கேரக்டர் பண்றது ?"
கவுண்டமணி பவ்யமாக, "நாந்தானுங்க."

"சிவாஜி சார் கூட சேர்ந்து நடிக்கணும். டயலாக் வேற இருக்கு. கரெக்டா பண்ணிடுவியா ?
சிவாஜி சார் உன்னை கூப்பிட்டவுடன் திரும்பி பாக்கணும். வணக்கம் சார்னு சொல்லணும். நாலு வார்த்தை பேசணும். அவ்வளவுதான் உன்னோட டயலாக். ஆனா டைமிங் கரெக்ட்டா இருக்கணும். புரியுதா ?"

இப்படி மிரட்டி விட்டு அந்த அஸிஸ்டண்ட் டைரக்டர் போயிருப்பார்.
கவுண்டமணியும் நடுக்கத்துடன் அந்தக் காட்சியை நடித்து கொடுத்து விட்டு வந்திருப்பார்.

ராமன் எத்தனை ராமனடி காட்சியை, இப்போது பார்த்தாலும் அந்தக் காட்சியில் கவுண்டமணியிடம் ஒரு சின்ன நடுக்கம் தெரியும்.

ஒரு வேளை இதுதான் சினிமாவுக்காக அவர் பேசிய முதல் வசனமோ என்னவோ ?

ராமன் எத்தனை ராமனடிக்கு முன்னாடியே மூன்று படங்களில் வந்து போயிருக்கிறாராம் கவுண்டமணி.

ஆனால் யாருமே கவுண்டமணியை கவனிக்கவில்லை.
ஏனெனில் அவருக்கான ஆங்காலம் அது வரை ஆரம்பமாகியிருக்கவில்லை.

ஆங்காலம் என்றால்
அனுகூலமான காலம்.

இதை நாம் செய்த புண்ணியங்களுக்கான பலன் கிடைக்கும் காலம் என்று சொல்கிறார் ஔவை.

அந்த ஆங்காலம் கவுண்டமணிக்கு ஆரம்பமானது 
1977 ல்தான்.
பதினாறு வயதினிலே !

அதன் பின்னர்தான் கவுண்டமணிக்கு இப்படியும் கூட சவுண்ட் கொடுக்கத் தெரியும் என்று இயக்குனர்கள் கண்டு கொண்டார்கள்.

உதவி இயக்குனர்கள் சொன்னதற்கும் மேலாக டயலாக்கையும் டைமிங்கையும் அவரே டெவலப் செய்தார்.

பொள்ளாச்சிக்கு பக்கத்தில் ஒரு அவுட்டோர் ஷூட்டிங்.படத்தின் ஹீரோவுக்கு பூ போட்ட கலர் ஷர்ட். கவுண்டமணிக்கு ஒயிட் ஷர்ட்.
கொண்டு போய்க் கொடுத்த உதவியாளரிடம் பொங்கி விட்டார் கவுண்டமணி.
"என்னாங்கடா இது ? நான் என்ன தாத்தா வேஷமா போடறேன். ஹீரோவோட ஃபிரண்ட் கேரக்டர்டா. போய் டி ஷர்ட்டை எடுத்துட்டு வா."

"டி ஷர்ட் இல்லீங்க."

"அப்போ கடைக்குப் போய் வாங்கிட்டு வரச் சொல்லு."

"அதுக்கு டவுனுக்கு போய்த்தான் வாங்கிட்டு வரணும்.நாப்பது கிலோ மீட்டர் போகணும். போய்ட்டு வர ரெண்டு மணி நேரம் ஆகும்."

"ஆகட்டும்." அசையாமல் உட்கார்ந்து கொண்டார் கவுண்டர்.

அந்தப் படத்தின் ஹீரோ மட்டுமல்ல. மொத்த யூனிட்டே கவுண்டமணிக்காக காத்திருந்தது.

இதை என்னிடம் பகிர்ந்து கொண்ட அந்தப் படத்தின் உதவி இயக்குனர் மேலும் சொன்னார்: "முதலில் எங்களுக்கு கவுண்டமணி மீது கோபம்தான் வந்தது ஜான் சார்.
வீண் பிடிவாதம் செய்கிறார் என எங்களுக்குள் பேசிக் கொண்டோம். ஏனெனில் டீ ஷர்ட்டுகள் வந்து சேர ரொம்பவே தாமதம் ஆகியது.
ஆனால் டீ ஷர்ட்டை போட்டுக் கொண்டவுடன் அதற்கு ஏற்ப மாறிய கவுண்டமணியின் பாடி லாங்குவேஜ், எங்கள் அத்தனை பேரையும் அதிசயிக்க வைத்தது. சாதாரண வெள்ளை சட்டை போட்டு அவர் நடித்திருந்தால் அந்தக் காட்சி வெறுமனே டல்லாகத்தான் இருந்திருக்கும். இப்போது இளமைத் துள்ளலோடும் துடிப்போடும் அந்தக் காட்சியையே கலர்ஃபுல்லாக, கலகலப்பாக்கி விட்டார் கவுண்டமணி.
அவர் எதை செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று அன்றுதான் நாங்கள் புரிந்து கொண்டோம்."

ஆம். அதுதான் கவுண்டமணி
வாழ்வின் ஆங்காலம்.

இந்த ஆங்காலம் ஒவ்வொருவர் வாழ்விலும் நிச்சயம் வரும்.

அதுவரை நாம் பொறுமையோடு காத்திருக்கத்தான் வேண்டும்,
கவுண்டமணியை போல.

நமக்கும் காலம் ஒரு 
நாள் கை கொடுக்கும்.
அது வரை நாமும் பொறுத்திருப்போம்.

.
மேலும்