அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு

By News Room

ஆசிரியர்-அம்பை
பதிப்பகம்-காலச்சுவடு
பக்கங்கள்-120 

        மூன்று சிறுகதைகளைக் கொண்ட புத்தகம் இது.சிறுகதை என்று சொல்வதைவிட குறுநாவல் என்றே சொல்லலாம்.சுதா குப்தா அவர்கள் துப்பறிந்த அனுபவங்களைத் தொகுத்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.மூன்று கதைகளுமே மனித மனங்களின் நுண்ணுணர்வைப் பேசுகிறது.அதில் ஒளிந்திருக்கும் வக்கிரம்,கோபம்,அன்பு,மகிழ்ச்சி அனைத்தையும் வெளிப்படையாகக் காட்டுகிறது.சில தருணங்கள் நம்மை மறக்கவே முடியாதபடியும் செய்துவிடுகிறது. 

        முதல் கதை "மைமல் பொழுது".வார விடுமுறையை கழிப்பதற்காக கடற்கரையை ஒட்டிய பிரதேசத்திற்கு சுற்றுலா வருகிறது ஒரு குடும்பம். மூன்று பெண் குழந்தைகளும் ஒரு சிறிய ஆண் குழந்தையும் தந்தையும் தாயுமாக.அந்த மூன்று பெண் குழந்தைகளும் திடீரென காணாமல் போவதில் தொடங்கி விறுவிறுப்பாகிறது கதை.காவல்துறையில் உள்ள தன் நண்பனின் உதவியோடு,அந்தப் பெண்களின் தாயார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  இந்த வழக்கில் ஈடுபடுகிறார் சுதா குப்தா.தோண்டத் தோண்ட நிறைய பூதங்கள்கிளம்புகின்றன.சின்னச்சின்ன திடீர் திருப்பங்களோடு கதை முடியும் நேரம் அந்த மூன்றுபெண்களின் நிலை தாங்கவே முடியாத துயரம். தாயாகவும் மனைவியாகவும் தவிக்கும் அந்தப் பெண்ணையும் மறக்கவே முடியாது. மனித மன வக்கிரம் அடக்க முடியாத ஒன்று என்பதைத் தெளிவாகச் சொல்கிறது இந்தக் கதை. 

        இரண்டாவது கதை "காகிதக்கப்பல் செய்பவன்". திருமணம் ஆகும் முன்பு குறிப்பிட்ட வரன் பற்றிய விசாரணைகளுக்காக துப்பறியும் சுதா குப்தா,ஒரு வித்தியாசமான மனநிலை கொண்ட இளைஞரைச் சந்திக்கிறார்.அந்த இளைஞரின் நற்குணங்களும் நடவடிக்கையும் அவரை வெகுவாகக் கவர்கிறது.அவனின் சமூகப் பார்வை அவன் மீதான மதிப்பையும் உயர்த்துகிறது. ஆனால்,ஒரு சிறிய பிரச்சனையைக் கொண்ட அவனின் குடும்பப் பின்னணி  அவனின் திருமணத்திற்குத் தடையாகவும் இருக்கிறது. அவன் தாயுடைய நல்ல குணத்தையும் அவர் செய்த செயலுக்கான விளக்கத்தையும் கேட்ட பின்னும்கூட திருப்தியில்லாத பெண்ணின் தாயார் அவனை மருமகனாக ஏற்கத் தயங்குகிறார்.எதிர்பாராத விதமாக அவன் குணத்திற்காகவே அவனை விரும்பி ஏற்கும் ஒரு பெண் மனதைக் கவர்கிறாள்.மனித மனங்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது இந்த கதை. 

        இறுதியாக"அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு".நம்மை பல வகையில் யோசிக்க வைக்கும் கதை.தன் அறுபதுகளில் இருக்கும் ஒரு பெண்மணியை அந்தப் பாலத்தில் சந்திக்கிறார் சுதா குப்தா.அந்தப் பாலத்தையும் அங்கிருக்கும் மனிதர்களையும் ஆசிரியர் அறிமுகப் படுத்தும் விதம் சிறப்பு.குறிப்பாக பார்வைத் திறன் குறைந்த ஒரு பாடகர் பாடுகின்ற பாடல்கள் அனைத்தும் நேரத்தை ஒட்டியே அமைகிறது. அந்த நுட்பமான உணர்வை வெகு எளிதாக நமக்குக்கடத்திவிடுகிறார்.காலையில் செல்லும்போதே அங்கு அமர்ந்திருந்த அந்த வயதான பெண்மணி,சுதா குப்தா அவர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க மறுக்கிறார்.பிடிவாதமாக அவரை அழைத்துச் சென்று பாதுகாப்பான ஓரிடத்தில் தங்க வைக்கிறார். 

        மெல்ல தன் மனதைத் திறந்து பேசும் அந்த வயதான பெண்மணியின் கதை,நம்மை நெகழ்த்தி விடுகிறது.அறுபது வயதிற்கு மேல் கணவனை இழந்து,தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்து வாழ விரும்பும் அந்த பெண்மணியை,அவரின் குழந்தைகளும்,இந்த சமூகமும் எப்படி எதிர்கொள்கிறது என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.தனியாக அந்த வயதில் ஆசை என்பதே இருக்கக்கூடாது என்பதை பலவாறு அவரின் தலையில் அடித்துச் சொல்கிறது குடும்பம்.அத்தனை எதிர்ப்புகளையும், சட்ட சிக்கல்களையும் மீறி தன் விருப்பத்தை சாதிக்க நினைக்கும் அந்தப்பெண்ணின் துணிவும் தைரியமும் ஆச்சரியப்படுத்துகிறது.சுதா குப்தா அவர்களின் துணையோடு தன் விருப்பம் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்கிறார் அந்தப் பெண்மணி.தாய் என்ற தியாகப் போர்வைக்குள் ஒரு பெண்ணை எப்படி அடைத்து வைத்திருக்கிறது இந்தச் சமூகம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்த கதை இருக்கிறது.மறைந்த தன் கணவருக்கு அவர் எழுதிய கடிதம் கண் நிறையாமல் வாசிக்கவே முடியாது. 

        ஒரு பெண் அன்றாட வாழ்விற்கிடையே,சந்தித்த மனிதர்களையும் துப்பறிந்த நிகழ்வுகளையும் அழகாகத் தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது புத்தகம்.அவசியம் வாசிக்கலாம்.

.
மேலும்