சிட்டுக் குருவி
சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித் துளிக் கால்கள்.
இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்துவிடலாம். இவ்விதமான உடலைச் சுமந்துகொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண். மற்றொன்று, பெண். இவை தம்முள்ளே பேசிக்கொள்கின்றன. குடும்பத்துக்கு வேண்டிய உணவு தேடிக்கொள்கின்றன. கூடுகட்டிக்கொண்டு கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசியில்லாமல் காப்பாற்றுகின்றன.
சிட்டுக் குருவி பறந்து செல்வதைப் பார்த்து, எனக்கு அடிக்கடி பொறாமை உண்டாகும். ஆஹா! உடலை எவ்வளவு லாகவத்துடன் சுமந்து செல்கின்றது. இந்தக் குருவிக்கு எப்போதேனும், தலை நோவு வருவதுண்டோ? ஏது, எனக்குத் தோன்றவில்லை. ஒரு முறையேனும் தலை நோவை அனுபவித்த முகத்திலே இத்தனை தெளிவு இருக்க நியாயமில்லை. பயமும் மானமும் மனிதனுக்குள்ளதுபோலவே குருவிக்கும் உண்டு. இருந்தபோதிலும் க்ஷணந்தோறும் மனிதருடைய நெஞ்சைச் செல்லரிப்பதுபோலே அரிக்குங் கவலைத் தொகுதியும், அதனால் ஏற்படும் நோய்த் திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா? பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும், அதன் கட்டுகளையும், நோய்களையும், துன்பங்களையும், பொய்களையும் உதறி எறிந்துவிட்டு, நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா? ஆஹா! எத்தனை தேசங்கள் பாருங்கள்! எத்தனை நாடுகள், எத்தனை பூக்கள்! எத்தனை மலைகள், எத்தனை சுனைகள், எத்தனை அருவிகள், எத்தனை நதிகள், எத்தனை கடல்வெளிகள்! வெயில், மழை, காற்று, பனி இவையெல்லாம் என் உடம்புக்கு நன்றாய் வழக்கப்பட்டு இவற்றால் நோய்கள் உண்டாகாமல் எப்போதும் இன்ப உணர்ச்சிகளே உண்டாகும் இந்த நிலை எனக்கு அருள்புரியலாகாதா? குருவிக்குப் பேசத் தெரியும்; பொய் சொல்லத் தெரியாது. குருவியில் ஆண் பெண் உண்டு; தீராத கொடுமைகள் இல்லை. குருவிக்கு வீடுண்டு; தீர்வை கிடையாது. நாயகன் இல்லை; சேவகமில்லை.
தெய்வமே, எனக்கு இவ்விதமான வாழ்க்கை தரலாகாதா? குருவிக்கில்லாத பெருமை எனக்கும் சில அருள் செய்திருக்கிறாய் என்பது மெய்தான். ஆராய்ச்சி, பக்தி, சங்கீதம், கவிதை முதலிய இன்பங்கள் மனிதனுக்குக் கைகூடும்; குருவிக்கு இயல்பில்லை. ஆனாலும், இந்த இரண்டுவித இயல்பும் கலந்து பெற்றால் நான் பரிபூரண இன்பத்தை அடைய மாட்டேனா?
இந்தக் குருவி என்ன சொல்கிறது? ``விடு’’, ``விடு’’, ``விடு’’ என்று கத்துகிறது. இஃது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பதுபோலிருக்கிறது.
விடு, விடு, விடு - தொழிலை விடாதே. உணவை விடாதே. பேட்டை விடாதே. கூட்டை விடாதே. குஞ்சை விடாதே. உள்ளக் கட்டை அவிழ்த்துவிடு. வீண் யோசனையை விடு. துன்பத்தை விடு.
இந்த வழி சொல்லுவதற்கு எளிதாயிருக்கிறது. இதனை நன்றாக உணர்ந்துகொள்ளுதல் எளிதன்று. உணர்ந்த பின்னும் இதை வழக்கப்படுத்துதல் அருமையிலும் அருமையிலும் அருமை.
``விடு’’ என்ற பகுதியிலிருந்து ``வீடு’’ என்ற சொல் வந்தது. வீடு என்பது விடுதலை. இதை வடமொழியில் முக்தி என்கிறார்கள். இந்த நிலைமையை இறந்து போனதன் பின்பு பெற வேண்டும் என்று பெரும்பாலோர் விரும்புகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையிலேயே, இப்போதே, அந்நிலையை விரும்புதல் நன்று.
விடுதலையே இன்பத்திற்கு வழி; விடுதலை பெற்றோர் வறுமையிலிருந்து மாறி செல்வமைடைவார்கள். மெலிவும் நோயும் நீங்கி இன்பம் எய்துவார்கள்.
வா; நெஞ்சே, பராசக்தியை நோக்கிச் சில மந்திரங்கள் சாதிப்போம்.
நான் விடுதலை பெறுவேன்; எனது கட்டுகள் அறுபடும். நான் விடுதலை பெறுவேன்; என்னிச்சைப்படி எப்போதும் நடப்பேன். என்னிச்சையினாலே பிறருக்குத் தீங்கு விளையாது. எனக்கும் துன்பம் விளையாது. நன்மைகளே என்னுடைய இச்சைகள். இவற்றை நான் எப்போதும் நிறைவேறும்படியாக க்ஷணந்தோறும் எனக்குப் பிராண சக்தி வளர்ந்து கொண்டு வருக. உயிர் வேண்டுகிறேன். தலையிலே இடி விழுந்தபோதிலும் சேதப்படாத வயிர உயிர், உடலை எளிதாகவும், உறுதியுடையதாகவும், நேர்மையுடையதாகவும் செய்து காக்கின்ற உயிர்.
அறிவு வேண்டுகிறேன்; எந்தப் பொருளை நோக்குமிடத்தும், அதன் உண்மைகளை உடனே தெளிந்துகொள்ளும் நல்லறிவு; எங்கும், எப்போதும் அச்சமில்லாத வலிய அறிவு.
பிறவுயிருக்குத் தீங்கு தேட மாட்டேன்; என்னுடைய உயிருக்கு எங்கும் தீங்கு வர மாட்டாது.
பராசக்தி, நின்னருளால் நான் விடுதலை பெற்று இவ்வுலகத்தில் வாழ்வேன்!